
தலையங்கம்
மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் முடித்த, மனைவியை இழந்த, பேரன், பேத்திகள் பார்த்த மதுரையைச் சேர்ந்த 61 வயது முதியவர் அவர். ஒருகட்டத்தில் முதுமையும் தனிமையுமாகத் தனித்துவிடப்பட்டார். தினமும் அவர் இட்லி வாங்கும் தள்ளுவண்டிக் கடையின் பெண்மணியின் கதையும் அதுவே. இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாகினர், ஆதரவாகினர். நேரத்துக்குச் சாப்பிட்டு, மாத்திரைகளை நினைவூட்டி, பேசிப் பகிர்ந்து ஒரே வீட்டில் வாழ ஆரம்பித்தனர். ஒருநாள், ‘ஊருக்குள்ள எங்கள அசிங்கப்படுத்துறீங்க’ என்று பிரச்னை செய்து, இருவரையும் பிரித்து `குடும்ப மானம்’ காப்பாற்றினர், பிள்ளைகள்.
கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் பகுதியைச் சேர்ந்த 62 வயது மதபோதகர், தன் தாயும் இறந்து தனிமையில் வாடிய சூழலில், முகநூல் மூலமாக 48 வயது இந்தோனேஷிய பெண்ணைக் கரம்பிடித்தார். பொங்கித்தீர்த்த உறவுகள், அந்தப் பெண்ணை வீட்டுக்குள் பூட்டிவைத்து கொடுமைப்படுத்தினர். போலீஸார் தலையிட்டு மீட்கவேண்டிய நிலை.

பதின் பருவத்தினரும், இளம்வயதுப் பிள்ளைகளும் காதல் கொண்டால், ‘உங்க வயசுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது’ என்று கொதிப்பு கொள்கின்றன குடும்பங்களும் சமூகமும். வயதான, துணையிழந்த தங்கள் பெற்றோர் இணை தேட நேரிட்டாலும் அதே கொதிப்பு கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? வாழ்க்கையின் நல்லவை, கெட்டவை எல்லாம் நெடிய தூரம் கடந்து வந்த அனுபவத்தில்தானே அந்த முடிவை எடுக்கிறார்கள்? என்றாலும், ‘காலம் போன காலத்துல அறிவு வேண்டாமா?’ என்று குடும்பங்களும் சமூகமும் கேள்வி எழுப்புகின்றன.
இதற்கு நடுவேதான் பிள்ளைகளே தங்கள் பெற்றோருக்கு மறுமணம் செய்துவைக்கும் செய்திகளை சமீப ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். கள்ளக்குறிச்சியில், தன் அப்பாவின் மறைவுக்குப் பின் 45 வயது அம்மாவுக்கு மறுமணம் செய்துவைத்த மகன்கள் பற்றியும்; கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த பெண் ஆசிரியர், தன் 59 வயது அம்மாவுக்கு மறுமணம் செய்துவைத்தது பற்றியும் அவள் விகடனில் முன்பு எழுதியுள்ளோம். கடந்த டிசம்பர் மாதம், மும்பையைச் சேர்ந்த இளம்பெண், 50 வயதான தன் அம்மாவுக்கு மறுமணம் செய்துவைத்தது சமூக வலைதளத்தில் வைரல் ஆனது. சில நாள்களுக்கு முன், மகாராஷ்டிர மாநிலத்தின் ஒரு குக்கிராமத்தை சேர்ந்த இளைஞர், 45 வயதான அம்மாவுக்கு மறுமணம் செய்துவைத்துள்ளார்.
பெற்றோர் என்ற ‘புனித’ மற்றும் ‘பொறுப்பு’ப் போர்வையை தாண்டி, சம்பந்தப்பட்டவர் களின் வாழ்நாள்களைப் புரிந்துகொண்டு, பிள்ளைகளே மறுமணம் செய்துவைக்கும் இத்தகைய முன்னெடுப்புகள் வரவேற்கப்பட வேண்டியவையே!
வாழ்க்கையில் எத்தனையோ வழமைகள் மாறிவருகின்றன... மாற்றப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், முதுமையில் துணை தேவை என்பதை `கலாசார கண்' கொண்டுபாராமல், எதார்த்தத்துடன் பொருத்திப் பார்ப்போம். காலம் முழுக்கப் பொறுப்புகள் நிறைவேற்றி, கடைசிக் காலத்தில் கொடுமையான தனிமையுடன் உழன்று கொண்டிருப்பவர்களுக்கான இணை தேவையை புரிந்துகொள்வோம்!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்