
நம் பயணமும், எங்கள் பொறுப்பும் தொடர்கிறது. ஒவ்வோர் இதழுக்கும் ஆயிரக்கணக்கில் தபாலிலும் மெயிலிலும் வந்து குவியும் உங்கள் கடிதமெனும் அன்பில் திக்குமுக்காடி நிற்கிறோம்.
அவள் விகடன் 24-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிற மகிழ்ச்சித் தருணம் இது. இந்த நீண்ட நெடிய பயணத்தில் எங்கள் நினைவுகளின் கண்ணிகள் எல்லாம் வாசகிகளான உங்களாலேயே தொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் அவள் விகடனை தோழியாக, மகளாக, பேத்தியாக என உங்கள் வயதுக்கேற்ற ஒரு துணையாக நீங்கள் வரித்துக்கொண்ட வரவேற்பு, எங்கள் வரம்.
தமிழ் இதழியலின் முக்கியமான முயற்சியாக விகடன் குழுமம், பெண்களுக்கான பத்திரிகையாக அவள் விகடனை 1998-ல் வெளிக்கொண்டு வந்தபோது, பொழுதுபோக்கு, உத்வேகம், வழிகாட்டல், குழந்தை வளர்ப்பு, மருத்துவ விழிப்புணர்வு, சமூக வழிகாட்டல், ஆன்மிகம், வீட்டுத்தோட்டம் மன நலம், கிராஃப்ட், சமையல் என வாசகிகளுக்குத் தேவையான அத்துணை விஷயங்களையும் அள்ளிக் கொண்டு மலர்ந்தது இதழ். அதை அங்கீகரித்து ஆரம்ப வரவேற்பை அமோகமாகத் தந்தனர் வாசகிகள்.
சோறு ஊட்டி குழந்தைகளின் வயிறு நிறைந்து தொப்பை புடைத்த பின்னரும், ‘இன்னும் ஒரு வாய்’ என்று வைத்துவிடும் அம்மாக்கள் போல, இதழின் வாசிப்பனுபவத்தைத் தாண்டியும் நம் வாசகிகளுக்கு என்ன தரலாம் என்று யோசித்து எடிட்டோரியல் செயல்படுத்திய ஹிட்கள் பல. ‘உங்களுக்கே உங்களுக்கென்று ஒரு நாள்’ என்று ஊர் ஊராக நாம் நடத்திய ‘ஜாலி டே’ நிகழ்ச்சியில் திளைக்கத் திளைக்கக் கொண்டாடினர் தோழிகள். சென்னை, தீவுத் திடலில் 40 நாள்கள் பெண்களுக்கு அவள் விகடன் நடத்திய ‘மகளிர் திருவிழா’ தொழிற்பயிற்சி முகாமில் பலன்பெற்றனர் ஆயிரக்கணக்கான பெண்கள். ‘நீங்களும் தொழிலதிபர்தான்’ என்ற பெயரில் வாசகிகளுக்குத் தொழில் வாய்ப்புகளை உண்டாக்கித் தரும் பட்டறைகளை தமிழகம் முழுக்கவும், அந்தமான் வரையிலும் நடத்தியது அவள் விகடன்.

தமிழச்சி தங்கபாண்டியன், பாரதி பாஸ்கர் முதல் இப்போது பட்டுக்கோட்டை பிரபாகர் வரை அவள் விகடனில் தொடர் எழுதும் ஆளுமைகள் ஒருபக்கம் என்றால், அனுபவங்கள் முதல் கதை, கவிதை வரை வாசகிகளின் எழுத்துகளையும் சேர்த்தே இதழைப் பரிமாறுவதில் அவள் விகடனுக்குப் பெருமை அதிகம். ‘பள்ளி இறுதித் தேர்வில் பாராட்டத்தக்க மதிப்பெண் பெறும் ஏழை மாணவர்களைத் தேடி அங்கீகரிப்பது சிறப்பு’ போன்ற பாராட்டுகள் முதல் ‘வீட்டு உள் அலங்காரம் பற்றிய கட்டுரை வந்து வெகுநாள்கள் ஆகிவிட்டதே’ போன்ற நினைவூட்டல்கள் வரை, இதழ் தயாரிப்புப் பணிகளில் எங்களை உப்பு, காரம் சரிபார்க்க வைக்கும் வாசகிகளின் வார்த்தைகளுக்கு நன்றிகள் பல. உங்கள் ரசனை, தேவைக்கேற்ப படைப்புகளை கோத்ததன் பலன் விற்பனையில் எதிரொலிக்க, 2005-ம் ஆண்டிலிருந்து தமிழின் நம்பர் 1 பெண்கள் பத்திரிகையாக அவள் விகடன் மகுடம் சூட்டிக்கொண்டிருப்பதும் உங்களால்தானே தோழிகளே!
நம் பயணமும், எங்கள் பொறுப்பும் தொடர்கிறது. ஒவ்வோர் இதழுக்கும் ஆயிரக்கணக்கில் தபாலிலும் மெயிலிலும் வந்து குவியும் உங்கள் கடிதமெனும் அன்பில் திக்குமுக்காடி நிற்கிறோம். மகிழ்ச்சி, தன்னம்பிக்கை, விழிப்புணர்வு, ஆரோக்கியம், பொழுதுபோக்கு என உங்களுக்கு எல்லாம் கொண்டுவந்து சேர்க்கும் முனைப்புடன் பயணத்தைத் தொடர்கிறோம்... இறுக உங்கள் கைகளைப் பற்றிக்கொண்டு!
உரிமையுடன்
ஸ்ரீ
ஆசிரியர்