தொடர்கள்
பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டும் இன்ஃபோசிஸ்!

தலையங்கம்
News
தலையங்கம்

தலையங்கம்

பொதுவாக, ஒரு நிறுவனத்தின் தலைவர்கள் கடந்த காலத்தில் செயல்பட்ட விதத்தையும் செய்த தவறுகளையும் பலருக்கும் முன்னணியில் தானாக முன்வந்து எடுத்துச் சொல்லி, ஒப்புக்கொள்வது அபூர்வமான விஷயம். அந்த விஷயத்தில் தாங்கள் உருவாக்கிய நேர்மையான அணுகுமுறையில் இருந்து கொஞ்சம்கூட விலகாமல் இப்போதும் உறுதியாகப் பின்பற்றி வருகிறார்கள் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களான நாராயண மூர்த்தியும், நந்தன் நிலகேனியும்.

இந்தியத் தொழில் நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்குத் தனி இடம் உண்டு. ஐ.டி துறையில் இந்தியாவுக்கு இருக்கும் தனித்திறமையை உலகுக்கு உணர்த்தியது இன்ஃபோசிஸ் நிறுவனம்தான். இந்தியாவில் ஒரு நிறுவனம் எப்படி உருவாக்கி நடத்தப்பட வேண்டும் என்பதற்கும் மிகச் சிறந்த உதாரணம் இன்ஃபோசிஸ்தான்.

இந்த நிறுவனத்தின் 40-வது ஆண்டு தினத்தில் இதன் நிறுவனர்களான நாராயண மூர்த்தியும் நந்தன் நிலகேனியும் பேசிய பேச்சுக்கள் அற்புதமானவை. தொழில் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் கற்றுக்கொள்வதற்கு அவற்றில் நிறையவே இருக்கின்றன பாடங்கள்.

உதாரணமாக, ‘‘இன்ஃபோசிஸைத் தொடங்கிய நிறுவனர்களின் வாரிசுகள் நிறுவனத்துக்குள் வரக்கூடாது என்று சொன்னது மிகப் பெரிய தவறு’’ என்று சொல்லி இருக்கிறார் நாராயண மூர்த்தி. அதாவது, ஒரு நிறுவனரின் மகன்/மகள் என்கிற ஒரே காரணத்துக்காக, தந்தை தொடங்கிய நிறுவனத்தில் வரக்கூடாது என்பதில் நியாயம் இல்லை. தந்தை செய்து வந்த தொழிலை சிறுபிள்ளையாக இருந்து பார்த்த வாரிசுகள் அந்தத் தொழிலைப் பற்றி ஆழமான அறிவைப் பெற்றிருக்கலாம். அந்த அறிவை நிறுவனத்தை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்ல நிச்சயம் உதவும். ஆர்வமும் அறிவும், அனுபவமும் இல்லாத ஒருவரை மகன்/மகள் என்பதற்காக நிறுவனத்துக்குள் கொண்டு வரத் தேவையில்லை என்றாலும், அனைத்துத் தகுதிகளும் இருக்கும்பட்சத்தில் அவர்கள் ஏன் நிறுவனத்தின் நிர்வாகத்தில் பங்கு பெறக்கூடாது என்பதை அனைத்துத் தொழில்முனைவோர்களும் யோசிக்க வேண்டும். நிபுணர்களின் கண்காணிப்பில் நிறுவனம் நடத்தப்பட வேண்டும் என்றாலும், குடும்ப உறுப்பினரே நிபுணராக இருந்தால், அவருக்குரிய வாய்ப்பைத் தருவதில் என்ன தவறு இருக்க முடியும்?

இன்றைக்கு இளம் தொழில்முனைவோர்களாக இருப்பவர்கள் எப்படித் தொழில் செய்ய வேண்டும் என்பது குறித்து நந்தன் நிலகேனி சொன்ன விஷயங்கள் ஆழமாக கவனிக்கத்தக்கவை. இன்றைய தேதியில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பணத்தைத் தண்ணீர்போல செலவு செய்கின்றன. இது எவ்வளவு தவறு என்பதை எடுத்துச் சொல்லி, ‘‘ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சிக்கனமாகப் பணத்தைச் செலவு செய்ய வேண்டும்’’ என்று சொல்லியிருப்பது குறித்து 30 வயதுக்குக் கீழ் இருக்கும் அனைத்து பிசினஸ்மேன்களும் நன்கு யோசிக்க வேண்டிய ஒன்றே.

இப்படி, பல்வேறு விஷயங்களை இன்ஃபோசிஸ் நிறுவனர்களின் பேச்சிலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஒரு பிசினஸ்மேன் சக பிசினஸ்மேன்களுக்கு செய்யும் மிகப் பெரிய உதவி, தம்முடைய அனுபவத்தில் இருந்து சரியான வழிகளைக் காட்டுவது. அந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனர்கள், போற்றிப் புகழப்படுவதுடன் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டியவர்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை!

- ஆசிரியர்