கட்டுரைகள்
Published:Updated:

அரசியல் நாகரிகம் - இது நியூசிலாந்து மாடல்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

பொதுவெளியிலும், நாடாளுமன்றம்-சட்டமன்றம் போன்ற அவைகளிலும்அரசியல் தலைவர்கள் எல்லை மீறிய தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுவது இப்போது இயல்பாகிவிட்டது. அடிமட்டப் பேச்சாளர்கள் மட்டுமே வசைமொழி பேசுவோராக இருந்த காலம் மாறி, தேசத்தை வழிநடத்தும் தலைவர்களே அமில நாக்குடன் அரசியல் செய்யும் காலம் இது. இப்படிப்பட்ட தலைவர்கள் எப்படிப்பட்ட பக்குவத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டியிருக்கிறது நியூசிலாந்து.

நியூசிலாந்து நாட்டின் முதல் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென். கொரோனா காலத்தில் தன் தேசத்தை முதிர்ச்சியுடன் வழிநடத்திய பாராட்டுக்குரியவர். எவ்வளவு முதிர்ச்சியான தலைவர்களும் நிதானம் இழப்பது இயல்புதான். நாடாளுமன்றத்தில் அப்படி சமீபத்தில் நிதானம் இழந்தார் ஜெசிந்தா.

எதிர்க்கட்சி எம்.பி-யான டேவிட் செய்முர் என்பவர் பிரதமரைக் கடுமையாக விமர்சித்தார். ‘‘பிரதமர் தொடர்ச்சியாகத் தவறுகள் செய்துகொண்டிருக்கிறார். அந்தத் தவறுகளுக்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும். செய்த தவறுகளைத் திருத்த வேண்டும்’’ என்று டேவிட் செய்முர் பேச, அதற்கு பதில் சொன்னார் பிரதமர் ஜெசிந்தா. அவர் பேசி முடித்து உட்காரும்போது சன்னமான குரலில், “He’s such an arrogant prick’’ என்று திட்டினார். தான் திட்டியது கேட்காது என்று ஜெசிந்தா நினைத்தார். ஆனால், மைக்ரோபோன் மூலம் அது கசிந்து எல்லோருக்கும் கேட்டுவிட்டது. உடனே டேவிட் செய்முர் கொந்தளிக்க, பிரதமர் தன் பேச்சுக்கு மன்னிப்புக் கேட்டார்.

விஷயம் இதோடு முடிந்துவிடவில்லை. பிரதமர் ஜெசிந்தா திட்டியது நாடாளுமன்றக் குறிப்பில் பதிவாகியிருந்தது. திட்டிய ஜெசிந்தாவும், திட்டப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி டேவிட் செய்முரும் இணைந்து பேசி, இந்த விவகாரத்தை அரசியல் நாகரிகத்துக்கான வடிவமாக மாற்ற முடிவெடுத்தனர். அதன்படி, இந்தக் கெட்ட வார்த்தைகள் பதிவான நாடாளுமன்றக் குறிப்பின் அதிகாரபூர்வ பிரதி ஒன்று எடுக்கப்பட்டது. அதில் ஜெசிந்தாவும் செய்முரும் கையெழுத்து போட்டனர். அது அழகாக ஃபிரேம் செய்யப்பட்டு ஒரு நினைவுச்சின்னம்போல ஆக்கப்பட்டு, ஆன்லைனில் ஏலம் விடப்பட்டது. இந்திய மதிப்பில் 52 லட்ச ரூபாய்க்கு இது ஏலம் போயிருக்கிறது.

இந்த ஏலத்தின் மூலம் திரட்டப்பட்ட தொகையை புராஸ்டேட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் செலவிட முடிவுசெய்துள்ளனர். திட்டு வாங்கியபோதும், கண்ணியமான முறையில் இந்த முயற்சிக்கு ஒப்புக்கொண்ட டேவிட் செய்முருக்கு நன்றி தெரிவித்திருக்கிறார் ஜெசிந்தா.

அரசியல் நாகரிகத்தின் நினைவுச்சின்னமாக அது வரலாற்றில் நிலைத்திருக்கும்.