Published:Updated:

இது மருத்துவ வேதனை!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

ஒரு தேசமாக நாம் அடைந்திருக்கும் மருத்துவ வசதிகள் குறித்துப் பெருமிதப்படுகிறோம். இந்த மருத்துவ சாதனை எதுவும் எளியவர்களின் வேதனையைத் துடைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது பீகாரில் நிகழ்ந்திருக்கும் அந்தக் கொடூரம்.

பீகாரின் ககாரியா மாவட்டத்திலுள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில், ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் சார்பில் பெண்களுக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது. அதில் 24 பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்திருக்கிறது. அத்தனை பேரும் கிராமப்புறப் பெண்கள். எளிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அறுவை சிகிச்சை செய்தபோது வலியில் துடித்துக் கதறியதைப் பற்றி தமயந்தி தேவி என்ற பெண் சொல்வதைக் கேட்கும்போது நெஞ்சம் பதறுகிறது. ‘‘வறுமையில் இருப்பதால்தானே எங்களுக்கு இப்படி நடக்கிறது... எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவளுக்கு இந்த நிலைமை வந்துவிடக் கூடாது என்று கடவுளை வேண்டுகிறேன்’’ என அவர் வேதனையுடன் சொல்வது, இந்த தேசத்தை நோக்கிய கூக்குரல்போலத் தோன்றுகிறது.

இது பற்றி மீடியாக்களில் செய்தி வெளியான பிறகு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆனால், பீகார் சுகாதாரத்துறையினர் நடந்த விஷயத்தை மறைப்பதற்காக, ‘‘ஒவ்வொரு பெண்ணின் உடலும் மயக்க மருந்துக்கு வெவ்வேறுவிதமாக எதிர்வினையாற்றும். சிலருக்கு மயக்க மருந்து கொடுத்தும் மரத்துப் போகாமல் இருந்திருக்கலாம்’’ என்று சமாளிப்பு விளக்கம் கொடுக்கின்றனர். இதைக் காரணம் காட்டியே, தவறு செய்த யார்மீதும் நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுக்கின்றனர். ஒருவர், இருவருக்கு என்றால் இதை நம்பலாம்.

24 பேருக்குமா மரத்துப் போகாமல் இருந்திருக்கும்?

பாட்னா உயர் நீதிமன்றம் தானாகவே முன்வந்து இதைப் பொதுநல வழக்காக ஏற்று விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. தவறு செய்தவர்களை நீதிமன்றம் தண்டிக்கும் என்று நம்புவோம்.

உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள்தான் இன்னமும் குடும்பக் கட்டுப்பாடு இலக்கை எட்டாமல் இருக்கின்றன. அதனால் அங்கு அதிக அளவில் அறுவை சிகிச்சைகள் நடந்துவருகின்றன. அதை இப்படி அலட்சியத்துடன் செய்வது, குடும்பக் கட்டுப்பாடு இலக்கை எட்டுவதில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். குடும்பக் கட்டுப்பாடு என்று வரும்போது ஆண்களைத் தவிர்த்துவிட்டு, பெண்களையே குறிவைக்கும் பாரபட்சம் இங்கு ஏற்கெனவே நிகழ்கிறது. அந்த அறுவை சிகிச்சை, எந்த ஒரு பெண்ணுக்கும் வேதனை தருவதாக இருக்கக் கூடாது. எளிய பெண்களை மருத்துவத்துறை பாரபட்சத்துடன் அணுகவும் கூடாது. பாதுகாப்பான, வலியற்ற அறுவை சிகிச்சை என்பது அவர்களின் உரிமை.