
சென்ற முறை திரையரங்குகள் திறக்கப்பட்டபோது 50% பார்வையாளர்கள் அனுமதி என்ற விதிமுறையைச் சில திரையரங்குகள் மீறியதையும் கண்டோம்.
கொரோனாத் தொற்றின் காரணமாகப் பல மாதங்கள் மூடிக்கிடந்த பள்ளிகளும் கல்லூரிகளும், திரையரங்குகள் போன்ற நிறுவனங்களும் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ‘பொது முடக்கம் நிரந்தரத் தீர்வு கிடையாது' என்பதைக் கடந்த கால அனுபவங்கள் உணர்த்துகின்றன. கடந்த 18 மாதங்களாகக் கல்விக்கூடங்களில் குழப்பமும் நிச்சயமற்ற தன்மையுமே நிலவின. எனவே கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுவது வரவேற்கத்தக்க விஷயம்.
அதேநேரம், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதே தவிர, முற்றிலுமாக கொரோனா நம்மைவிட்டு அகன்றுவிடவில்லை. இரண்டு தவணை தடுப்பூசி போட்டபிறகும்கூட கொரோனாத் தொற்று வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனினும், தடுப்பூசிகள் இறப்பு அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. முன்பைவிட தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது என்றாலும், இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 10 சதவிகிதத்தை மட்டுமே தாண்டியுள்ளது. 18 வயதுக்குக் கீழே இருப்பவர்களுக்கு இன்னமும் தடுப்பூசி கிடைக்கவில்லை. இவற்றையெல்லாம் கவனத்தில்கொண்டே இந்தத் திறப்பு நடவடிக்கைகளை அணுகவேண்டும்.
`பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்கவேண்டும்' என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருக்கிறது. அதேபோல் ஜிம் பயிற்சியாளர் முதல் திரையரங்கு ஊழியர்கள் வரை எல்லோரும் தடுப்பூசி போட்டிருப்பது அவசியம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இது முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
தனியார் பள்ளி மாணவர்கள் இரண்டாண்டுகளாக ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்கின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப்பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்துள்ளது. என்றாலும், அரசுப்பள்ளி மாணவர்கள் முற்றிலுமாகக் கல்வித்தொடர்பே இல்லாமல் இருக்கின்றனர். ‘பெரும்பாலான ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கு மொழி மற்றும் அடிப்படைக் கணிதம் போன்றவை மறந்துவிட்டன' என்ற அதிர்ச்சி தரும் உண்மையை அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இதைச் சரிசெய்யும் விதத்தில் ‘கற்பித்தல் வாசிப்பு இயக்கம்' நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதும் பாடத்திட்டத்தைக் குறைத்திருப்பதும் வரவேற்கத்தக்கது. பெரியவர்களே கொரோனாத் தடுப்பு விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்காதபோது, பள்ளிக்குழந்தைகளைக் கடைப்பிடிக்க வைப்பது கொஞ்சம் கடினமான காரியம்தான் என்றாலும், ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகங்களும் தீவிரமாக இதைப் பின்பற்ற வேண்டும்.
சென்ற முறை திரையரங்குகள் திறக்கப்பட்டபோது 50% பார்வையாளர்கள் அனுமதி என்ற விதிமுறையைச் சில திரையரங்குகள் மீறியதையும் கண்டோம். இனி விதிமுறைகளை மீறும் எந்த நிறுவனமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரசு மற்றும் மருத்துவர்கள் கொரோனாத் தடுப்புப் பணியில் அக்கறையுடன் இருந்தால் போதாது. பொதுமக்களாகிய நாமும் பின்பற்ற வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் நம் குழந்தைகள் அவற்றைக் கடைப்பிடிக்கிறார்களா என்பதையும் கண்காணிக்க வேண்டும். கொரோனாவை முழுமையாக இந்தச் சமூகத்திலிருந்து விரட்டும்வரை, இந்த எச்சரிக்கை நமக்கு அவசியம்.