
தலையங்கம்
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான சைரஸ் மிஸ்த்ரியின் மரணம், `காரின் பின்னிருக்கையில் பயணிப்பவர்களும் சீட் பெல்ட் அணிவது அவசியம்' என்பதை நெற்றிப்பொட்டில் அடித்ததைத்போலப் புரியவைத்திருக்கிறது. காரின் பின்சீட்டில் அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணிவதைக் கட்டாயமாக்கும் சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருக்கிறார். அந்த அளவுக்கு சைரஸ் மிஸ்த்ரியின் சாலை விபத்து, நாடு முழுவதும் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
சாலைப் பாதுகாப்பு பற்றிய விவாதத்தையும் விழிப்புணர்வையும் இதே வேகத்தில் தொடர வேண்டியது அவசியம். காரணம், உலகிலேயே சாலை விபத்தில் மரணிப்பவர்கள் நம் நாட்டில்தான் அதிகம். அதைவிட அதிர்ச்சியான உண்மை, சாலை விபத்தில் படுகாயம் அடைபவர்கள் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே சென்று சொல்ல வேண்டும் என்றால், நாட்டில் இருக்கும் மற்ற எந்தப் பெருநகரங்களைவிடவும், சென்னையின் சாலைகள்தான் உயிர்களைக் காவு வாங்குவதில் முதலிடத்தில் இருக்கின்றன. ஆம், தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் கணக்குப்படி 2021-ல் சென்னையின் சாலைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 998.
நாம் அஞ்சி நடுங்கும் உயிர்க்கொல்லி நோய்களைவிடவும், சாலை விபத்துகளே பலரின் உயிரைப் பறிக்கிறது. என்றாலும், நோய்களுக்கு எதிராக நாம் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அளவுக்கு, சாலை விபத்துகளைத் தடுக்க முனைப்பு காட்டுவதில்லை.
விபத்துகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், வாகனங்கள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். சட்டத்தை மீறுகிறவர்கள்மீது கண்டிப்பான நடவடிக்கை எடுக்க சரியான சட்டங்கள் வேண்டும். இதுதொடர்பான பல நடவடிக்கைகளில் இப்போது மத்திய அரசு மும்முரம் காட்டிவருகிறது. அடுத்து சாலைகள் குண்டும் குழியுமாக இல்லாமல் தரமானதாகவும், இரவு நேரங்களிலும் போதுமான வெளிச்சத்துடனும் இருக்க வேண்டும். போக்குவரத்தைச் சீராக்கப் போதுமான அளவுக்குக் காவலர்கள் இருக்க வேண்டும். இந்த எல்லாவற்றிலும் கவனம் செலுத்தினால்தான், விலைமதிப்பில்லாத மனித உயிர்களின் இழப்பைத் தடுக்க முடியும்.
அந்த வகையில் தமிழ்நாடு அரசின் சாலைப்பாதுகாப்பு ஆணையம் அடிமட்டத்தில் இருந்து வேலைகளைத் தொடங்கியிருப்பது வரவேற்கத்தக்கது. காவல்துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர் உள்ளிட்ட பலரையும் கொண்ட குழுக்கள் மாநிலம் முழுதும் மொத்தம் 4,334 இடங்களை, விபத்துகள் நடக்கும் `ஹாட் ஸ்பாட்ஸ்' என்று அடையாளம் கண்டிருக்கின்றன. இந்த இடங்களில் விபத்துகளைக் குறைக்க அரசு என்ன செய்யப்போகிறது என்று மக்கள் கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதேபோல, ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவது, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டுவது, போதையில் வாகனம் ஓட்டுவது என்பதையெல்லாம் தாண்டி, ராங் சைடில் வண்டி ஓட்டுவது, போக்குவரத்து சிக்னலை மீறுவது, சாலையையும் நடைபாதையும் மறித்துக்கொண்டு வாகனங்களை நிறுத்துவது என மொத்தம் பத்து வகையான விதிமீறல்கள்மீதும் போக்குவரத்துக் காவலர்களின் கவனம் குவிய இருக்கிறது.
மக்களை அரசும், அரசை மக்களும் கூர்ந்து கவனித்தால் சாலை விபத்துகளைத் தவிர்க்கலாம்.