கட்டுரைகள்
Published:Updated:

தீவிரவாதம்: உலக நாடுகளின் இரட்டை நிலைப்பாடு!

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்தபடி செயல்படும் அமைப்புகளின் தாக்குதல்கள் இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்கா வரை பல பாதிப்புகளை ஏற்படுத்திவருகின்றன.

உலக அளவிலான தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சிறப்புக் கூட்டத்துக்குத் தலைமை வகித்துப் பேசினார், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். ‘‘பாகிஸ்தான் நாடே தீவிரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது’’ என்று அவர் பேசியதற்கு, பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ, பின் லேடனுடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி குறித்துச் சொன்ன கருத்துகள் இந்தியத் தரப்பில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.

‘தீவிரவாத நாடு’ என்று குறிப்பிட்டால் பாகிஸ்தானுக்குக் கோபம் வருகிறது. ஆனால், உண்மை நிலையை அந்த நாடு உணர்ந்து பார்க்க வேண்டும். அமெரிக்க ராணுவத்தினர் உளவறிந்து கண்டுபிடித்துக் கொல்லும் வரை, பல ஆண்டுகள் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில்தான் பதுங்கியிருந்தார். இப்போதும் இந்தியாவில் பல தீவிரவாதத் தாக்குதல்களை நிகழ்த்திய ரெஹ்மான் லக்வி, ஹஃபீஸ் சயீத், சஜித் மிர், மசூத் அசார், தாவூத் இப்ராஹிம் போன்றவர்களுக்கு பாகிஸ்தான் நாடுதான் அடைக்கலம் கொடுத்துவைத்திருக்கிறது. ஐ.நா அமைப்பால், `தீவிரவாதிகள்’ என்று முத்திரை குத்தப்பட்ட 126 பேருக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது பாகிஸ்தான். ஐ.நா-வால் `தீவிரவாத அமைப்பு’ எனத் தடைசெய்யப்பட்ட 27 அமைப்புகள் பாகிஸ்தான் மண்ணிலிருந்தே செயல்படுகின்றன.

பாகிஸ்தானில் தலைமறைவாக இருந்தபடி செயல்படும் அமைப்புகளின் தாக்குதல்கள் இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்கா வரை பல பாதிப்புகளை ஏற்படுத்திவருகின்றன. மும்பைத் தாக்குதல்களையும், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நிகழ்ந்த நாடாளுமன்றத் தாக்குதலையும் மறந்துவிட முடியாது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமைச்சர் ஜெய்சங்கர் பேசிய சில விஷயங்களை உலக நாடுகள் கவனிக்க வேண்டும். தீவிரவாதத்தை உலகிலிருந்து வேரறுக்க முடியாமல் இருப்பதற்கான காரணங்களை அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் போன்ற சில நாடுகளே தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவியும் ஆயுத உதவியும் செய்கின்றன. எது தீவிரவாதம் என்பதை வரையறுப்பதில் குழப்பமான, உள்நோக்கம்கொண்ட அணுகுமுறை பல நாடுகளுக்கு இருக்கிறது. இரட்டை நிலைப்பாடுகளுடன் உலக நாடுகள் தீவிரவாதிகளை அணுகுகின்றன. தீவிரவாதத்தை வேரறுப்பதில் அரசியல் தடைகளும் ஏற்படுகின்றன.

பாகிஸ்தானில் இருந்தபடி செயல்படும் ஐந்து தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முடக்குவதற்கு ஐ.நா பாதுகாப்பு சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவந்தபோது, சீனா தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தத் தீர்மானத்தைத் தோற்கடிக்கிறது. இந்த இரட்டை நிலைப்பாடுதான் தீவிரவாத அமைப்புகளுக்கு உரமிட்டு வளர்க்கிறது. உலக நாடுகள் இதிலிருந்து மாற வேண்டும். ஜெய்சங்கர் சொல்வதுபோல, பாகிஸ்தான் நாடு தீவிரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்திவிட்டு ஒரு நல்ல அண்டை நாடாக மாற வேண்டும். பொருளாதார வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.