
இசை
`காதுக்கு இனிமையான சங்கீதத்துக்குப் பெயர்தான் கர்னாடக சங்கீதம்' என்பார் இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா. பாடுபவருக்கும் கேட்பவருக்கும் இனிமையைத் தரும் இசையில் நீடித்த புகழ்பெற்றவர்கள் பலர். வாய்ப்பாட்டு, மிருதங்கம், வயலின் எனப் பல வகைகளில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு கர்னாடக சங்கீத ரசிகர்களை லயிக்கச்செய்பவர்கள் ஏராளம். இந்த இசைப் பணியைத் தொடர, அவர்களின் வாரிசுகளும் மேடையேறுவது ஆரோக்கியமான விஷயம். அப்படிப்பட்ட இசை வாரிசுகளில் சிலரைப் பற்றிய அறிமுகம் இங்கே...
உத்ரா உன்னிகிருஷ்ணன்
`பெண்ணைப் பெற்றவர் கர்வம்; எனக்கும் சற்றே இருக்கும்’ என்று பாடகர் உன்னிகிருஷ்ணன் ஒரு பாடலில் பாடுவார். அது உண்மைதான். மழலை மணம் மாறா குரலில் தனது எட்டு வயதில் பாடிய `சைவம்' திரைப்படத்தில் இடம்பெற்ற `அழகே... அழகே...' பாடலுக்கு தேசியவிருது பெற்றவர் அவரின் மகள் உத்ரா. இதுதான் திரையில் இவர் பாடிய முதல் பாடல். இன்னோர் ஆச்சர்யம்... தந்தை உன்னி கிருஷ்ணன், திரையில் பாடிய முதல் பாடலுக்கு தேசியவிருது வாங்கியிருந்தார். குரலில் இனிமையை மட்டுமல்ல, விருதுபெறுவதிலும் அப்பாவைப் பின்பற்றுகிறார் உத்ரா. ``அப்பாவிடம் பிடித்த விஷயம் எது?’’ என்று கேட்டால், ``எந்த விஷயத்துக்காகவும் என்னைத் திட்ட மாட்டார்’’ என்கிறார் சிரித்துக்கொண்டே.

``அப்பா வீட்டில் இருக்கும்போது இரண்டு பேரும் சேர்ந்து பாடுவோம். அப்படிப் பாடும்போதுகூட ஒரு சங்கதி தவறாக வந்துவிட்டால், அரை மணி நேரமானாலும் சரியாக வரும் வரை திரும்பத் திரும்பப் பாடச் சொல்வார். ஒரு பாடல் அதற்குரிய துல்லியத்துடன்தான் பாடப்பட வேண்டும் என்று நினைப்பார். அப்பா பாடியவற்றில், `நறுமுகையே... நறுமுகையே...' பாடல் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
நான் இரண்டாவது படிக்கும்போது டாக்டர் சுதா ராஜா மேடத்திடம் சங்கீதம் கற்றுக்கொள்ள அனுப்பினார்கள். ஆனால் சில மாதங்கள், நான் அங்கே விளையாடிக்கொண்டுதான் இருந்தேன். டீச்சரும் எதுவும் சொல்லவில்லை. பிறகு எனக்கே ஒரு ஆர்வம் வந்து, முறைப்படி கற்றுக்கொண்டேன். எனக்கு ரொம்பப் பிடிச்ச பாட்டு என்றால், என் முதல் பாட்டான `அழகே... அழகே'தான். அதைப் பாடும்போது ரொம்ப பயமாக இருந்தது. ஆனால், சந்தோஷமாகவும் இருந்தது. கர்னாடக சங்கீதம், வெஸ்டர்ன் என எல்லா வகைகளிலும் பாட வேண்டும் என்பதுதான் ஆசை’’ என்று கூறும் உத்ரா, இப்போது பத்தாம் வகுப்பு படிக்கிறார். உயர்கல்வியில் பிசினஸ் சைக்காலஜி படிக்க விருப்பமாம்.
``உத்ரா சங்கீதம் கற்றுக்கொள்ள அனுப்பியபோது விளையாடிக்கொண்டே இருந்தாலும், இசை வகுப்பில் சொல்லிக்கொடுப்பவற்றை உள்வாங்கிக்கொண்டுதான் இருந்திருக்கிறாள். அதனால்தான் அவளால் அடுத்தடுத்து விரைவாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. அவளுக்கு இயல்பாகவே இசைஞானம் இருப்பதை நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். தேசியவிருது கிடைத்தபோது, அது என்னவென்றே அவளுக்குத் தெரியாது. இப்பவும் சரி, எந்தவொரு புகழையும் தலையில் வைத்துக்கொள்ளும் பழக்கம் அவளிடம் இல்லை. மிக இயல்பாக நண்பர்களோடு பேசி, விளையாடிக்கொண்டிருப்பாள். கர்னாடக சங்கீதம் பாடுவாள்; வெஸ்டர்னும் பாடுவாள்... படிப்போ, இசையோ அவளின் விருப்பம்தான்’’ என்று மகள் குறித்துப் பெருமிதம்கொள்கிறார் உன்னிகிருஷ்ணன்.
சங்கர் பிரசாத்
`நல்ல ரசிக குடும்பத்திலிருந்துதான் சிறந்த கலைஞன் வர முடியும் என்பது என் தீர்மானமான அபிப்ராயம்’ என்று ஒரு பேட்டியில் சொல்லியிருப்பார், கர்னாடக இசைப்பாடகர் நெய்வேலி சந்தானகோபாலன். அவரின் வாக்கு அட்சரசுத்தமாகப் பலித்தது மாதிரி, அவரின் வீட்டில் நம்பிக்கையளிக்கும் இரு இசைக்கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவரின் மகள் ஸ்ரீரஞ்சனி, சிறந்த பாடகர். மகன் சங்கர் பிரசாத், பலரும் பாராட்டும் மிருதங்க இசைக் கலைஞர்.

``அப்பாதான் என் குரு; வழிகாட்டி; ரோல் மாடல் எல்லாமுமே. ஆனால், அவரைப்போலப் பாடகராகாமல் மிருதங்கத்தைக் கைக்கொண்டது தனிக்கதை. சின்ன வயதில் என்னைப் பாடச் சொல்லியிருக்கிறார்கள். நான் அதற்குப் பெரிய அளவில் முயற்சி ஏதும் செய்யவில்லை. ஆனால், எங்கள் வீட்டில் நிறைய இசைக்கருவிகள் இருக்கும். அவற்றில் மிருதங்கத்தை எப்போதும் தட்டிக்கொண்டே இருந்திருக்கிறேன். இதைப் பார்த்த என் அம்மா, கடம் ஸ்ரீஎஸ்.வி.ரமணி குருவிடம் சேர்த்து விட்டார்கள். ஆர்வமாகக் கற்றுக்கொண்டேன்.
அப்பாவின் கச்சேரியில் வாசிக்க வாய்ப்பு கிடைப்பது எவ்வளவு பெரிய கொடுப்பனை. அவர் பல்துறைத் திறன்கொண்டவர் என்பது என்னை வியக்கவைக்கும் விஷயம். தீவிரமான படிப்பாளி; நிறைய எழுதுவார்; நன்றாக நடிக்கவும் செய்வார். அவர் என்னிடம் அடிக்கடி சொல்வது, `இசையறிவில் கேள்வி ஞானமும் முக்கியம். அதனால், மாலை நேரத்தில் எங்கே கச்சேரி நடந்தாலும் அவசியம் சென்று கேள்’ என்பதுதான். அப்பாவைப்போல அக்கா ஸ்ரீரஞ்சனிக்கும் மிருதங்கம் வாசிக்கிறேன். ஆண், பெண் பாடகர்களுக்கு வாசிக்கையில் சில நுட்பங்கள் பழக வேண்டும். ஏனென்றால், ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருக்கும். அதற்கேற்ப பக்கவாத்தியக் கலைஞர்கள் தயாராக வேண்டும். `பாடகரைப் பார்த்து வாசிக்கணும். அவர் ஏதேனும் முகக்குறிப்பால் நமக்குச் சொல்ல விரும்பினால், அதைப் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று நுட்பமான விஷயங்களைச் சொல்வார் அக்கா.
மிருதங்கத்துக்கும் எனக்கும் நெருங்கின பந்தம் மாதிரி ஆகிவிட்டது. ஏதேனும் மனச்சோர்வோடு வீட்டுக்கு வந்தால், கொஞ்ச நேரம் மிருதங்கம் வாசித்தால் மனம் லேசாகிவிடும். பொதுவாக, கச்சேரியில் பாடகரே முதன்மையானவர். எனவே, அவரின் பாடலுக்கு பக்கவாத்தியக் கலைஞர்கள் உறுதுணையாக இருப்பதே தொழில்தர்மம். அதை விட்டுவிட்டு, தன் தனித்திறனைக் காட்ட நினைக்கக் கூடாது. தனி ஆவர்த்தன நேரத்தில் அதைச் செய்துகொள்ளலாம் என்பதுதான் எனக்குப் பாலபாடம். அதை முறையாகப் பின்பற்றிவருகிறேன். கர்னாடக இசையில் எண்கள் ரொம்பவும் பயன்படும். நான் படிப்பது இன்ஜினீயரிங். இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. இரண்டும் ஒன்றுக்கொன்று உதவும்.
இந்தத் துறையில் வாசிக்கும் ஒவ்வொருவரின் தனித்துவத்தையும் கூர்ந்து கவனித்து, கற்றுக்கொண்டு வருகிறேன். உமையாள்புரம் சிவராமன் மிகப்பெரிய மிருதங்க மாமேதை. அவரைப்போல வாசிக்க வேண்டும் என்பது என் கனவு.’’
விஷ்ருதி கிரிஷ்
``பேஹாக் ராகத்துல அம்மா பாடும்போது என்னையறியாமல் நானும் சேர்ந்து பாட ஆரம்பித்துவிடுவேன்’’ என்று இயல்பாகப் பேசத் தொடங்குகிறார் விஷ்ருதி கிரிஷ். `தெளிவான உச்சரிப்போடு பாடுபவர்’ எனப் பெயர் பெற்ற கலைமாமணி காய்த்ரி கிரிஷின் மகள் விஷ்ருதி கிரிஷ். இளங்கலைப் படிப்பு முடித்திருக்கும் இவர், தற்போது கச்சேரிகளில் இனிமையான குரலில் தனி இடத்தைப் பிடித்துவரும் `இளம் இசை நம்பிக்கை.’ அப்பா கிரிஷ் வெங்கட்ராமன் பள்ளி ஒன்றை நிர்வகித்துவருகிறார்.

``நான் கைக்குழந்தையாக இருக்கும்போதே அம்மாவின் கச்சேரிக்கு என் பாட்டி தூக்கிட்டுப் போவாங்களாம். நான் அக்டோபரில் பிறந்தேன். அந்த ஆண்டு டிசம்பர் கச்சேரியில் பாடும்போது பாட்டி, என்னை காரில் வைத்திருப்பாராம். கச்சேரி முடிந்து வந்து, அம்மா பால் கொடுப்பாராம். அப்போதிலிருந்தே பாட்டுச்சூழலில்தான் நான் இருக்கிறேன். ஆறு வயதில்தான் அம்மாவிடம் முறையாக சங்கீதம் பழகத் தொடங்கினேன். வகுப்பில் உட்கார்ந்துவிட்டால், என் கண்முன், `அம்மா’ மறைந்து `குரு'வாகிவிடுவார். சங்கீதத்தை அவ்வளவு அழகாகக் கற்றுத்தருவார். வேறு யாரிடமாவது சங்கீதம் கற்றுக்கொள்ள வேண்டுமெனில், குறிப்பிட்ட நேரத்தில்தான் கற்றுக்கொள்ள முடியும். அம்மா என்பதால், எந்த நேரமும் சங்கீதம் பழகும் வாய்ப்பு அமைந்துவிட்டது.
ஒரு பாடலைக் கற்றுக்கொடுப்பதற்கு முன் அது எழுதப்பட்ட பின்னணி, அந்தக்காலச் சூழல் உள்ளிட்ட பல தகவல்களை அம்மா சொல்வார். அதனால்தான், அந்தப் பாடலை உணர்வுபூர்வமாகப் பாட முடிகிறது. பத்து வயதிலிருந்து கச்சேரிகளில் அம்மாவுக்குப் பின்னே உட்காரவைப்பார்கள். வீட்டில் பாடி மட்டுமே பயிற்சி எடுத்த எனக்கு, வயலின், மிருதங்கம் உள்ளிட்ட பக்கவாத்தியங்களோடு பாடும் சூழலைப் புரிந்துகொள்ள முடிந்தது. சில வருஷங்கள் கடந்ததும், கச்சேரியில் சில வரிகளைப் பாடச் சொன்னார் அம்மா. கமாஸ், பேஹாக் ராகங்களில் அம்மா பாடல்களைப் பாடும்போது என்னை மறந்து கேட்பேன்.
பதினேழாம் வயதில் `பரம்பரா'வில் பாடல் அரங்கேற்றம் நடந்தது. பிறகு, பிரம்மகான சபா, வாணி மஹால், பாரதீய வித்யா பவன் எனப் பல சபாக்களில் பாடியிருக்கிறேன். வரும் டிசம்பரில் பல கச்சேரிகளில் பாட அழைத்திருக் கிறார்கள். `இளையராஜா 75' நிகழ்ச்சியில் எங்கள் கல்லூரியிலிருந்து சென்று பாடினோம். அதற்காக ஒரு வாரம் இளையராஜா சாருடன் பயிற்சிக்குச் சென்றதை மறக்கவே முடியாது. அப்போது பல விஷயங்கள் கற்றுக்கொண்டேன். `என்ன சத்தம் இந்த நேரம்...' பாடலைப் பாடியபோது, `நல்லாப் பாடுறேம்மா...’ என்றார்.
இரண்டு வருடங்களுக்கு முன், ஒரு கச்சேரி முடிந்து மேடையிலிருந்து கீழே இறங்கியபோது, ஒரு அம்மாவும் அவரின் மகளும் என்னிடம் வந்தனர். `நீங்க ஒரு விழாவுல பாடின பிரேயர் சாங்கை என் பொண்ணு கேட்டதுலேருந்து உங்க பாட்டைக் கேட்கணும்னு சொன்னா. அதான் அழைச்சிட்டு வந்தேன்' என்றார். அதிலிருந்து என்னுடைய மற்ற கச்சேரிகளுக்கும் அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். என் முழு கவனமும் கர்னாடக சங்கீதத்தில் மட்டுமே. நல்ல வாய்ப்பு வந்தால் சினிமாப் பாடல்களைப் பாட முயல்வேன்’’ என்கிறார் விஷ்ருதி கிரிஷ்.
கிருபா லட்சுமி
இசையரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் கச்சேரிகளில், அவரின் குரலுக்கு அனுசரணையாக இசைத்தவர் மிருதங்க வித்வான் கே.வி.பிரசாத். இன்றும் பல்வேறு புகழ்பெற்ற பாடகர்களுக்கு உறுதுணையாக மிருதங்கத்தில் நர்த்தனமிட்டுக்கொண்டிருக்கின்றன இவரின் விரல்கள். அவர் மகள் கிருபா லட்சுமி பரதம், பாட்டு எனும் இரு துறைகளில் நம்பிக்கை தாரகையாக வலம்வருகிறார். ``சின்ன வயதிலிருந்தே பரதம் மீதுதான் ரொம்ப ஆர்வம். முதலில் சூர்யநாராயண மூர்த்தி குருவிடம், அதன் பின்னர் 18 வருடங்களாக குரு ஷோபனா பாலசந்தரிடம் கற்றுக்கொண்டு வருகிறேன். ஏழாம் வகுப்பு படிக்கும்போது ஸ்பெயினுக்குச் சென்று பரத நிகழ்ச்சியில் ஆடியிருக்கிறேன். 15 வயதில்தான் முறையாக சங்கீதம் கற்க ஆரம்பித்தேன். முதலில், குரு வீணை ரமணியிடமும், பிறகு குரு சுகுணா வரதாச்சாரியிடமும் கற்றேன்.

எம்.ஏ மியூசிக் முடித்ததும், மியூசிக் அகாடமியில் டிப்ளோமா கோர்ஸ் சேர்ந்தேன். அங்கே நான் வியக்கும் பெரிய ஆளுமைகள் வந்து வகுப்பெடுத்தார்கள். அதுதான், பாடுவதை புரொபஷனலாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைத் தந்தது. குறிப்பாக, சுகுணா வரதாச்சாரி எனக்குள் உத்வேகத்தை அளித்தார். எனக்கு `வராளி ராகம்' லக்கி. பள்ளியில் வராளியில் பாடி நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறேன். இப்போதும் யாராவது திடீரென்று பாடச் சொன்னால், வராளி ராகத்தில்தான் பாடுவேன்.
நான் பாட்டு கற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடுவதற்கு முக்கியமான காரணம் பயம்தான். ஏனென்றால், அப்பாவின் புகழ் எல்லோருக்குமே தெரியும். பார்க்கும் எல்லோரும், `கே.வி.பிரசாத் பொண்ணு பாட ஆரம்பிச்சிட்டாளா?’ என்பார்கள்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர், நான் முதன்முதலாகக் கச்சேரியில் பாடினேன். அது முடிவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் வேதவல்லி அம்மா வந்தார்கள். மேடையில் ஏறி என்னைப் பாராட்டி, மேலும் இரண்டு பாடல்களைப் பாடவைத்தார்கள். அடுத்த நிகழ்ச்சி அவர்களுடையது. இருந்தாலும் அவர்களின் நேரத்தை எனக்குத் தந்து பாட வைத்தபோது உடல் சிலிர்த்துவிட்டது. அம்மா இசையில் முனைவர் பட்டம் வாங்கியவர் என்பதால், ரொம்ப நுட்பமாக விமர்சனம் செய்வார். அப்பா அம்மா இருவருமே பாராட்டுகளைவிட, நான் மாற்றிக்கொள்ள வேண்டியவற்றைத்தான் அதிகம் சொல்வார்கள்.
அப்பாவிடம் எனக்கு ரொம்பப் பிடித்த விஷயம், நிதானம். எந்தச் செயலையும் பதற்றப்படாமல், நிதானமாகச் செய்வார். அதை நான் ஃபாலோ செய்ய வேண்டும் என ஆசைப்படுவேன். வரும் டிசம்பர் சீசனில் `பரம்பரா'வில் அப்பா மிருதங்கம் வாசிக்க, நான் பாடப்போகிறேன். அந்த நாள்தான் என் அரங்கேற்றம். அதை நினைத்து இப்போதிருந்தே பயத்தோடு காத்திருக்கிறேன்.
நடனம், பாட்டு இரண்டிலுமே பயணிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. இப்போதும் அனிதா ரத்னம், லட்சுமி ராமசுவாமி போன்ற பெரிய குருக்களோடு சேர்ந்து பரதம் ஆடிவருகிறேன். ஆனால், நடனத்துக்காக உடலை வருத்த வேண்டுமே என்று நான் பாடுவதையே விரும்புகிறார்கள்’’ என்கிறார் கிருபா லட்சுமி.