
தலையங்கம்
தீபாவளிக் கொண்டாட்டத்தருணங்கள் தொடங்கிவிட்டன. புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் என தீபாவளியை நினைக்கும்போதே அனைவருக்கும் உற்சாகம் பிறந்துவிடுகிறது. உறவினர்களும் நண்பர்களும் கூடி மகிழ்ந்து கொண்டாடி, தங்கள் அன்பையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்ளும் பண்பாட்டுத் திருவிழாவாக அமைந்திருக்கிறது தீபாவளி.
அதிலும் பலமாதங்கள் பொதுமுடக்கத்தால் முடங்கிப்போன பொதுமக்கள் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ள இந்தத் தீபாவளி உதவும். பொருளாதாரத் தேக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வியாபாரிகளுக்கும் இந்தத் தீபாவளி உற்சாகத்தை அளிக்கும். நான்கு திசைகளிலும் நம்பிக்கைத் தீபங்களை ஏற்றி மகிழவேண்டிய வேளை இது. அதேநேரத்தில் ஒவ்வோராண்டும் கொண்டாடப்படும் தீபாவளிகளிலிருந்து இந்த ஆண்டு மாறுபட்ட தீபாவளியை எதிர்நோக்குகிறோம்.
2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கொரோனாத் தொற்று என்னும் நரகாசுரன் உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிறான். எத்தனையோ நெருக்கடிகளையும் இழப்புகளையும் இத்தனை மாதங்களாகச் சந்தித்துக் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறோம். கொரோனாத் தடுப்பூசிப் பரிசோதனை முயற்சிகள் உலகெங்கும் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எப்படியும் அடுத்த ஆண்டில் கொரோனாத் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை நாம் எப்போதும் கடைப்பிடிக்கும் எச்சரிக்கைமுறைகளை இப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்.
ஷாப்பிங் இல்லாமல் தீபாவளியா? புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் வாங்க ஷாப்பிங் செல்வது தவிர்க்க முடியாதது. அதேநேரத்தில் இன்னமும் கொரோனா முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கவில்லை என்ற கவனத்துடன் நாம் ஒவ்வோர் அடியையும் எடுத்துவைக்க வேண்டும். கூட்டத்தைத் தவிர்த்துவிட்டு ஷாப்பிங் செய்வதற்குத் திட்டமிடுங்கள். கூட்டம் கூடுமிடங்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். முகக்கவசம் எப்போதும் உங்களுடனிருக்கட்டும்.
எப்போதும் `பாதுகாப்பாகப் பட்டாசு வெடியுங்கள்' என்று சொல்வது வழக்கம். ஆனால் இப்போது தீபாவளியையே பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டிய நேரம் இது. சமூக இடைவெளியும் முகக்கவசமும் சானிட்டைசரும் இப்போதைக்கு நமக்கான நோய்த்தடுப்பு ஆயுதங்கள். கொரோனா என்னும் நரகாசுரனை ஒழித்து உலகமே விரைவில் மகிழ்ச்சித் தீபாவளி கொண்டாடும். அதற்கான முன்னோட்டமாக இந்தப் பாதுகாப்பு தீபாவளி அமையட்டும்.
உங்கள் கொண்டாட்டத்துக்கு மேலும் தித்திப்பு சேர்க்கும்படி இந்த இதழ் ஆனந்தவிகடன் பல புதிய தொடர்களையும் புதிய மாற்றங்களையும் தாங்கி வெளிவருகிறது. வாசகர்களாகிய நீங்கள் பங்கேற்பதற்கான பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. திட்டமிட்ட எச்சரிக்கை முறைகளுடன் தித்திக்கட்டும் தீபாவளி. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!