
தலையங்கம்
தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள்தான் பண்டிகையா?
அது பொங்கல் மாதம். அந்த வீட்டின் வரவேற்பறையில் தன் ஐந்து வயது மகனுடன் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தனர் பெற்றோர். அதில், விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ஒரு புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பு மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய விளம்பரங்கள் வர, ‘அம்மா மறுபடியும் தீபாவளி வரப்போகுதா?’ என்று கேட்டது அந்த வாண்டு. ஆம்... நம் குழந்தைகளுக்கு பண்டிகை என்பது தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள் என்றாகிக்கொண்டிருக்கிறது.
`இந்தக் காலத்துல, கிராமத்துக்குப் போய் மண் பானையில பொங்கல் வெச்சு குலவை போடுறதெல்லாம் யாரால முடியும்? கலாசார கிளாஸா..?’ என்று சிலர் நிதர்சனமும் இயலாமையும் கலந்த தங்கள் சூழலை வெளிப்படுத்தலாம். கலாசாரம் என்பது என்ன? பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த மனித இனக்குழுக்கள், தங்களின் சமூகப் பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள், சட்ட திட்டங்கள், கலை எனப் பல்வேறு கூறுகளை உள்ளடக்கியதாகத் தங்கள் கலாசாரத்தை வரையறுத்து வைத்தனர். அது காலத்துக்கேற்ற தகவமைப்புகளைக் கொண்டிருக்கும்போதுதான், அந்த இனக்குழு முன்னேற்றமடையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அப்படித்தான், முன்தோன்றிய மூத்த குடியாக, உலகின் ஆதி நாகரிகமாகச் சொல்லப்படும் தமிழ் இனம், இந்த மெட்டா நூற்றாண்டிலும் மிளிர் நடை போடுகிறது.
கலாசார தகவமைப்புகளை சுவீகரித்துக்கொள்ளும் அதே நேரம், நாம் யார், நம் வரலாறு என்ன, வரலாற்றில் நம் இடம் என்ன உள்ளிட்ட நம் வேர் பற்றியும், வளரும் தலைமுறையின் உள்ளங்கையில் பிடிமண் கொஞ்சம் வைக்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது. குக்கர் பொங்கலின் சௌகர்யத்தில் குறை சொல்ல ஒன்றுமில்லை. அது அவரவர் வாழ்க்கை முறை மற்றும் வாழும் இடங்களைப் பொறுத்தது. அதே நேரம், மொழி முதல் சமூக அரசியல் வரை நம் மரபுகளைப் பற்றிச் சொல்ல சமுத்திரம் அளவுக்கு உள்ள சிறப்புகளில், நம் பிள்ளைகளை கால் நனைய வைப்பதில் பெரிதாக எந்தப் பிரச்னையும் இல்லைதானே! அது குறித்த சிறு சிறு உரையாடல்களை இந்தப் பண்டிகை தினங்களில் இளைய மனங்களில் பதியமிடலாம்.

இன்று நாம் நம் பிள்ளைகளுக்குக் கைமாற்றும் பண்டிகைகளும் பாரம்பர்யங்களும், நாளை உலகின் எந்த மூலைக்கு அவர்கள் சென்றாலும், தமிழர் என்ற அடையாளம் தன்னம்பிக்கை பட்டயமாக அவர்களைத் தாங்கும் வகை செய்யும். அதே நேரம், நம்மைப் போலவே எல்லா மொழிகளுக்கும், எல்லா இனங்களுக்கும் தனிச் சிறப்புண்டு என்பதையும், அடையாளம் எப்போதும் அதிகாரமாகிவிடக் கூடாது என்பதையும் சேர்த்து உணர்த்த வேண்டிய பொறுப்பும் புரிந்துணர்வும் நமக்கு வேண்டும்.
பொங்கல் விடுமுறையால் அலுவல் வேலைகளை முன்கூட்டியே முடிக்க வேண்டிய பரபரப்பில், `ஊருக்கு வேற கிளம்பணும். மாக்கோலம் போடணும், பானைக்கு மஞ்சக்கொத்து கட்டணும்னு அங்க வேற அடுக்குவாங்க...’ என்று சலித்துக்கொண்டவளை நிறுத்தி, நேருக்கு நேர் பார்த்துக் கேட்டாள் தோழி, ‘ஆயிரம் சொல்லு... தீபாவளி, பொங்கல்னா பையைத் தூக்கிக்கிட்டு ஊருக்குக் கிளம்புறது சந்தோஷமா இல்லையா உனக்கு?!’
நான்கு கண்களும் இப்போது ஒளிர்ந்து பூத்தன!
உரிமையுடன்,
ஸ்ரீ
ஆசிரியர்