
தலையங்கம்
‘இத்தனை காலம் இந்த நாற்காலியில் இருந்தது போதும்’ என்று விலகும் துணிச்சல் அரசியல் தலைவர்களுக்கு அரிதாகவே வாய்க்கும். உடல்நலம் சீர்கெட்டு படுத்த படுக்கையான பிறகும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மனமில்லாத தலைவர்களையே பார்த்துப் பழகிய நமக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் எடுத்திருக்கும் முடிவு நிச்சயம் அதிர்ச்சி கொடுக்கும்.
ஐந்தரை ஆண்டுகள் பதவியில் இருந்த அவர், ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். ‘‘எங்கள் முழுசக்தியையும் கொடுத்து உழைக்கிறோம். இப்போது வேலைப்பளு தாங்க முடியவில்லை. அதனால் விலகுகிறேன்’’ என்று காரணம் சொல்லியிருக்கிறார். இப்படிப் பதவியை மறுப்பதற்குப் பெருந்தன்மையும் மன உறுதியும் தேவை.
பிரதமராகப் பதவி ஏற்றபோது, மிக இளம் வயது பெண் தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர் ஜெசிந்தா. பிரதமராக இருக்கும்போதே குழந்தை பெற்று, மூன்று மாதக் கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஐ.நா சபைக்குப் போனவர். கிறிஸ்ட்சர்ச் மசூதி குண்டு வெடிப்பை முதிர்ச்சியுடன் கையாண்டது, பூகம்பப் பேரழிவைச் சமாளித்தது, கொரோனாவைக் கட்டுப்படுத்தியது போன்றவற்றால் சர்வதேசப் புகழடைந்தவர் ஜெசிந்தா. எவ்வளவு மோசமான பிரச்னையையும் பெண்கள் ஒருவிதக் கருணையுடன் எதிர்கொள்வார்கள். அப்படிப்பட்ட கருணை அவரின் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட்டது. அதுதான் அவருக்கு சர்வதேசப் புகழைப் பெற்றுத் தந்தது.
`அவரது கட்சிமீது நியூசிலாந்தில் அதிருப்தி அதிகரித்திருக்கிறது. வரும் அக்டோபரில் நடக்கும் தேர்தலில் தோல்வியடைய நேரிடும் என்பதால் அவர் விலகுகிறார்’ என்றெல்லாம் கூறப்படுகிறது. ஆனாலும், அவர் தனது ராஜினாமா முடிவைக் கண்ணீருடன் அறிவித்தபோது, ‘இனி நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்று தன் வாழ்க்கைத்துணைக்கு ஓர் அறிவிப்பையும் செய்தார். நாட்டின் மிக உயர்ந்த பதவியைத் துறந்துவிட்டு, தன் குடும்பத்துக்கான நேரத்தைச் செலவிடவிருக்கும் உணர்வு அதில் வெளிப்பட்டது. விரைவில் பள்ளிக்குச் செல்லவிருக்கும் மகளை, ஜெசிந்தா அக்கறையுடன் இனி கவனித்து வளர்க்க முடியும்.
இந்த 21-ம் நூற்றாண்டிலும் பல பெண்களுக்குத் தங்கள் பணி வாழ்க்கையா, குடும்ப வாழ்க்கையா என்று முடிவெடுக்கவேண்டிய கட்டாயம் ஏதோ ஒரு தருணத்தில் ஏற்பட்டுவிடுகிறது. ‘அரசியலில் பெண்கள் செல்வாக்கு பெறுவதே அரிதானது. அப்படி அரிதாக இருக்கும் பெண்களால் அந்த அழுத்தத்தைச் சமாளிக்க முடியவில்லையா’ என்ற விவாதத்தை அவரின் விலகல் மீண்டும் எழுப்பியிருக்கிறது.