
தலையங்கம்
2015க்குப் பிறகு சென்னை மீண்டுமொரு பெருமழையைச் சந்தித்திருக்கிறது. கோவை மாநகரும் கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளும் இதேபோன்ற சூழலைச் சந்தித்தன. நகரங்களும் குடியிருப்புப் பகுதிகளும் மழைக்காலங்களில் வாழ முடியாத பகுதியாகிவிடும் அவலம் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை தொடர்கிறது.
கிராமப்புறத் தொழில்களின் நசிவு, வாழ்வாதாரச் சிக்கல் காரணமாக, தமிழகம் மட்டுமன்றி வட மாநிலங்களிலிருந்தும் வந்து குவியும் மக்களால் சென்னை விரிவடைந்துகொண்டே செல்கிறது. திட்டமிட்ட, வரையறுக்கப்பட்ட கட்டமைப்புகளோடு குடியிருப்புப் பகுதிகள் உருவாக்கப்படாததால் சிறு மழைக்கே சென்னை தீவாகிவிடுகிறது. அண்மைக்காலமாக மேக வெடிப்பு போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள் அதிகரித்து, சில மணி நேரத்திலேயே அதிக அளவு மழைப்பொழிவு ஏற்படுகிறது. இந்தச் சூழலை எதிர்கொள்ள தமிழக அரசு எந்த அளவுக்கு ஆயத்தமாக இருக்கிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
2015 காலகட்டத்தைப் போல இல்லாமல், நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் தற்போதைய அரசு தீவிரம் காட்டியது பாராட்டத்தக்கது. மழை பெய்துகொண்டிருக்கும்போதே முதல்வர் களத்துக்கு வந்ததால் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. எனினும், பிரதான சாலைகளில் நிலை மாறினாலும் உட்புறத் தெருக்கள், பல புறநகர்க் குடியிருப்புப் பகுதிகள் ஒரு வாரத்துக்கும் மேலாக தண்ணீரில் மிதக்கவே செய்கின்றன. மழைநீர் வடிகாலுக்காக அமைக்கப்பட்ட அத்தனை கட்டமைப்புகளும் விழலுக்கு இறைத்த நீராகிப்போனதையே இந்த மழை நமக்கு உணர்த்தியிருக்கிறது.
2015 வெள்ளத்துக்குப் பிறகு, மழைநீர் வடிகாலுக்கு என ரூ. 4,000 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளது. நகரத்துக்குள் சுமார் 800 கிலோ மீட்டருக்கு மேல் மழைநீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ‘இவற்றில் பெரும்பாலானவை எந்த நீர்நிலையுடனும் இணைக்கப்படவில்லை, நீரோடும் வாட்டத்தோடு அமைக்கப்படவில்லை’ என்று நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதில் பெருமளவு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் பல்வேறு சமூக நல அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுகுறித்து அரசு தீவிரமாக விசாரிக்க வேண்டும். வடிகால் கால்வாய் மற்றும் மேடான பகுதிகள், பள்ளமான பகுதிகள் குறித்த வரைபடத்தை சென்னை மாநகராட்சி உடனடியாக வெளியிட வேண்டும்.

வெள்ள நாள்களில் ஆக்கிரமிப்புகள் பற்றிப் பேசுவதும் பின்னர் மறந்துவிடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. 2015 வெள்ளத்துக்குப் பிறகு பிரதான நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. படிப்படியாக அந்தப் பணிகள் கைவிடப்பட்டுவிட்டன. இப்போதாவது ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும்.இயற்கை நமக்கு வாரி வழங்கும் மழைநீரை வீணாக்கிவிட்டு அடுத்த சில மாதங்களிலேயே குடிநீருக்கு அல்லாடுகிறோம். இந்தப் பேரவலம் மாறவேண்டும்.
பேரிடர்கள் வந்தபிறகு செயலாற்றுவதைவிட வருமுன்னர் சரிசெய்வதே நல்லரசின் அடையாளம். சென்னை மட்டுமல்லாது தமிழகம் முழுவதுமே மழைநீர் வடிகால் கால்வாய்களை முறைப்படி செப்பனிட்டு, சமரசமில்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி, இனியொரு முறை தமிழகம் தண்ணீரில் தத்தளிக்காதபடி நிரந்தரத் தீர்வை அரசு உருவாக்க வேண்டும். அதுதான் மக்களின் எதிர்பார்ப்பு.