கட்டுரைகள்
Published:Updated:

எல்லைகளுக்காக ஏன் சண்டை?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில்தான் இந்தியா பதற்றத்தை அனுபவிக்கிறது என்றால், நாட்டின் உள்ளேயும் எல்லைப் பிரச்னை பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.

நவம்பர் 22-ம் தேதி அஸ்ஸாம் போலீஸார், மேகாலயா எல்லைக்குள் நுழைந்து துப்பாக்கிச்சூடு நடத்தியதில் மேகாலயாவைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர். அஸ்ஸாம் வனக்காவலர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. ‘‘மரக்கடத்தலைத் தடுக்க முயன்றபோது மேகாலயா மக்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டு தாக்கினர். தற்காப்புக்காகச் சுட நேரிட்டது’’ என விளக்கம் தருகிறது அஸ்ஸாம் போலீஸ்.

மேகாலயா முதல்வர் கோன்ராட் சங்மா, ‘‘அஸ்ஸாம் போலீஸார் எல்லை தாண்டி எங்கள் மாநிலத்தில் நுழைந்து தேவையில்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இது மனிதாபிமானம் இல்லாத செயல்’’ என்று கண்டித்திருக்கிறார். இரண்டு மாநிலங்களுமே இந்தச் சம்பவம் குறித்து தனித்தனியே விசாரணைகள் நடத்துகின்றன.

அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநிலங்களுக்கு இடையிலான 884 கி.மீ நீள எல்லையில் 12 பகுதிகள் குறித்து இரண்டு மாநிலங்களுக்கும் நீண்டகாலமாகச் சச்சரவு நிலவுகிறது.

இதே போன்ற ஒரு சர்ச்சை மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லையிலும் நிகழ்ந்திருக்கிறது. ‘‘மகாராஷ்டிராவின் சாங்லி பகுதியிலுள்ள ஜாட் வட்டத்தின் சில கிராமங்கள் எங்களுக்குச் சொந்தமானவை’’ என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவித்திருக்கிறார். இதை எதிர்க்கும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ‘‘மராத்தி பேசும் மக்கள் வாழும் கர்நாடகப் பகுதிகளை மீட்போம்’’ என முழங்கியிருக்கிறார்.

இரண்டு மாநிலங்களும் பிரிக்கப்பட்டது முதலே பிரச்னைகள். கர்நாடகாவின் 865 கிராமங்களை மகாராஷ்டிரா கேட்க, மகாராஷ்டிராவின் 260 கிராமங்களைச் சொந்தம் கொண்டாடுகிறது கர்நாடகா.

இரு மொழி பேசும் மக்களால் நிறைந்ததாகவே மாநில எல்லைகள் இருக்கக்கூடும். சொல்லப்போனால் தேசங்களின் எல்லைகளும் அப்படித்தான் இருக்கும். ஒரு கோடு போட்டு, கச்சிதமாக அதைப் பிரித்துவிட முடியாது. வரைபடங்களில்தான் அவை எல்லைகள். அந்த மக்களைப் பொறுத்தவரை, அது பக்கத்து கிராமம், அவ்வளவுதான்! தொழில்நுட்பம் உலகத்தையே உள்ளங்கைக்குள் சுருக்கிவிட்ட இந்த யுகத்தில் இது போன்ற மோதல்கள் அபத்தமானவை. மத்திய அரசு தலையிட்டு இதில் இணக்கமான ஒரு தீர்வைக் கண்டறிய வேண்டும்.