
தலையங்கம்
காஷ்மீரில் இந்த மாத ஆரம்பத்திலிருந்து நிகழும் படுகொலைகள் மிகுந்த கவலை அளிப்பவையாக இருக்கின்றன. தீவிரவாதிகளால் எளிய அப்பாவிகள் குறிவைத்து வேட்டையாடப்படுகிறார்கள்.
இந்த மாதத்தில் மட்டும் இப்படி 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அக்டோபர் 17-ம் தேதி பீகாரிலிருந்து சென்ற கூலித்தொழிலாளிகள் இருவரைத் தீவிரவாதிகள் கொன்றனர். இதற்கு முன்பாக பீகாரைச் சேர்ந்த சாலையோர வியாபாரி ஒருவரும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மரத்தச்சர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இப்படிக் கொல்லப்பட்டவர்களில் வெளிமாநில இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். வெளிமாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக வந்தவர்களைக் கொல்வதன் மூலம், மற்றவர்களை அச்சுறுத்தி காஷ்மீரை விட்டு வெளியேற்ற தீவிரவாதிகள் முயல்கின்றனர்.
இன்னொரு பக்கம் இதேபோன்ற தாக்குதல்கள் காஷ்மீரி பண்டிட் மற்றும் சீக்கிய சமூகத்தினர் மீதும் அடுத்தடுத்து நிகழ்கின்றன. காஷ்மீரி பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பிரபல மருந்து வியாபாரி மக்கன் லால் பிந்த்ரூ ஸ்ரீநகரில் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். ஸ்ரீநகரில் ஒரு பள்ளிக்குப் பட்டப்பகலில் சென்ற தீவிரவாதிகள், ஆசிரியர்களின் அடையாள அட்டைகளை வாங்கிப் பரிசோதித்தனர். கடைசியில் பள்ளி முதல்வர் சுபிந்தர் கவுர், ஆசிரியர் தீபக் சந்த் ஆகியோரைக் கொன்றிருக்கிறார்கள். இதனால் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் வசிக்கும் சிறுபான்மை இந்து மற்றும் சீக்கிய சமூகத்தினர் பெரும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். 30 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீரில் தீவிரவாதம் தலைதூக்கியபோது இப்படித்தான் அப்பாவிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். அதனால் காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் வசித்த சிறுபான்மையினர் பலர் குடும்பம் குடும்பமாக வெளியேறினார்கள். அதேபோன்ற அச்சம் இப்போதும் அங்கு பரவியிருக்கிறது.

“பாதுகாப்பாக இருங்கள், தனியாக வெளியில் வராதீர்கள்’’ என்று சிறுபான்மை சமூகத்தினருக்குப் பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்துகிறார்கள். எல்லோரும் தினமுமே பணிக்காக வெளியில் செல்ல வேண்டிய சூழலில் இருக்கும்போது, தீவிரவாதிகளுக்கு பயந்து எத்தனை நாள் வீட்டுக்குள் ஒளிந்திருக்க முடியும்?
துப்பாக்கி தூக்குவதே பெரும் வீரம் என நினைக்கும் தீவிரவாதிகள், இப்படி அப்பாவிகளைக் கொல்வது மோசமான கோழைத்தனம். மத வித்தியாசங்களைத் தாண்டி சமூகத்தில் பல்வேறு தரப்பினருக்கு மத்தியில் நிலவும் நல்லிணக்கத்தை இதுபோன்ற தாக்குதல்கள் குழிதோண்டிப் புதைத்துவிடும். அதற்குத்தான் இவர்கள் ஆசைப்படுகிறார்கள் என்று புரிகிறது. இந்தப் படுகொலைகளை காஷ்மீரின் அனைத்துக் கட்சிகளுமே கண்டித்திருக்கின்றன என்பது ஆறுதல்.
The Resistance Front என்ற புதிய தீவிரவாத அமைப்பே இந்தப் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்றிருக்கிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டபோது தோன்றிய அமைப்பு இது. மற்ற தீவிரவாத அமைப்புகள் போல இதன் செயல்பாடுகள் அதிகம் வெளியில் தெரியவில்லை. இந்த அமைப்பை யார் இயக்குகிறார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.
பன்முகத்தன்மையே இந்தியாவின் பலம். இந்தியாவின் எந்த மூலையிலிருந்தும் எவரும் இன்னொரு பகுதியில் சென்று பாதுகாப்பாக வாழமுடியும், உள்ளூர் சமூகம் அவர்களை அரவணைக்கும் என்ற நிலையே இந்தப் பன்முகத்தன்மையின் பிரதிபலிப்பு. இதைக் குலைக்க நினைக்கும் இதுபோன்ற அமைப்புகளை இந்திய ராணுவமும் காஷ்மீர் போலீஸாரும் வேரறுக்க வேண்டும்.