பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

மக்களே, இனியாவது புத்திசாலிகளாக இருங்கள்!

தலையங்கம்
News
தலையங்கம்

தலையங்கம்

ஏறக்குறைய எல்லோருக்குமே மகிழ்ச்சியாக நிறைவடைந்த இந்த தீபாவளி, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிலருக்கு மட்டும் பெரும் சோகமாக முடிந்தது உண்மையிலேயே வருத்தத்துக்குரிய விஷயம்.

இந்த மாவட்டத்தில் செய்யாறு - ஆரணி கூட்டு ரோடு பகுதியில் `வி.ஆர்.எஸ் ஃபைனான்ஸ்’ என்ற பெயரில் செயல்பட்டுவந்த ஒரு நிறுவனம், ஓராண்டுக்குமுன் `தீபாவளி ஃபண்டு திட்டம்’ ஒன்றைத் தொடங்கியது. ரூ.3,000 கட்டினால், ரூ.15,000-க்குப் பொருள்கள், ரூ.50,000 கட்டினால் 20 கிராம் தங்கநகை, வெள்ளிப்பொருள்கள், இனிப்புப் பலகாரங்கள் வழங்குவோம் என்று சொல்ல, செய்யாறு, ஆரணி எனப் பல்வேறு பகுதிகளைச் சுற்றியிருக்கும் மக்கள் பல நூறு கோடிக்குப் பணம் கட்டினார்கள்.

தீபாவளி சமயத்தில் பொருள்கள் கிடைக்கும் என்று கனவு கண்டவர்கள், தீபாவளிக்கு முதல் நாள் அந்த நிறுவனத்தின் கதவுகள் இழுத்துச் சாத்தப்பட்டு, பூட்டு தொங்கியதைக் கண்டு அதிர்ந்துபோனார்கள். காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடினார்கள். ஆனால், பணத்தைச் சுருட்டிக் கொண்டு போன கொள்ளையர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை; கட்டிய பணமும் திரும்பக் கிடைக்கவில்லை.

இது மாதிரியான மோசடிகள் நமது மாநிலத்தில் இனியும் நடக்காமல் இருப்பதற்கு எளிய வழி இருக்கவே செய்கிறது. மத்திய அரசாங்கமானது 1978-ல் கொண்டுவந்த Prize Chits & Money Circulation Banning Act என்கிற சட்டத்தின் மூலம் இது மாதிரியான மோசடி நிறுவனங்களை எளிதில் முடக்கி விட முடியும். ஆனால், எல்லாக் குற்றங்களும் நிகழ்ந்து முடிந்த பின்புதான் காவல்துறை வரும் என்பது இப்போது நிச்சயமான நடைமுறையாக மாறிவிட்டது. இந்த நிலையில், இனியும் காவல் துறையை மட்டும் நம்பி இருக்க முடியாது என்பதைப் புரிந்துகொண்டு கவனமாக இருக்காவிட்டால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இது மாதிரியான மோசடிகளில் ஏமாற்றுகிறவர்களின் பங்கு 50% எனில், ஏமாறுகிறவர்களின் பங்கு 50 சதவிகிதமாக இருக்கிறது. வட இந்திய மாநிலங் களுடன் ஒப்பிடும்போது நம்முடைய மக்களிடம் படிப்பறிவு அதிகம்; சம்பாதிக்கும் திறனும் அதிகம். ஆனால், நிதி சார்ந்த அறிவு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது என்பதைத்தான் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன, தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கும் இதுபோன்ற நிதி மோசடிச் செய்திகள்.

எந்தத் திட்டத்தில் சேரும் முன்பும், அதிலிருந்து எவ்வளவு லாபம் கிடைக்கும், அது எப்படிக் கிடைக்கும் என்பதைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்காமல் பணம் கட்டினால், அந்தப் பணம் திரும்ப வராமல் போகவே வாய்ப்புகள் அதிகம் என்பதை மக்கள் உணர்வது அவசியம்.

இதை உணரவில்லை எனில், மக்கள் பணத்தை இழப்பதுடன், முட்டாள் என்ற பட்டத்தை வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, இனி யாவது புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள மக்கள் முயற்சி செய்ய வேண்டும்!

- ஆசிரியர்