பங்குச் சந்தை
தொடர்கள்
நடப்பு
Published:Updated:

பி.எஸ்.என்.எல் பிழைக்குமா?

தலையங்கம்
News
தலையங்கம்

தலையங்கம்

ஒரு மருத்துவமனை. வயதான ஒருவர், உயிர் பிழைக்கத் துடிக்கிறார். அவருக்குத் தேவையான வைத்திய உதவியை செய்ய மறுக்கிறார் டாக்டர். டிப்டாப்பான இளைஞனைக் கவனிப்பதிலேயே அவருக்கு ஆர்வம், அக்கறை; பல வகையான பிரச்னையால், வயதானவர் எவ்வளவோ கத்தியும் பிரயோஜனமில்லை. அவர் உயிர் ஊசலாடுகிற சமயம். அந்த நேரத்தில் அவரைக் காப்பாற்றப் போவதாகச் சொல்லி அந்த டாக்டர் வந்தால், அந்த வயதானவருக்கும், அவரின் சொந்தக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?

அந்த மாதிரிதான் இருக்கிறது, பி.என்.எஸ்.எல் நிறுவனத்தை மீண்டும் உயிர்ப்பிக்க ரூ.1.61 லட்சம் கோடியை செலவழிக்கப்போவதாக மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கும் அறிவிப்பு. தொலைத்தொடர்புத்துறை தனியார்மயமாகத் தொடங்கிய காலத்தில் இருந்தே பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அலட்சியம் செய்யத் தொடங்கியது மத்திய அரசு. தனியார் நிறுவனங்களுக்குக் கிடைத்த நவீன தொழில்நுட்ப வசதிகள் அதற்குக் கிடைக்கவில்லை. வளர்ச்சிக்குத் தேவையான நிதியை அரசிடமிருந்து பெற முடியவில்லை என நாலாபக்கமும் போட்ட முட்டுக்கட்டையால அந்த நிறுவனத்தால் முன்னேற முடியவில்லை.

மத்திய அரசாங்கம் நினைத்திருந்தால், பல ஆண்டுகளுக்கு முன்பே தேவையான உதவிகளைச் செய்து, அந்த நிறுவனத்தைக் காப்பாற்றி சுறுசுறுப்பாக செயல்பட வைத்திருக்கலாம். ஆனால், காலம் கடந்த நிலையில், பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய நிதியுதவியை செய்யப்போவதாகச் சொல்வதில் என்ன பயன்? கடந்த 10 ஆண்டுகளில்அந்த நிறுவனம் அடைந்த நஷ்டம் மட்டுமே ரூ.90,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. 5ஜி அலைக்கற்றையை வாங்க தனியார் நிறுவனங்கள் குஸ்தி போட்டுக்கொண்டிருக்க, பி.எஸ்.என்.எல் நிறுவனமோ ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்க வேண்டியிருக்கிறது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாத நிலையில், இதுவரை யாரும் வாங்காத 900/1800 மெகா ஹெர்ட்ஸ் 4ஜி அலைக்கற்றையை (ரூ.44,993 கோடி மதிப்பிலானது) பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்குத் தந்து, கிராமப்புறங்களில் தொலைத்தொடர்பு சேவை அளிக்கும்படி சொல்கிறது மத்திய அரசாங்கம். இதிலிருந்து வருமானம் எதுவும் வரவில்லை எனில், அந்த நஷ்டமும் பி.எஸ்.என்.எல் தலையில்தான் ஏற்றப்படும்.

ஓர் அரசு பொதுத்துறை நிறுவனத்தைப் போற்றி பாதுகாக்கத் தவறினால் என்ன நடக்கும் என்பதற்கு பி.எஸ்.என்.எல்லின் இன்றைய பரிதாப நிலையே சரியான எடுத்துக்காட்டு. அக்கறை இல்லாமல் செயல்பட்ட ஊழியர்களைத் திருத்தி, மக்களுக்குத் தேவையான வசதிகளையும் சுறுசுறுப்பாகச் செய்து தந்திருந் தால், பி.எஸ்.என்.எல் இன்றைக்குத் தனியார் நிறுவனங்களைவிட சிறப்பாக செயல்பட்டிருக்கும். அந்த வாய்ப்பை அதற்குத் தரத் தவறியது யார் குற்றம்?

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின்மீது மத்திய அரசாங்கம் காட்டிய அலட்சியத்தைப் பிற பொதுத்துறை நிறுவனங்கள் மீதும் காட்டாமல், அவற்றின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளை, தேவையான நேரத்தில் செய்தாலே போதும், பி.எஸ்.என்.எல் நிறுவனம் போல மற்றொரு பரிதாப நிறுவனம் நிச்சயம் உருவாகாது; இப்படி லட்சம், கோடியென உதவி செய்ய வேண்டிய அவசியமும் இருக்காது!

- ஆசிரியர்