ஆசிரியர் பக்கம்
என்டர்டெயின்மென்ட்
தன்னம்பிக்கை
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
Published:Updated:

நமக்குள்ளே...

நமக்குள்ளே...
News
நமக்குள்ளே...

தலையங்கம்

பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லைகள், பெரும்பாலும் தெரிந்த வட்டத்தில் உள்ளவர்களாலேயே நடக்கின்றன என்பதை சொல்லி எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள் வந்தபடியே இருக்கின்றன. சிறுமிகளுக்கு, `டோன்ட் டச்’ விழிப்புணர்வு தருவதும், ஒருவேளை தனக்கு அது நேர்ந்தால் அதை வெளிப்படுத்த தைரியம் தருவதுவுமே இந்தக் குற்றம் தடுக்கப்பட வழிவகுக்கும்.

அந்த வகையில் அரசு, அமைப்புகள், தன்னார்வலர்கள், தனிநபர்கள், குடும்பங்கள் வரை பெண் குழந்தைகளிடத்தில் பாலியல் தொல்லைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த இன்று பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன் பலனை கண்முன்னே பார்க்கும்போது, பெரிய நம்பிக்கை ஏற்படுகிறது. அப்படி ஒரு நிகழ்வுதான், சமீபத்தில் பொள்ளாச்சி மாவட்ட பள்ளி ஒன்றில் நடந்திருக்கிறது.

பள்ளி மாணவிகளுக்கு நேரும் பாலியல் குற்றங்களைத் தடுக்க, மாவட்ட கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து செயல்படுத்தி வரும் திட்டம், ‘புராஜெக்ட் பள்ளிக்கூடம்.’ ஆனைமலையில் உள்ள ஒரு பள்ளியில் சமீபத்தில், தவறான நோக்கத்துடனான தொடுதல் பற்றிய விழிப்புணர்வு வகுப்பு எடுக்கப்பட்டபோது, மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது 13 வயதுச் சிறுமி ஒருவர், தங்கள் ஊரில் மளிகைக்கடை நடத்தி வரும் நடராஜன், தன்னை அவ்வாறு சிறார்வதை செய்ததாகச் சொல்ல, அவரைத்தொடர்ந்து 9 வயது முதல் 13 வயது வரையிலான 14 சிறுமிகள், ‘எங்களிடமும் அந்த தாத்தா அவ்வாறு நடந்துகொண்டார்’ என்று 62 வயதாகும் நடராஜனை குறிப்பிட்டுச் சொல்ல, காவல்துறை தரப்பும் பள்ளித் தரப்பும் அதிர்ந்துபோயினர்.

தொடர்ந்து, பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட, நடராஜன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கட்டுடைக்கப்பட்ட சிறுமிகளின் மௌனம், ஒரு குற்றவாளியை வெளிப்படுத்தி தண்டிப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதுமட்டுமா..? அந்த ஊரில் இன்னும் பல சிறுமிகள் அவரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்படாமல் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள். அந்த ஊர் மட்டுமல்லாது, ‘புராஜெக்ட் பள்ளிக்கூடம்’ திட்டம் மூலம் இந்தச் செய்தி சென்று சேரும் அனைத்து ஊர் சிறுமிகளுக்கும், இந்தச் செய்தியைக் கேள்விப்படும் அனைத்துப் பெண்களுக்கும், `நாமும் சொல்வோம்’ என்ற தைரியம் அவர்கள் மனதில் நிச்சயம் ஊன்றப்படும்.

பள்ளி, கல்லூரி மாணவிகளிடமும், பெண்களிடமும் பாலியல் தொல்லைக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் அதிகம் மேற்கொள்ளப்பட்டு வருவதைத் தொடர்ந்து, தற்போது பாலியல் தொல்லைக்கு எதிரான புகார்கள் அதிகம் பதியப்படுவதை, மாற்றம் என்பதைவிட புரட்சி என்றே சொல்ல வேண்டும். ஆணாதிக்கத்தால் இத்தனை காலமாக வாய்ப்பூட்டு போடப்பட்டிருந்த மௌனத்தை தகர்க்க ஆரம்பித்திருக்கும் புரட்சி.

மேலும், மாநில பள்ளிப் பாடப்புத்தகத்தில் 14417 ஹெல்ப்லைன் எண் அச்சடிக்கப்பட்டு சென்ற வருடம் செப்டம்பரில் விநியோகிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த எண்ணுக்கு இதுவரை 166 பாலியல் புகார் அழைப்புகள் வந்திருப்பதைக் குறிப்பிடுகின்றனர் பள்ளிக்கல்வித் துறையினர். 1098 என்ற சைல்டு ஹெல்ப்லைன் நம்பரையும் குறித்துக்கொள்வோம், பிள்ளைகளுக்குக் கையளிப்போம் தோழிகளே.

குரல்கள் எழும்பட்டும்!

உரிமையுடன்,

ஸ்ரீ

ஆசிரியர்

நமக்குள்ளே...