சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

அறுபட்டது நீதிதேவதையின் நாக்கும்தான்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸில் 19 வயதுப்பெண் மிகக்கொடூரமாகப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் ஒவ்வொரு நிலையிலும் காவல்துறையும் அதிகார வர்க்கமும் நடந்துகொண்ட விதம் மிகமிக அவமானகரமானது.

செப்டம்பர் 14, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு நாக்கு அறுபட்டு, குற்றுயிரும் குலையுயிருமாய்க் கிடந்த பெண்ணைத் தூக்கிக்கொண்டு அந்தப் பெண்ணின் தாய் காவல்நிலையம் வந்தபோது, முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய மறுத்ததோடு, அவமானப்படுத்தியும் அனுப்பியுள்ளனர் காவல்துறையினர். உள்ளூர் மருத்துவமனையில் வசதியில்லை என்பதால் மறுநாள் அலிகாரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அந்தப் பெண் சேர்க்கப்பட்டார்.

சம்பவம் நடந்த ஒரு வாரத்துக்குப்பிறகு செப்டம்பர் 21, 22 ஆகிய இருநாள்கள் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தை வாங்கியது காவல்துறை. தான் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாக அந்தப் பெண் கூறியபோதும், ‘முன்விரோதத் தாக்குதல், கொலை முயற்சி’ ஆகிய குற்றப்பிரிவுகளிலேயே முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த காவல்துறையினர், சந்தீப் என்ற நபரை மட்டும் கைது செய்தனர். பெண்ணின் உடல்நிலை மோசமானதையடுத்து செப்டம்பர் 24-ல் மாஜிஸ்திரேட்டிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் பலாத்காரம் என்ற பிரிவின் கீழும் சந்தீப் மீது வழக்கு பதியப்பட்டதுடன் மேலும் மூன்று நபர்களையும் போலீஸார் அடுத்தடுத்த நாள்களில் கைது செய்தனர்.

அறுபட்டது நீதிதேவதையின் நாக்கும்தான்!

செப்டம்பர் 28-ல் அந்தப் பெண்ணின் நிலை மோசமானதைத் தொடர்ந்து, டெல்லி சப்தார் ஜங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். செப்டம்பர் 29, அதிகாலை மூன்று மணிக்கு உயிரிழந்த பெண்ணின் உடலை ஹத்ராஸுக்குக் கொண்டுவந்த காவல்துறையினர், குடும்பத்தினரின் அனுமதி இல்லாமலேயே அவசர அவசரமாக சடலத்தை எரித்துவிட்டனர். பிணக்கூராய்வு அறிக்கை முறைப்படி வருவதற்கு முன்பே `இறந்த பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை’ என்று காவல்துறை முந்திக்கொண்டு தெரிவித்ததும் சந்தேகங்களை வலுப்படுத்துகிறது. இன்னொருபுறம், வாக்குமூலம் வாங்கிய மாஜிஸ்திரேட்டே, ‘இந்த ஊடகங்கள் நிரந்தரமாக உங்களுடன் இருக்கப்போவதில்லை. எதுவானாலும் நீங்கள் எங்களிடம்தான் வரவேண்டும்’ என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தை மிரட்டியிருக்கிறார்.

குற்ற ஆவணக்காப்பகத்தின் அறிக்கைப்படி, கடந்த 2018-ம் ஆண்டு இந்தியாவில் நிகழ்ந்த, பதிவு செய்யப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,78,277. அதில் உத்தரப்பிரதேசத்தில் நடந்தவை மட்டும் 59,445 குற்றங்கள். இத்தகைய குற்றங்களைத் தடுப்பதில் முனைப்பு காட்டாத உத்தரப்பிரதேச அரசு, கொரோனாவைக் காரணம் காட்டி பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை யாரும் சந்திப்பதைத் தடுப்பதிலேயே தீவிரம் காட்டுகிறது. அரசியல் சக்திகளும் அதிகார வர்க்கமும் அநீதிக்கு ஆதரவாக அணிவகுத்திருப்பதையே இவை காட்டுகின்றன.

பாலியல் வன்முறைக்குப் பலியான பெண் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். ஆணாதிக்கமும் சாதியமும் கைகோத்து நடந்த கொடூரம் இது. இத்தகைய குற்றங்கள் தடுக்கப்படாதவரை ஹத்ராஸ் பெண்ணின் நாக்கு மட்டுமல்ல, நீதிதேவதையின் நாக்கும் அறுக்கப்பட்டது என்றே அர்த்தம்.