கட்டுரைகள்
Published:Updated:

ஆன்லைன் சூதாட்டத்துக்கு என்னதான் முடிவு?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு அனுமதி அளிப்பதற்கு, காலம் தாழ்த்திவருகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இது தொடர்பாக அவர் சட்டரீதியாகச் சில கேள்விகளை எழுப்பி விளக்கங்கள் கேட்க, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் ஒரு குழுவினர் சென்று விளக்கம் தந்துள்ளனர்.

இந்நிலையில் ஆளுநர் செய்யும் காலதாமதம் குறித்து அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பிவருகின்றன. இந்தச் சர்ச்சைகள் தொடரும்போதே, ஆட்டோ டிரைவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்துகொண்டிருப்பது, கொதிப்பை அதிகமாக்கியுள்ளது.

இதில் உணர்ச்சிகரமான வாதங்களைத் தவிர்த்துவிட்டு, உண்மைநிலை குறித்து விவாதிப்பதே சரியாக இருக்கும். ‘ரம்மி என்பது அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் ஆடப்படுவதா, திறமையின் அடிப்படையிலான விளையாட்டா’ என்ற கேள்விக்கு ‘ரம்மி திறமையை முதன்மையாகக்கொண்டு ஆடப்படும் விளையாட்டு’ என்று 1968-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறது. தமிழக அரசு அடுத்தடுத்து செய்துவரும் தடை முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருப்பதே இந்தத் தீர்ப்புதான்.

கடந்த 2021-ம் ஆண்டில் தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்தை எதிர்த்து சூதாட்ட நிறுவனங்கள் பலவும் நீதிமன்றத்துக்குப் போயின. அப்போது இந்தத் தீர்ப்பை ஆதாரமாகவைத்தே அவை வாதிட்டன. சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, ‘‘நீங்கள் இப்படி ஒட்டுமொத்தமாகத் தடைசெய்ய முடியாது. முறைப்படுத்துவதை வேண்டுமானால் செய்யுங்கள்’’ என்று அந்தச் சட்டத்தை ரத்து செய்தது. ஏற்கெனவே கர்நாடக அரசு கொண்டுவந்த சட்டமும் இதேபோல நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட வரலாறு இருக்கிறது.

ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்து, முறையாக தடைச் சட்டம் இயற்றுவது குறித்து தமிழக அரசு ஆராய்ந்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 3-ம் தேதி ஓர் அவசரச் சட்டம் இயற்றியது. அக்டோபர் 19-ம் தேதி சட்டமன்றத்தில் மசோதாவும் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.

இதற்கிடையே அக்டோபர் 3-ம் தேதி கொண்டுவந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து சூதாட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்துக்குச் சென்றபோது, ‘அந்த அவசரச் சட்டம் நடைமுறைக்கு வரவே இல்லை’ என்று தமிழக அரசு தெரிவித்தது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தால், ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படலாம். அது நீதிமன்ற விசாரணையைத் தாண்டி நிலைபெறுமா என்பதே ஆளுநரின் கேள்வியாக இருக்கிறது. அதை உறுதிசெய்து, ஆன்லைன் சூதாட்டத்தால் நிகழும் மரணங்களைத் தமிழக அரசு தடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு!