
தலையங்கம்
வருகிற பிப்ரவரி 1-ம் தேதி அன்று 2023-24-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ‘அடுத்த 25 ஆண்டுக் கால தொலைநோக்குடன் இந்த பட்ஜெட் இருக்கும்’ என்று நிதியமைச்சர் சொல்லியிருக்கிறார். எனவே, நீண்ட காலத்துக்கான பல திட்டங்களை இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம்.
பா.ஜ.க தலைமையிலான தேசிய ஐனநாயகக் கூட்டணி அரசு, இந்த ஐந்து ஆண்டுக் கால ஆட்சியில் சமர்ப்பிக்கவிருக்கும் கடைசி முழு பட்ஜெட் இது. 2024-ம் ஆண்டு மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால், அந்த ஆண்டில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். அதில், மக்களைக் ‘கவர்ந்திழுக்கக்கூடிய’ பெரும் பெரும் அறிவிப்புகளை வெளியிட முடியாது என்பதால், இந்த ஆண்டுக்கான பட்ஜெட் ‘சிறப்பாக’வே இருக்கும் என எதிர்பார்க்கலாம். 2023, 2024-ம் ஆண்டுகளில் 15 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன என்பதையும் இங்கே அடிக்கோடிட்டு நாம் குறித்துக் கொள்ளலாம்.
இந்த பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினரின் எதிர்பார்ப்புகளை முக்கியமாக கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. பணவீக்கமானது ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்துள்ள அளவைவிட (6%) குறைவாக இருந்தாலும், விலைவாசி உயர்வால் சாதாரண மக்கள் கடுமையாகவே பாதிப்படைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ள (பிரெண்ட் குரூட் 87 டாலர்) நிலையில், பணவீக்கத்தையும் குறிப்பிடத்தகுந்த அளவு குறைக்கும் நடவடிக்கைகளை நிதியமைச்சர் எடுக்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு.
மேலும், தனிநபர் வருமான வரிச் சலுகையை ரூ.2.5 லட்சத்தில் இருந்து குறைந்த பட்சம் ரூ.3.5 லட்சம் - ரூ.4 லட்சமாக உயர்த்த வேண்டும்; தற்போது ரூ.50,000-ஆக இருக்கும் நிலைக்கழிவு (standard deduction) ரூ.80,000-ஆக உயர்த்த வேண்டும். 80C மூலமான தரப்படும் வரிச் சலுகையானது தற்போது இருக்கும் ரூ.1.50 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சம் - ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். அது மட்டுமல்ல, வீட்டுக் கடனுக்கான வட்டிச் சலுகை தற்போது இருக்கும் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாகவும், அசலுக்குத் திரும்பக் கட்டும் பணம் ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2.5 லட்சமாகவும் உயர்த்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்ப்புகளும் நடுத்தர வர்க்கத்தினரிடம் உள்ளன.
நடுத்தர வர்க்கத்தினரின் இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றினால், அரசின் வரி வருமானம் குறைந்துவிடாதா என்று கேட்கலாம். அரசின் வருமானத்தைக் கணிசமாக அதிகரித்துக்கொள்ள பல வழிகள் உள்ளன. ஆனால், நடுத்தர மக்களின் வருமானம் கணிசமாக உயராத நிலையில், அவர்களின் சுமையைக் குறைக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு அரசுக்குத்தான் உண்டு. குறைவான வரியைச் செலுத்துவதன் மூலம் மக்கள் சேமிக்கும் பணத்தை மீண்டும் செலவு செய்யத்தான் போகிறார்கள். இதனால் பொருளாதாரம் வளரவே செய்யும் என்பது நிதியமைச்சருக்கு நன்கு தெரியும். எனவே, இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார் என்று எதிர்பார்ப்போம்!
- ஆசிரியர்