கட்டுரைகள்
Published:Updated:

ஆட்டம் காணும் அதானி!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், இந்தியாவின் அதானி குழுமத்தைப் பற்றி வெளியிட்டிருக்கும் ஓர் அறிக்கை, தேசம் முழுக்கக் கடும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அதானி குழுமத்தைச் சேர்ந்த பத்து நிறுவனங்களுடைய பங்குகளின் மதிப்பு பெருமளவு சரிந்திருக்கிறது. இரண்டே நாள்களில் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பைச் சந்தித்திருக்கிறார், குழும நிறுவனர் கௌதம் அதானி.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கணிசமாக விலை உயர்ந்து, முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தந்துகொண்டிருந்தன. அதனால் அவற்றை வாங்குவதற்கு எளிய முதலீட்டாளர்கள் முதல் எல்.ஐ.சி போன்ற அரசு நிறுவனங்களும் ஆர்வம் காட்டின. ஹிண்டன்பர்க் அறிக்கையைத் தொடர்ந்து பலரும் பதற்றத்தில் பங்குகளை விற்கத் தொடங்க, அவற்றின் விலை தாறுமாறாகச் சரிந்தது. இதனால் சாதாரண முதலீட்டாளர்களுக்கும் நஷ்டம். இன்னொருபுறம், எல்.ஐ.சி பல ஆயிரம் கோடி ரூபாயை இழந்திருக்கிறது.

‘அதானி குழுமம் தன் சக்திக்கு மீறிக் கடன்களை வாங்கியிருக்கிறது. கடன்களுக்காகப் பங்குகளை அடமானம் வைப்பதால், குழுமத்தின் நிதி நிலை ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. மொரீஷியஸ் போன்ற, `வரியில்லா சொர்க்கம்’ எனக் கருதப்படும் நாடுகளில் லெட்டர்பேடு நிறுவனங்கள் ஆரம்பிக்கப்பட்டு, அவற்றின் மூலம் அதானி நிறுவனங்களுக்கு நிதி திருப்பப்பட்டது. அதானி குடும்பத்தினர் நிதி மோசடிகளிலும் ஈடுபடுகின்றனர்’ எனக் குற்றம்சாட்டும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை, அதானி குழுமத்துக்கு 88 கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. ‘அடிப்படை ஆதாரமற்ற அவதூறு இது. எங்களுக்கு இழப்பு ஏற்படுத்த உள்நோக்கத்துடன் இதைச் செய்திருக்கின்றனர். நாங்கள் வழக்கு போடுவோம்’ என அதானி நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அதானி நிறுவனத்தின் கடன் சுமை பற்றி ஏற்கெனவே கிரெடிட்சைட்ஸ் என்ற நிறுவனமும் கவலை தெரிவித்தது. மொரீஷியஸில் இருக்கும் நிழலான நிறுவனங்கள் மூலம் அதானி குழும நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில், தனியார் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பலவும் அதானி பங்குகளில் பெரும் முதலீடு செய்யாமல் விலகியிருக்கும் நிலையில், எல்.ஐ.சி மட்டும் ஏன் இந்தப் பங்குகளை வாங்குகிறது... பங்குச் சந்தை மோசடிகளைத் தடுக்கவேண்டிய செபி அமைப்பு ஏதாவது விசாரணை செய்ததா... முதலீட்டாளர் நலன் காக்க மத்திய அரசு என்ன செய்தது?

இப்படி வரிசையாகக் கேள்விகள் அணிவகுக்கின்றன. இந்திய வங்கிகள் பெருமளவு அதானி குழும நிறுவனங்களுக்குக் கடன் வழங்கியுள்ள நிலையில், அதானி பங்குகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் முதலீடு செய்துள்ள நிலையில், இதை அதானியின் தனிப்பட்ட பிரச்னையாக மட்டுமே பார்க்க முடியாது.