கட்டுரைகள்
Published:Updated:

இது தொடக்கப்புள்ளிதான்!

மணல்கொள்ளை
பிரீமியம் ஸ்டோரி
News
மணல்கொள்ளை

2003 முதல் தமிழக அரசின் பொதுப்பணித்துறையே மணல் விற்பனையை நடத்திவருகிறது.

‘மணல்கொள்ளை வழக்குகளில் சிக்குவோருக்கு இனி முன்ஜாமீன் வழங்கப்போவதில்லை’ என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருப்பது, அனைவரும் வரவேற்க வேண்டிய உத்தரவு. ஆனால் மணல்கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் இது முதற்படிதான். நாம் அடையவேண்டிய இலக்கு இன்னும் தொலைதூரத்தில் இருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாகவே ஆற்றுமணலைச் சுரண்டி மணல் மாபியாக்கள் இயற்கையின்மீது கடும் தாக்குதலைச் செலுத்திவருகிறார்கள். காவிரி, பாலாறு, தாமிரபரணி என வரலாற்றுச் சிறப்புமிக்க ஆறுகள் தங்கள் வளங்களை இழந்துவருகின்றன.

2003 முதல் தமிழக அரசின் பொதுப்பணித்துறையே மணல் விற்பனையை நடத்திவருகிறது. அதிகபட்சம் நாளொன்றுக்கு 6,000 லாரிகளில் 200 கன அடிக்கு மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்று விதி இருந்தும் தொடக்ககாலத்திலேயே விதிமுறையை மீறி 55,000 லாரிகளில் 400 கன அடிக்கு மேல் மணல் அள்ளப்பட்டது. இன்று தமிழகத்தில் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு லட்சம் லாரிகளில் மணல் அள்ளப்படுவதாக, மணல் கடத்தலுக்கு எதிரான சமூகச் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஒரு லாரியில் 3 யூனிட் மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்ற விதியை மீறி, பெரிய டிம்பர் லாரிகளில் 30-40 யூனிட் மணல் அள்ளிச்செல்லும் கொடுமை நடக்கிறது.

மூன்று அடிக்கு மேல் மணல் அள்ளக்கூடாது என்று விதி இருந்தும் பல இடங்களில் 50 அடிக்கு மேல் சர்வ சாதாரணமாக மணல் அள்ளுகிறார்கள். இயந்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது; ஆற்றினுள் எந்தெந்தப் பகுதியில் மணலை அள்ளுவதற்கு அனுமதி தரப்பட்டுள்ளது என்பதைக் கான்கிரீட் தூண்களும் கொடிக்கம்பங்களும் நட்டுப் பிரித்துக் காட்ட வேண்டும்; மணலை அள்ளும்பொழுது ஆற்றின் இருபுறமும் உள்ள கரைகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றெல்லாம் பல விதிமுறைகள் இருந்தாலும் எல்லா விதிகளும் மீறப்படுகின்றன. இந்த மணல்கொள்ளையர்களுடன் உள்ளூர் அரசியல்வாதிகள் முதல் அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவரும் கைகோத்திருப்பதால் மணல்கொள்ளை ‘களைகட்டுகிறது.’

இந்த மணல்கொள்ளையைத் தடுக்கும் நேர்மையான அதிகாரிகளைக் கொலை செய்யவும் மணல் மாபியாக்கள் தயங்குவதில்லை. பாலாற்றுப் பகுதியில் மட்டும் இதுவரை 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மணல் மாபியா பாதகர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள் என்றால், தமிழகம் முழுவதும் எத்தனைபேர் கொல்லப்பட்டிருப்பார்கள்?

மணல்கொள்ளை வழக்குகளில் நீதிமன்றம் அபராதம் விதித்தால் அதைக் கட்டிவிட்டு மீண்டும் மணல்கொள்ளையில் ஈடுபடுவதும் முன்ஜாமீன் வாங்கிவைத்துக்கொண்டு வழக்குகளில் தப்புவதும் சர்வசாதாரணமாக நடப்பதால்தான் ‘இனி முன்ஜாமீனே கிடையாது’ என்னும் முடிவுக்கு நீதிமன்றம் வந்திருக்கிறது.

இது தொடக்கப்புள்ளிதான். மணல்கொள்ளையர்களைத் தண்டிக்கும் கடுமையான சட்டங்களைக் கொண்டுவருவதும் இந்த மணல்கொள்ளைக்குத் துணைபோகும் அரசியல்வாதிகள், அதிகாரிகள்மீது பாரபட்சமற்ற நடவடிக்கை எடுப்பதுமே இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.