சினிமா
தொடர்கள்
Published:Updated:

சாலைகள் கொலைக்களம் அல்ல!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

கீர்த்தனா அது தன் கடைசிப் பயணம் என்று அறிந்திருக்க வாய்ப்பில்லை. சென்னைக் கொளத்தூரைச் சேர்ந்த கீர்த்தனா ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். தந்தை மணிவண்ணனின் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து அவர் பணிக்குச் சென்றார். பின்னால் தாறுமாறான வேகத்தில் வந்த லாரியின் டிரைவர், தன் வாகனத்துக்கு வழிவிடுமாறு தொடர்ச்சியாக ஹாரன் அடித்திருக்கிறார். இந்த ஹாரன் ஓசையில் பதற்றமடைந்த மணிவண்ணன் பிரேக் அடிக்க, நிலைதடுமாறிச் சரிந்தது அவர் வாகனம். இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். ஹாரன் அடித்து அவர்களைத் தடுமாற்றம் அடையச் செய்த லாரி மோதி கீர்த்தனா அந்த இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். விபத்திலிருந்து அவர் தந்தை உயிர் பிழைத்துவிட்டாலும், அவரை இந்த விபத்து நடைப்பிணமாக மாற்றிவிட்டது.

சாலை விபத்துகள் பற்றிய பல செய்திகள் நமக்குள் ஏற்படுத்தும் தாக்கத்திலிருந்து வெளியே வர பல மணி நேரமாவதுண்டு. காரணம், அவை மனித உயிர்கள் தொடர்பானவை. ஒரு சின்ன அலட்சியமும் விதிமீறலும், சம்பந்தமே இல்லாமல் யாரோ ஒருவரின் கனவுகளை நிரந்தரமாகப் பறித்துவிடுகிறது.

வாகன ஓட்டிகள் காது கிழியும் அளவுக்குப் பின்னால் வந்து ஹாரன் அடித்து எரிச்சல் அடையச் செய்த சம்பவங்கள் நம் வாழ்க்கையிலும் தினம் தினம் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் போக்குவரத்து விதிகளைக் கடுமையாக்கி, மீறுபவர்களுக்கு அபராதத் தொகையையும் தமிழக அரசு பல மடங்காக உயர்த்தியிருக்கிறது.

அதில் தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது, தடை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் அடிப்பது போன்ற குற்றங்களுக்கு இனி ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். இதே தவற்றை மறுபடியும் செய்தால் அதற்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதம். அது மட்டுமல்ல, ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு ஒதுங்கி வழிவிடாமல் செல்வது, மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்குப் புறம்பாக புகையைக் கக்கியபடி வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, போன் பார்த்தபடியே வாகனம் ஓட்டுவது, ராங் சைடில் ஓட்டுவது, பைக்ரேஸ் செய்வது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அல்லது அப்படிப்பட்டவர் ஓட்டுகிற வாகனத்தில் பயணிப்பது... எல்லாவற்றுக்குமே கடுமையான அபராதம் விதிக்கப்படும். அடுத்த முறை இதே குற்றங்களைச் செய்தால் அபராதம் பல மடங்காகும்.

தலையங்கம்
தலையங்கம்

இது வரவேற்கத்தக்க விஷயம் என்றாலும், வெறுமனே சட்டம் போடுவது மட்டுமே தீர்வாகிவிடாது. இதை அமல்படுத்துவதிலும் இதேபோல வேகம் காட்ட வேண்டும். உலகத்திலேயே சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் நாடு என்பது, நமக்கு மிகப்பெரிய அவமானம். நம் நாட்டில் சாலை விபத்தில் இத்தனை பேர் சாகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் அவர்களது விதியல்ல! சாலை விதிகளை மதிக்காததே காரணம். மத்திய அரசின் மோட்டார் வாகனத் திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கை வெற்றிபெறுவதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் பொறுப்பும் நிறைய இருக்கிறது.