ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
தன்னம்பிக்கை
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்குள்ளே...

சாதியைப் பயன்படுத்தி பல்வேறு பலன்களைப் பெற்றுக்கொண்டிருக்கும் கொலைகார கூட்டத்தால்தான், சாதித்தீ அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது.

தமிழகத்தையே உலுக்கியது, 2015-ம் ஆண்டு தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த சேலத்தை சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜின் ஆணவக்கொலை. ‘தீரன் சின்னமலைக் கவுண்டர்’ பேரவையின் தலைவர் யுவராஜ் உட்பட 17 பேர் குற்றவாளிகளாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் தற்போது, யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. முதல் குற்றவாளியான யுவராஜுக்கு மூன்று ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மாநிலத்தையே அதிரவைத்தது அந்தக் கொலை. அதேபோல, மாநிலத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. ஆணாதிக்கம் மற்றும் சாதி ஆதிக்க மனப்பான்மையுடன், ‘சாதி மாறி மணம்புரிந்துவிட்டால் குடும்பத்தின் கௌரவமே பறிபோய்விடும்’ என்பதையே காலகாலமாகப் புகட்டிக்கொண்டிருக்கிறார்கள் இங்கே. அதனால்தான், தன் மகள்/மகன் வேறொரு சாதியைச் சேர்ந்தவரைக் காதலித்தால், திருமணம் செய்தால் உச்சபட்சமாக, அது ஆணவக்கொலை வரை செல்கிறது. வேற்று சாதியில் திருமணம் செய்யும் தன் மகளை ஆணவக்கொலை செய்வது, மகளை காதல்/திருமணம் செய்த ஆணை ஆணவக்கொலை செய்வது, இருவரையும் கொலைசெய்வது என்று இது விதவிதமாக நடத்தப்படுகிறது. சில குடும்பங்களில், மகன்களையும் ஆணவக்கொலை செய்கிறார்கள்.

விருத்தாசலம் கண்ணகி - முருகேசன், உடுமலை கௌசல்யாவின் கணவர் சங்கர், தெலங்கானா அம்ருதாவின் கணவர் பிரணய் என நாட்டையே உலுக்கிய ஆணவக்கொலைகள் முதல் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆணவக்கொலை செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ்குமார் வரை, இது தொடர்கதையாகவே இருப்பது அவலம். இந்தியாவில் 2017 - 2019 காலகட்டத்தில் பதிவான ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை 145 என சென்ற ஆண்டு மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. பதிவுக்கு வராத கொலைகள் இந்த எண்ணிக்கையைவிடப் பன்மடங்கு.

2019-ம் ஆண்டு ‘எவிடன்ஸ்’ அமைப்பு தன் அறிக்கையில், தமிழகத்தில் 2012 - 2017 காலகட்டத்தில் மட்டும் 157 ஆணவக்கொலைகள் நடந்துள்ளதாகத் தெரிவித்தது. ‘ஆணவக்கொலைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது’ என்று அந்த அமைப்புத் தந்த தரவும் அச்சமூட்டுகிறது. இந்த ஆபத்தான சூழ்நிலையிலும் ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம் கோரிக்கையாகவே இருப்பது அவலம்.

நமக்குள்ளே...

சாதியைப் பயன்படுத்தி பல்வேறு பலன்களைப் பெற்றுக்கொண்டிருக்கும் கொலைகார கூட்டத்தால்தான், சாதித்தீ அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. அந்த வெறியர்களின் பேச்சுகளுக்கு இரையாகி, பிள்ளைகளை, குடும்ப மகிழ்ச்சியை பலிகொடுப்பது மடைமையிலும் மடைமை. இன்றைக்கு சாதியை நீட்டி, நம்மை மடைமாற்றும் அந்த வெறியர்கள், நாம் தடுக்கி விழுந்தால் ஒருபோதும் தூக்கிவிட கைகொடுக்கப் போவதில்லை. ஏன், ஒருவேளை உணவைக்கூட நமக்காகக் கொடுக்கப்போவதில்லை என்பதே நிதர்சனம். இதற்கு சாட்சி, இந்த வெறியர்களின் பேச்சை நம்பி, தற்போது நடைபிணங்களாக வாழ்ந்துகொண்டிருக்கும் குடும்பங்களே!

சாதிக்காகக் குடும்பங்களே கொலைகாரர்கள் ஆவதா? நம் பிள்ளைகளின், குறிப்பாக மகள்களின் மணத்தேர்வுகளுக்கு சாதி மூர்க்கங்கள், இறுக்கங்கள் களைந்து செவிகொடுப்போம். அவர்களைவிட பெரிய சந்தோஷம், நிம்மதி, பெருமை, நெகிழ்ச்சியை எந்த சாதியால் தரமுடியும் தோழிகளே?

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்