தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே

பொருளாதாரச் சிக்கல் இன்னும் சில காலம் நீடிக்கும் என்பதால் சிக்கனமாக வாழப் பழகுவது இன்றைய தேவை.

  • லாக் டெளன் ஆறு மாதங்கள் நீடித்தால் உலகம் முழுக்க நடுத்தர வர்க்கம் மற்றும் வறுமைக்கோட்டுக்குக்கீழ் வாழும் 4.7 கோடி பெண்கள் கருத்தடைச் சாதனங்களின் உதவியை நாட வாய்ப்பில்லை.

  • 3.1 கோடி பாலியல் வன்முறை வழக்குகள் பதிவாகும் அபாயம் உள்ளது.

  • 70 லட்சம் பெண்கள் அவசியமற்ற பிள்ளைப்பேற்றுக்குள் தள்ளப்படுவார்கள்.

  • பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக இனிவரும் 10 ஆண்டுகளில் 1.3 கோடி குழந்தைத் திருமணங்கள் நடைபெறக்கூடும்.

அதிர்ச்சியளிக்கும் இந்தப் புள்ளிவிவரங்கள் அனைத்தும் அண்மையில் வெளியாகியுள்ள ஐ.நா மக்கள்தொகை நிதியத்தின் ஆய்வு முடிவுகளே. ஆம்... கொரோனாவின் இன்னொரு விளைவு இது.

சீனாவில் கொரோனா காலத்தில் விவாகரத்து வழக்குகள் பல மடங்காகப் பெருகியதை இதற்கு உதாரணமாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தொடர்ந்து வீடுகளுக்குள் முடங்கிக்கிடப்பது, மூளையைச் சுறுசுறுப்பாக வைக்க வழியின்றி இருப்பது போன்ற காரணங்களால் இந்தியாவிலும் - குறிப்பாக தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகிவருவதைக் காண்கிறோம். இவற்றை எப்படிச் சமாளிப்பது?

பொருளாதார நிச்சயமற்ற தன்மை நம் அனைவரையும் சூழ்ந்துள்ள இந்த நேரத்தில் குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போடுவது நல்லது என்றே மருத்துவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். நாம் உலகுக்குள் கொண்டுவரும் குழந்தை தேவையற்ற சிக்கலுக்கு ஆளாக நேரிடாத வண்ணம் காப்பது நம் கடமைதானே?

பொருளாதாரச் சிக்கல் இன்னும் சில காலம் நீடிக்கும் என்பதால் சிக்கனமாக வாழப் பழகுவது இன்றைய தேவை. ஒட்டுமொத்த குடும்பத்தையும் இப்படி மினிமிலிச வாழ்வுக்குப் பழக்க வேண்டும்.

அதே நேரத்தில்... வீடு என்னும் அமைப்பைக் குறுகியதாகக் கருதாமல், உலகெங்கும் உள்ள உறவினர், நண்பர்களுடன் தொடர்ந்து உரையாடலில் இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும். வாட்ஸ்அப் குழுவோ, ஃபேஸ்புக் குழுவோ, சமையல் குழுவோ, பழைய பாடல்கள் குழுவோ... நம் மனதுக்கு உகந்ததாக இருக்கும் எதிலும் இணைந்து செயல்படலாம். நேரமின்மை காரணமாக தொடராமல்விட்ட தையல் வேலை, தோட்ட வேலை, பாட்டு, சமையல், நடனம், மேற்படிப்பு என்று வீடுகளுக்குள் அமர்ந்தே புதிய உலகைக் காணலாம்.

வாழ்க்கை இலகுவாக இருக்கிறபோது சாதிப்பதைவிட, சிக்கலான காலகட்டத்தில் நாம் எவ்வளவு உறுதியாக இருக்கிறோம் என்று நம்மை நாமே அளவிட்டுக்கொள்ள வேண்டும். பிறருக்காக இல்லை எனினும், நமக்காக நம்மை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். இதற்கு உதவும் வகையில், கூடியவரை வீட்டிலும் வெளியிலும் சமூக வலைதளங்களிலும் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கலாம்.

நாம் என்பது தனிநபர் அல்லர்; குடும்பம், சமூகம் என்பதை நினைவில்கொள்வோம். அறிவாயுதம் கொண்டு கொரோனா காலத்தைக் கடப்போம்.

நமக்குள்ளே...
நமக்குள்ளே...