கட்டுரைகள்
Published:Updated:

புதையும் ஜோஷிமத்... என்ன ஆகும் மலை நகரங்கள்?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

தறிகெட்ட வேகத்தில் மலைப்பிரதேசங்களைச் சுற்றுலாத்தலங்களாக மாற்றி, இதுதான் வளர்ச்சி என்று நம்பும் நம் இயல்பை முதன்முறையாகக் கேள்வி கேட்டிருக்கிறது ஜோஷிமத். இமயமலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் இந்தச் சிறுநகரத்தில் 17 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். திடீர் திடீரென ஏற்படும் நிலச்சரிவுகளும், மலைகளில் ஆங்காங்கே பிளவு ஏற்பட்டு சாலைகளும் கட்டடங்களும் விரிசல் விட்டிருப்பதும் இயற்கையின் அபாய அறிவிப்பாகத் தோன்றுகிறது.

இதுவரை 169 வீடுகள் அபாயகரமானவையாக அறிவிக்கப்பட்டு, அங்கிருந்தவர்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அந்த வீடுகள் இடிக்கப்படுகின்றன. தினம் தினம் பல வீடுகளிலும் கட்டடங்களிலும் புதிதாக விரிசல் விழ, அந்த நகரமே விரைவில் வாழத் தகுதியற்ற நகரமாக அறிவிக்கப்படும் சூழல் உருவாகியிருக்கிறது.

மலைவாழ் மக்கள் மட்டுமே வாழும் ஒரு சிறிய கிராமமாக இருந்தது ஜோஷிமத். புகழ்பெற்ற பத்ரிநாத் புனிதத்தலத்துக்கு பக்தர்கள் செல்லும் நுழைவாயிலாக இந்த இடமே இருக்கிறது. இதுதவிர இமயமலையில் சாகச விளையாட்டுகளுக்காகச் செல்லும் சுற்றுலாப்பயணிகள் தங்குவதும் இங்குதான். சீக்கியர்களின் புனிதத்தலம் ஒன்றும் அருகில் உள்ளது. இதனால் ஜோஷிமத் ஒரு முக்கியமான தங்குமிடமாக மாறியது. இதற்காக ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டன.

இன்னொரு பக்கம், இமயமலை ஆறுகளை அணை கட்டி, தடுத்து மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை இங்கு மத்திய அரசு நிறுவனமான என்.டி.பி.சி செயல்படுத்திவருகிறது. இதற்காக ஆங்காங்கே மலையைக் குடைந்து நீளமான சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. இது போன்ற வளர்ச்சித் திட்டங்கள் ஒட்டுமொத்தமான அந்தப் பகுதியின் சமநிலையைக் கெடுத்துவிட, அதன் விளைவே இந்த விபரீதம்.

இஸ்ரோ செயற்கைக்கோள்கள் மூலம் எடுக்கப்பட்ட படங்கள், கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் ஜோஷிமத் 8.9 சென்டிமீட்டர் அளவு புதைந்திருப்பதாகவும், இந்த டிசம்பர் 28 முதல் ஜனவரி 8 வரையிலான வெறும் 12 நாள்களுக்குள் 5.4 செ.மீ அளவுக்குப் புதைந்துவிட்டதாகவும் அபாய அறிவிப்பு செய்கிறது அந்த அறிக்கை.

கடந்த 1976-ம் ஆண்டு முதலே இந்தப் பிரச்னை இருப்பதாகவும், இதைப் பற்றிக் கவலைப்படாமல் கட்டடங்களைக் கட்டியதன் விளைவே இந்த நிலை என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே நிலச்சரிவு ஏற்பட்டு, கழிவுகள் தேங்கிய இடத்தின்மீதே இந்த நகரம் உருவாகியிருக்கிறது.

மலைகளின் அமைப்பைப் புரிந்துகொள்ளாமல், மண்ணின் தன்மையை உணராமல் கட்டமைப்புகளை ஏற்படுத்தி மலைவாழிடங்களை கான்கிரீட் காடுகளாக உருவாக்குவதை இனியாவது நிறுத்த வேண்டும். இயற்கையின் இயல்புக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும். ஜோஷிமத் அபாயத்தின் மூலம் இமயமலை நமக்கு உணர்த்துவது இதைத்தான்.