
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
“ஜீரோ பட்ஜெட் விவசாய முறையைப் பின்பற்ற ஊக்குவிக்க இருக்கிறோம்”
-இப்படி 2019-20 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்யும்போது அறிவித்தார். இரண்டாம் முறை தேர்தலில் வென்ற பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்பு இது. சிறப்பான அறிவிப்பு, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்கும் அறிவிப்பு என்றெல்லாம் இதுபற்றி சிலாகித்துப் பேசப்பட்டது. ஆண்டுகள் உருண்டதுதான் மிச்சம். மத்திய அரசு தரப்பில், ஜீரோ பட்ஜெட் விவசாய முறைக்கு என்ன செய்தார்கள் என்று இன்னும் ஒரு அறிவிப்புகூட வெளியாகவில்லை. வெற்றிபெற்ற ஜோரில் அறிவிப்புகளை அள்ளி வழங்கிய மத்திய அரசு மருந்துக்கும்கூட, ஜீரோ பட்ஜெட் திட்டத்தைத் தொட்டுப் பார்க்கவில்லை.
ஆந்திர மாநிலத்தின் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று, ‘ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான் விவசாயிகளுக்கு நல்வாழ்க்கையை வழங்கும்’ என்று முழங்கிவிட்டு வந்தார். அது வெற்று முழக்கமாக இல்லாமல், ஆந்திராவில் ஜீரோ பட்ஜெட் விவசாயத்தை வேகமாகப் பரப்ப பல திட்டங்களைச் செயல்படுத்தினார். சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றால், ‘உலகையே ஆந்திரா பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பேன்’ என்றும் சூளுரைத்தார். ஆனால், தேர்தலில் தோல்வி அடைந்த சந்திரபாபுவின் கனவு பலிக்கவில்லை. அங்கு நடந்தவற்றை உற்றுக்கவனித்த மத்திய அரசு, ‘ஜீரோ பட்ஜெட்’ சாதனையைத் தனதாக்கிக்கொள்ள முந்திக்கொண்டு அறிவிப்பை வெளியிட்டது என்பதுதான் வரலாறு. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கரின் வாழ்நாள் முயற்சியால் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுதான் இந்த ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாய முறை. உள்ளங்கை நெல்லிக்கனிப்போல அதன் பலன் கண்கூடாகத் தெரிகிறது. எனவே, அறிவித்தபடி ஜீரோ பட்ஜெட் விவசாய முறையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்குங்கள்... இதுவே நல்ல மாற்றத்துக்கான விதையாக அமையட்டும்.
-ஆசிரியர்