
தலையங்கம்
வகுப்பறை, வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே போதிக்கும் இடமல்ல; எப்படி வாழ வேண்டும் என்று அறவியல் மதிப்பீடுகளைக் கற்றுத்தரும் இடமும்கூட. ஆனால் வகுப்பறையில் ஆசிரியரைத் தகாத வார்த்தைகளால் திட்டியபடி தாக்கச் செல்லும் மாணவன், ஆசிரியர் பாடம் நடத்தும்போதே வகுப்பறையில் நடனமாடும் மாணவர்கள், வகுப்பறையிலேயே மதுவருந்தும் மாணவர்கள் என்று வெளியாகும் வீடியோக்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன.
கடந்த தலைமுறைக்குக் கிடைக்காத பல வாய்ப்புகளை இந்தத் தலைமுறை பெற்றிருக்கிறது. சமூக ஊடகங்கள் நல்லதும் கெட்டதுமாக அவர்களுக்கு நிறைய கற்றுத்தருகின்றன. அவற்றில் எவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டல்கள் இல்லாதது இந்த அவலங்களுக்கு மிக முக்கியமான காரணம். ஆசிரியர்கள் மாணவர்களை அடிப்பதைக் குற்றமாகக் கருதக்கூடிய சூழல் வந்தது ஆரோக்கியமானது என்றாலும், அது மாணவர்கள் தவறிழைப்பதற்கான வாய்ப்பாக மாறிவிடக்கூடாது என்பதையும் நாம் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
மேலும், கொரோனா காலகட்டம் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கியிருக்கிறது. கொரோனாவால் ஒன்றரை ஆண்டுகள் வகுப்பறைச் சூழலிலிருந்து மாணவர்கள் விலகியிருந்தார்கள். மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டபோது, உடனடியாகப் பாடங்களைத் தொடங்காமல் கலை இலக்கியப் போட்டிகள், விளையாட்டுகள் என மாணவர்களின் அழுத்தத்தைப் போக்கி உற்சாகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியது. ஆனால் அப்படியான செயல்பாடுகள் பெரும்பாலான பள்ளிகளில் நடக்கவில்லை. பள்ளிக்கல்வித்துறை அதைக் கண்காணிக்கவும் இல்லை. செப்டம்பரில் பள்ளியைத் திறந்துவிட்டு பிப்ரவரியில் மாதிரித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் ஆசிரியர்கள் வேகவேகமாகப் பாடங்களில் கவனம் செலுத்த, அது மாணவர்களை மேலும் அழுத்தத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
கற்றல் செயல்பாடு ஒருவழிப்பாதையாக இல்லாமல், உரையாடுவது, கேள்வி எழுப்புவது, உற்சாகப்படுத்துவதென ஒற்றிணைந்து செயல்பட்டால்தான் மாணவர்களைத் தக்க வைக்க முடியும். மேலும், மாணவர்களிடம் ஆரோக்கியமான மனநிலையை வளர்க்கும் நீதிபோதனை வகுப்புகள், உடல் ஆரோக்கியத்தை உறுதிசெய்யும் விளையாட்டுகள் ஆகியவற்றுக்குக் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்.
இது ஆசிரியர்களாலும் அரசாலும் மட்டுமே சரிசெய்துவிடும் பிரச்னையல்ல; பெற்றோருக்கும் இதில் மிகுந்த பொறுப்பு இருக்கிறது. தங்கள் குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசி, கல்வி மற்றும் ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்த வேண்டும். நம் கல்விக்கட்டமைப்பின் அடிப்படையே மக்கள் பங்களிப்புதான். ஆனால், பள்ளிக்கும் மக்களுக்கும் தொடர்பில்லாத சூழல் உருவாகிவிட்டது. பல ஆண்டுகளாக இருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழகம், சமீபத்தில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக் குழு போன்ற அமைப்புகள் பெயரளவில் இல்லாது ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டிய நேரமிது.
நம் மாணவர்களை வழிநடத்த வேண்டிய கடமை நம் எல்லோருக்குமே இருக்கிறது. அவர்கள்தாம் நம் நாளைய தலைமுறை. அவர்களை நாம் எப்படி உருவாக்குகிறோமோ அப்படித்தான் நம் தேசத்தின் எதிர்காலமும் அமையும்.