கட்டுரைகள்
Published:Updated:

விதைப்பது விவசாயிகள்; அறுப்பது யார்?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

விவசாயம் தொடர்பாக மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று மசோதாக்களுக்கு நாடெங்கும் விவசாயிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறார்கள்.

மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் இருக்கிறது என்ற ஒரே காரணத்தால் எதிர்க்கருத்துகளுக்கு இடமே தராமல், கொரோனா காலத்தில் அவசர அவசரமாக இந்த மசோதாக்களை நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன? ஒருபுறம் இது ஜனநாயக விரோதம் என்றால் இன்னொருபுறம் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது. விவசாயம் என்பது மாநில அரசுப் பட்டியலில் உள்ள துறை. ஆனால் எந்த மாநில அரசையும் கலந்தாலோசிக்காமல் இந்த மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. ஏற்கெனவே மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை வழங்குவதில் கூட்டாட்சித் தத்துவத்தை மீறிய மத்திய அரசு, இப்போது இந்த மசோதா விவகாரத்தில் மீண்டும் மீறியுள்ளது.

`விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானாலும் விளைபொருள்களை இருப்பு வைக்கலாம். ஏற்றுமதியும் செய்யலாம்’ என்று இந்த மசோதா சொல்கிறது. ஆனால் 2010-11 வேளாண் கணக்கெடுப்புப்படி, இந்திய விவசாயிகளில் 67.1% பேர் ஒரு ஹெக்டேருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள குறு விவசாயிகள். 17.91% பேர் இரண்டு ஹெக்டேர்கள் வரை நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகள். 80 சதத்துக்கும் மேல் இரண்டு ஹெக்டேருக்குள் மட்டும் நிலம் கொண்ட விவசாயிகளால் விளைபொருள்களைச் சேமித்துவைப்பதற்கான கிடங்குகளை எப்படி அமைக்க முடியும்? ஏற்றுமதிக்கான போக்குவரத்துச் செலவை எப்படிச் செலுத்த முடியும்?

பெரிய நிறுவனங்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்துகொண்டு விவசாயம் செய்ய வழிவகுக்கிறது விவசாய ஒப்பந்தச் சட்ட மசோதா. தமிழகத்தில் ஏற்கெனவே கரும்பு ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி செய்யப்படுகிறது. ஆலைகளின் வாக்குறுதிகளை நம்பி சாகுபடி செய்துவிட்டு, பணம் வாங்கக் கால்கடுக்க விவசாயிகள் அலைந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த மசோதா அதற்கு என்ன தீர்வு வைத்திருக்கிறது?

விதைப்பது விவசாயிகள்; அறுப்பது யார்?

‘விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-க்குள் இரட்டிப்பாக்குவேன்’ என்று வாக்குறுதி அளித்த மோடி அரசால் கொண்டுவரப்படும் இந்த மசோதாக்களால் விவசாயிகளின் வருமானம் பெருகாது. மாறாக கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெருவியாபாரிகளின் வருமானம்தான் பெருகும்.

உண்மையில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டுமென்றால், மத்திய அரசால் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் தந்திருக்கும் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அதில் மிகமிக முக்கியமான பரிந்துரை, ‘விளைபொருளுக்கு அதன் உற்பத்திச் செலவுடன், அந்தச் செலவில் குறைந்தபட்சம் 50 சதவிகிதத் தொகையையும் சேர்த்து விலையாகக் கிடைப்பதை உறுதிப்படுத்தவேண்டும்’ என்பதுதான்.

15 ஆண்டுகளுக்கும் மேலாக தூங்கிக்கொண்டிருக்கும் இந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பகடைக்காயாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபடுவது நல்லதல்ல.