கட்டுரைகள்
Published:Updated:

உண்மைகளை மறைக்கும் சீனப்பெருஞ்சுவர்!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

கிட்டத்தட்ட நம் உடலில் ஓர் அங்கமாகவே மூன்று ஆண்டுகளாக இருந்த முகக்கவசத்துக்கு சமீபத்தில்தான் விடை கொடுத்தோம். 2023 புத்தாண்டை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவிருந்த உலகை மீண்டும் மிரட்டியுள்ளது சீனா.

சீனாவிலிருந்துதான் கொரோனா வைரஸ் உலகம் முழுக்கப் பரவியது. அமெரிக்காவில் தொடங்கி ஐரோப்பிய நாடுகள் வரை கொரோனா பாதிப்பை சமாளிக்க முடியாமல் தவித்தபோது, சீனா அதைக் கட்டுப்படுத்தியது. ஜீரோ கோவிட் பாலிசியை சீனா கடுமையாக அமல்படுத்திவந்தது. ஒரு பகுதியில் ஒரு சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், அந்தப் பகுதியை மொத்தமாக சீல் செய்தது. நோயாளிகளைத் தனிமைப்படுத்தியது. இதன் மூலம் பாதிப்பு பரவாமல் தடுத்தது.

ஆனால், சில வாரங்களுக்கு முன்பு இந்த ஜீரோ கோவிட் பாலிசி கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவில் மக்கள் போராட்டம் வெடித்தது. கம்யூனிச சீன அரசை எதிர்த்து இவ்வளவு தீவிரமான போராட்டங்கள் சமீப வரலாற்றில் நடந்ததில்லை. அதனால் மிரண்ட அரசு, கட்டுப்பாடுகளைத் தளர்த்திக்கொண்டது. இதன் விளைவாக சீனாவில் கடுமையான தொற்று பரவியிருப்பதாக மேற்குலக நாடுகள் கவலையுடன் சுட்டிக்காட்டுகின்றன. சீனாவிலிருந்து பயணம் செய்வோருக்கு உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்துவருகின்றன.

சீனாவில் நாள் ஒன்றுக்கு 10 லட்சம் பேருக்கு மேல் கொரோனா தொற்றுவதாக சர்வதேச நிபுணர்கள் கணக்கீடுகள் சொல்ல, ‘தினசரி தொற்று நாடு முழுக்க 5 ஆயிரத்தைத் தாண்டவில்லை’ என்று மறுக்கிறது சீனா. பிரிட்டனைச் சேர்ந்த ஏர்ஃபினிட்டி என்ற சுகாதார ஆய்வு நிறுவனம், சீனாவில் தினம்தோறும் சுமார் 9 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாவதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது. ஆனால், `டிசம்பர் மாதம் முழுக்கவே கொரோனாவுக்கு பலியானவர்கள் 13 பேர் மட்டுமே’ என்கிறது சீனா. உலகிலேயே கொரோனாவுக்கு அதிகம் பேர் பலியானது அமெரிக்காவில்தான். கொரோனா பாதித்த மூன்று ஆண்டுகளில் அமெரிக்காவில் நிகழ்ந்த அதே அளவு மரணங்கள், அடுத்த நான்கு மாதங்களில் மட்டுமே சீனாவில் நிகழும் என்ற சுகாதார நிபுணர்களின் கணிப்புகள் கவலை தருகின்றன.

உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட இந்தக் காலத்தில் எந்த நாடும் தனியாகச் செயல்பட முடியாது. சீனா, தன் கொரோனா புள்ளிவிவரங்களையும், புதிய வைரஸ் உருமாற்றம் குறித்தும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கேட்டிருக்கிறது. அதை சீனா மதிக்க வேண்டும்.