
பொங்கியெழுந்த மாணவிகள்... தோள்கொடுத்த உயர் நீதிமன்றம்!
‘ஆண்களுக்கு அனுமதி உண்டு, எங்களுக்கு ஏன் இல்லை?’
- இப்படி ஒவ்வோர் உரிமைக்கும் பெண்கள் நடத்திய/நடத்த வேண்டிய போராட்டங்கள் நெடியது. என்றாலும், அதற்கு ஆதரவாக நீதிமன்றங்கள் குரல்கொடுத்து, ஆணாதிக்கத்துக்கு எதிராகத் தீர்ப்பை எழுதும்போது, அப்போராட்டங்களுக்கு பெரிய பலமும், அங்கீகாரமும் கிடைத்துவிடுகிறது. சமீபத்தில் அப்படி கேரள கல்லூரி மாணவிகளுக்குத் தோள் கொடுத்துள்ளது, அம்மாநில உயர் நீதிமன்றம்.
கோழிக்கோடு, அரசு மருத்துவக் கல்லூரி பெண்கள் விடுதியில், இரவு 9.30 மணிக்குமேல் மாணவிகள் வளாகத்தில் நடமாடக் கூடாது, வெளியே செல்லக் கூடாது என்பது விதி. ஆனால், நூலகம் உள்ளிட்ட கல்லூரியின் பிற வசதிகள் 11.30 மணி வரைக்கும் திறந்திருக்கும் நிலையில், இது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவே இருந்தது. ஆண்கள் விடுதிக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், தங்களுக்கு மட்டும் ஏன் என்று போராட்டங்கள் நடத்தினர் மாணவிகள். நிர்வாகம் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.
மாணவிகள் உயர் நீதிமன்றப் படியேற, கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின்மீது கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம், ‘தகுந்த காரணங்கள் இருந்தால் மட்டுமே இந்தக் கட்டுப்பாடுகளை நியாயப்படுத்த முடியும்’ என்று சாடியுள்ளது.
பாதுகாப்பு என்ற பெயரிலேயே காலம் காலமாகப் பெண்கள் கட்டுப்படுத்தப்படும் வழக்கத்தை, கூர்மையான வார்த்தைகளால் கேள்விக்கும் கண்டனத்துக்கும் உட்படுத்தி யிருக்கிறது நீதிமன்றம். `இந்த நவயுகத்திலும் பாலின அடிப்படையிலும், பாதுகாப்பு என்ற போர்வையிலும் செலுத்தப்படும் எந்த வகையான ஆணாதிக்கத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆண்களைப்போல பெண்களும் தங்களை தாங்களே பாதுகாத்துக்கொள்ளக் கூடியவர்கள். பெண்களைத் திறமையாளர்களாக்க முயற்சி எடுப்பது அரசு மற்றும் அதிகாரிகளின் கடமை. மாறாக, அவர்களை முடக்குவது அல்ல’ என்று முழுமையாக மாணவிகள் பக்கம் நின்று பேசியிருக்கிறார் நீதிபதி தேவன் ராமச்சந்திரன். வழக்கின் விசாரணை தொடர்கிறது.
பெண்களின் உரிமைகள் ஒவ்வொன்றும் இப்படிப் போராடி பெறப்பட்டு வருவது, பாலின சமத்துவம் முழுமையாக வென்றடைவதற்காக நம்மால் நடத்தப்படும் நற்பயணமே. நம் உரிமைகளை உறுதிசெய்வோம். அதேசமயம், நம் பாதுகாப்புக்கு சவாலாகும் வேளைகளில் அவற்றைப் பயன்படுத்த நேர்ந்தால், வீரத்துடனும் விவேகத்துடனும் சமயோசிதத்துடனும் நடந்துகொள்ள வேண்டியதும் முக்கியம்தானே தோழிகளே!
இரவு ஷிஃப்ட் வேலைகளை பாதுகாப்பு காரணங்களுக்காக பெண்களுக்கு மறுக்கக் கூடாது, சிசிடிவி கேமரா, வாகனம் உள்ளிட்ட வசதிகளை அவர்களுக்கு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டியது நிறுவனங்களின் பொறுப்பு என்று நீதிமன்றங்கள் வழங்கியிருக்கும் தீர்ப்புகள் முக்கியமானவை. அதேசமயம், வழக்கமற்ற அசாதாரண சூழ்நிலைகளிலும் நள்ளிரவு நேரங்களிலும் வீடு திரும்ப வேண்டிதான் இருக்கிறது. ஆணோ, பெண்ணோ அத்தகைய சூழல்களை எதிர்கொள்வதற்கான உரிய வழிமுறைகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியம்தானே!
உரிமைகளை வென்றெடுக்கும் போர்களை ஒருபக்கம் தொடர்வோம்... நாங்களும் சக உயிர்கள்தான் என்பதை ஆணாதிக்க சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறைவதையும் தொடர்வோம்... அதேசமயம், நம் பாதுகாப்பையும் நாமே உணர்வோம்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்