சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

நிலம்... நீர்... நீதி!

நரியம்பாக்கம் ஏரி
News
நரியம்பாக்கம் ஏரி

2015 பெருமழை வெள்ளத்தின்போது மிகவும் பாதிக்கப்பட்டவை... தாம்பரம் அருகேயுள்ள வரதராஜபுரம், முடிச்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்தான்.

நவம்பர் 6 முதல் பெய்த கனமழை, சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளைத் தண்ணீரில் தத்தளிக்க வைத்துவிட்டது. 2015-ம் ஆண்டைப் போலவே மழையால் நிலைகுலைந்தது சென்னை. அதற்கு முக்கிய காரணமே, நீர்நிலைகளைச் சரிவரப் பராமரிக்காமல் விட்டதுதான். இதை உணர்ந்தே, நீர்நிலைகளைச் சீரமைக்கும் பணிகளை ‘நிலம் நீர் நீதி!’ என்கிற பெயரில் வாசகர்களின் பங்களிப்போடு ஆனந்த விகடன் முன்னெடுத்தது.

நிலம்... நீர்... நீதி!

இந்தத் திட்டத்துக்காக நீரியல் நிபுணர்கள், நீர்நிலைகளின் பாதுகாப்பில் அக்கறையுள்ள தன்னார்வலர்கள் என்று பலரின் கருத்துகளையும் கேட்டுப்பெற்றோம். சென்னையில் எங்கெங்கு வெள்ளம் தேங்குகிறது; தேங்காமல் தடுப்பது எப்படி என்பது குறித்தெல்லாம் ஆலோசிக்கப்பட்டது. இந்தியாவின் `தண்ணீர் மனிதர்' என்று புகழப்படும் ராஜஸ்தானின் ராஜேந்திர சிங் உள்ளிட்ட பலரைக் கொண்டு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. நிபுணர்களையெல்லாம் நேரடியாக நீர்நிலைகளுக்கு அழைத்துச் சென்று ஆய்வுகளையும் மேற்கொண்டோம். பொதுமக்கள் பங்கேற்கும் வகையிலான கலந்தாய்வுக் கூட்டம் ஒன்றை 2016 ஏப்ரலில் சென்னை லயோலா கல்லூரியில் நடத்தினோம்.

இதைத் தொடர்ந்து சென்னைக் கூவம், அடையாறு ஆறுகளின் சில பகுதிகளை முன்மாதிரியாகச் சீரமைத்துத் தருவதற்காக அரசாங்கத்தின் அனுமதியைக் கேட்டோம். பல்வேறு காரணங்களால் அனுமதி கிடைக்கவில்லை.

நரியம்பாக்கம் ஏரி - தூர் வாருவதற்கு முன்பு
நரியம்பாக்கம் ஏரி - தூர் வாருவதற்கு முன்பு
நரியம்பாக்கம் ஏரி - இப்போது...
நரியம்பாக்கம் ஏரி - இப்போது...

2015 பெருமழை வெள்ளத்தின்போது மிகவும் பாதிக்கப்பட்டவை... தாம்பரம் அருகேயுள்ள வரதராஜபுரம், முடிச்சூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்தான். அடையாற்றில் பெருக்கெடுத்த நீரால்தான் பல குடியிருப்புகள் நீரில் மூழ்கின. `அடையாற்றுக்குத் தண்ணீர் வழங்கும் ஏரிகளைத் தூர்வாரி மழைநீரைத் தேக்கினால், வெள்ள பாதிப்பைப் பெருமளவு குறைக்கமுடியும்' என்பது, நிபுணர்கள் நமக்களித்த பரிந்துரைகளில் ஒன்று.

அந்த வகையில் அடையாற்றில் கலக்கும் ஏரிகளான சாலமங்கலம் ஏரி, நரியம்பாக்கம் ஏரி, சிறுமாத்தூர் ஏரி ஆகியவற்றைச் சீரமைக்க முடிவெடுத்தோம். அன்றைய முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு இந்த விஷயத்தை நாம் கொண்டு சென்றோம். உடனடியாக அவர் உத்தரவுகளைப் பிறப்பிக்க, பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகங்கள் துணையோடு அந்த மூன்று ஏரிகளையும் தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்திக் கொடுத்தோம்.

அதைத் தொடர்ந்து ஆண்டுதோறும் கிடைக்கும் மழைநீர் இந்த ஏரிகளில் முழுமையாகச் சேமிக்கப்பட்டு, விவசாயம் உள்ளிட்ட பணிகளுக்காகத் தொடர்ந்து பயன்பட்டு வருகிறது. தற்போதைய மழையிலும் வண்டலூர்-ஒரகடம் சாலையில் 103 ஏக்கர் பரப்பளவில் உள்ள சாலமங்கலம் ஏரி, முழுவதுமாக நிரம்பிவிட்டது. மீன்கள் துள்ளிக் குதித்துக் கொண்டிருக்கின்றன.

அதே பகுதியில் உள்ள நரியம்பாக்கம் ஏரியும் தண்ணீர் ததும்பக் காட்சியளிக்கிறது. 71 ஏக்கர் பரப்பளவு கொண்டது நரியம்பாக்கம் ஏரி. 1.3 கி.மீ தொலைவுக்கு நீண்டிருக்கும் இதன் கரையைப் பலப்படுத்தி, உயர்த்தியுள்ளோம். ஏரியின் கரைக்குக் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில், உள்பக்கமாக கான்கிரீட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஆக்கிரமிப்பு நிகழாதவாறு எதிர்க்கரை அமைக்கப்பட்டு, பனைமர விதைகளும் விதைத்திருந்தோம். அவை, இப்போது முளைத்து வளர்ந்திருக்கின்றன.

இதே பகுதியில் 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள சிறுமாத்தூர் ஏரியும் 95 சதவிகிதம் நிரம்பி இருக்கிறது. இதிலிருந்து மணிமங்கலம் ஏரிக்குத்தான் நீர் செல்கிறது. தூர்ந்துபோயிருந்த அந்தக் கால்வாயும் சீரமைக்கப்பட, அதுவும் தற்போது பயன் தந்துகொண்டிருக்கிறது.

இந்தப் பணிகளால் வெள்ள பாதிப்பு தடுக்கப்படுவதுடன், விவசாயத்துக்கும் நீர் கிடைக்கிறது. ஆடு மாடுகளுக்கும், வனவிலங்குகளுக்கும், பறவைகளுக்கும் தண்ணீர் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஆனந்த விகடன் நிறுவனத்தின் அறத்திட்டப் பணிகளுக்காக இயங்கிவரும் வாசன் அறக்கட்டளை மூலமாகத்தான் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 2016 ஜூலையில் தொடங்கிய சீரமைப்புப் பணிகள், 2017-ம் ஆண்டே முடிக்கப்பட்டன. அன்று இந்தப் பணிகளுக்காக வாசகர்கள் அள்ளிக்கொடுத்த ஒரு கோடியே 25 லட்ச ரூபாயுடன், விகடனும் தன் பங்களிப்பாக ஒரு கோடி ரூபாயைச் சேர்த்தது. அதன் பலனாக, இப்போது மூன்று ஏரிகளும் நீர் நிரம்பிக் கடல்போல காட்சியளிக்கின்றன. அடையாறு ஆற்றில் உபரியாக ஓடிக் கடலில் மழைநீர் கலப்பதும் குறைக்கப்பட்டுள்ளது.

நரியம்பாக்கம் ஏரியின் கலங்கல் பகுதி  - அப்போது
நரியம்பாக்கம் ஏரியின் கலங்கல் பகுதி - அப்போது
நரியம்பாக்கம் ஏரியின் கலங்கல் பகுதி  - இப்போது
நரியம்பாக்கம் ஏரியின் கலங்கல் பகுதி - இப்போது

பொதுப்பணித் துறை மற்றும் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் உதவியோடு வாசகர்கள் மற்றும் ஆனந்த விகடன் இணைந்து முன்னெடுத்த இந்தப் பணிகள் சிறப்பாக அமைந்த சூழலில், கடந்த 2018-ம் ஆண்டில் குடிமராமத்துப் பணி என்பதை முன்னெடுத்தது தமிழக அரசு. இதன் பலனாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 90 சதவிகிதத்துக்கும் மேலான ஏரிகள் தூர்வாரப்பட்டு, நீர் நிரம்பியிருக்கின்றன. 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, இரண்டு தடவை பெருமழை பெய்திருக்கும் நிலையில், வரதராஜபுரம் மற்றும் முடிச்சூர் பகுதிகள் மிகமோசமான பாதிப்புக்குள்ளாகாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

அடையாற்றின் உப வடிநிலப்பகுதிகளாக இருக்கும் மலைப்பட்டு ஏரி, முடிச்சூர் ஏரி, ஆதனூர் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, இன்னும் ஆழப்படுத்தினால் அடையாற்று வழியாகப் பாய்ந்து தென்சென்னை மற்றும் தாம்பரம் பகுதிகளை மூழ்கடிக்கும் வெள்ளத்தைத் தடுக்கமுடியும். தமிழக அரசு இதைச் செய்து, இனி எத்தனை பெருமழை வந்தாலும் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்கிற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

******

நிலம் நீர் நீதி திட்டத்துக்கான நிதி மேலும் கைவசம் இருக்கிறது. அதைக்கொண்டு இன்னும் சில ஏரிகளைத் தூர்வாரி சீரமைக்கும் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. தமிழக அரசு அதிகாரிகளின் துணையோடு ஏரிகளை அடையாளம் கண்டுவருகிறோம். விரைவில் இதைப்பற்றிய விவரங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வோம்.