கட்டுரைகள்
Published:Updated:

உள்ளாட்சியே ஜனநாயகத்தின் ஆணிவேர்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

ந்திய ஜனநாயகத்தின் ஆட்சி நிர்வாகத்தில் கடைக்கோடி சாமானிய மக்களுக்கும் பங்கு வேண்டும், அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப்படாமல் பரவலாக்கப்பட வேண்டும் என்னும் அடிப்படையில் உருவாக்கப்பட்டவையே உள்ளாட்சி அமைப்புகள். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசின் நடவடிக்கை அமைந்திருந்ததும் அது நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசால், மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, ஊராட்சிகளுக்குப் பிரித்துக்கொடுக்கப்பட வேண்டும். சாலை, குடிநீர் போன்ற பல அத்தியாவசியப்பணிகள் ஊராட்சி மன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால் இதற்கு மாறாக ஊராட்சி மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் தமிழக அரசே தன்னிச்சையாக ஊரக வளர்ச்சி அலுவலர்கள் மூலம் சாலைகள் அமைப்பதற்கான டெண்டர்களை அறிவித்தது. `இது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது' என்று சில ஊராட்சித் தலைவர்கள் இணைந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றமும் தமிழக அரசு தன்னிச்சையாக அறிவித்த 2,650 கோடி ரூபாய் மதிப்புள்ள டெண்டர்களை ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளது. இந்திய ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவருமே வரவேற்க வேண்டிய தீர்ப்பு இது.

உள்ளாட்சியே ஜனநாயகத்தின் ஆணிவேர்!

தமிழகத்தைப் பொறுத்தவரை பல ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு ஏதேதோ காரணங்களைச் சொல்லித் தள்ளிப்போட்டுவந்தது. தாமதமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டபோதும் புதிதாக அமைக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவற்றிலும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. மிகக்குறைவான பகுதிகளிலேயே தேர்தல் நடத்தி அதில் அமைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரங்களையும் தமிழக அரசு பறிக்க நினைப்பது என்ன நியாயம்?

சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், காந்தி ஜயந்தி என்று ஆண்டுக்கு நான்கு நாள்கள் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் முக்கியமான பிரச்னைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு காந்தி ஜயந்தியன்று முதலில் கிராமசபைக் கூட்டம் நடத்தப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, பிறகு அவசர அவசரமாக கொரோனாவைக் காரணம் காட்டி கிராம சபைக்கூட்டங்களை ரத்து செய்தது. இந்தக் காலகட்டத்தில்தான் சட்டசபை நடந்திருக்கிறது; நாடாளுமன்றம் நடந்திருக்கிறது. ஆளுங்கட்சியின் செயற்குழு நடந்திருக்கிறது. அது மட்டுமா, கொரோனா அதிகரிக்கும் என்ற கவலையின்றி டாஸ்மாக் கடைகளைத் திறக்கும் தமிழக அரசு, கிராமசபைக் கூட்டங்களை மட்டும் கொரோனாவைக் காரணம் காட்டி ரத்து செய்வது பொருத்தமாக இல்லையே?

கூட்டாட்சித் தத்துவம் என்பது மத்திய அரசு - மாநில அரசுகள் தொடர்பானது மட்டுமல்ல. உள்ளாட்சி அமைப்புகளை மாநில அரசு நடத்துவதிலும் ஜனநாயகம் பேணப்படுவது முக்கியம். மத்திய அரசு தங்கள் உரிமைகளில் தலையிடுவதாக நினைக்கும்போதெல்லாம் உரிமைக்குரல் எழுப்பும் மாநில அரசுகள் உள்ளாட்சி அமைப்புகளின் உரிமைகளில் தாங்களும் தலையிடாமல் இருக்கவேண்டும். அதுவே முழுமையான ஜனநாயகம்.