என்டர்டெயின்மென்ட்
ஹெல்த்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

தலையங்கம்

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்த விவாதம், கிட்டத்தட்ட 41 வருடங்களுக்கு முன் எழுந்தது. ஆனால், இந்த 2021வரை அது கோரிக்கையாக மட்டுமே இருக்கிறது.

மக்கள் தொகையில் கிட்டத்தட்ட சரிபாதி இருக்கும் பெண்களுக்கு, அரசியல் அதிகாரத்தில் மூன்றில் ஒரு பங்கு கோரும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா - 2008, ராஜ்ய சபாவில் 2010-ல் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், நாடாளுமன்றத்தில் ஆதரவு வாக்குகள் கிடைக்காமல் இன்றுவரை அது நிலுவையிலேயே இருப்பது, இந்திய அரசியல் கட்சிகளில் நிலவும் ஆணாதிக்கத்தையே காட்டுகிறது. உலகின் முதன்மையான ஜனநாயக நாடான இந்தியாவில், வெறும் 11% நாடாளுமன்ற பகிர்வுடன் அரசியலில் பெண்கள் எத்துணை ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்பது முரண்.

காங்கிரஸ் முதல் பி.ஜே.பி வரை பல்வேறு காலகட்டங்களில் 33% மசோதாவை தாக்கல் செய்த அரசியல் கட்சிகள், சட்டமாக வந்த பின்னர்தான் அதைச் செயல்படுத்த வேண்டும் என்பதில்லை. எப்போதோ செய்திருக்கலாம் அல்லது இப்போதாவது செய்யலாமே... மேலும், கட்சிகள் வாய்ப்பளிக்கும் சொற்ப சதவிகிதப் பெண்களில் பெரும்பாலானவர்கள், தம் குடும்பத்து ஆண்களின் செல்வாக்காலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு, ரப்பர் ஸ்டாம்ப்பாகவே பயன்படுத்தப்படுகிறார்கள்.

ஆண் அரசியல்வாதிகள்தாம் என்றில்லை, பெண் அரசியல்வாதிகளும்கூட ஆணாதிக்க மனப்பான்மையிலேயே இதைக் கையாள்வதுதான் வேதனை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் ஆளுமையாக உருவெடுத்தார். ஆனாலும், தன் சொந்த கட்சியில் அவர் எத்தனை பெண்களை தலைவர்களாக உருவாக்கினார், தேர்தலில் வாய்ப்பளித்தார் என்பது ஏமாற்றமே. எனவே, முட்டி மோதி அரசியல் அதிகாரம் பெறும் பெண்கள், சக பெண்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கப்பெறும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியது மிக முக்கியமாகிறது.

இந்த மகளிர் தினத்தில் ராஜ்ய சபா கலந்துரையாடலின்போது சிவசேனா எம்.பி ப்ரியங்கா, ‘24 ஆண்டு களுக்கு முன்பு நாங்கள் 33% கேட்டோம். இப்போது அதை 50% ஆக உயர்த்த வேண்டும்’ என்றார். ஆம்... பெரிதினும் பெரிது கேட்போம் நம் உரிமைகளை தோழிகளே.

ஏப்ரலில் நடக்கவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை, கட்சிகள் வெளியிட ஆரம்பித்துள்ளன. அதில் பெண் வேட்பாளர்களின் பெயர்களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி 50% பெண் வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. என்றாலும், மாற்றத்தை ஏற்படுத்த, முதன்மைக் கட்சிகளான தாங்கள் அதைச் செயல்படுத்த வேண்டிய பொறுப்பை அ.தி.மு.க, தி.மு.க உணரவில்லை அல்லது விரும்பவில்லை.

பஞ்சாயத்து தேர்தல்களில் பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 33% இட ஒதுக்கீட்டை ஆந்திரா, பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் 50% ஆக உயர்த்தியுள்ளன. எந்த மாற்றமும் இங்கு சாத்தியமே.

கேட்போம் தோழிகளே!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்