சினிமா
Published:Updated:

ஆன்லைன் ஆஃப்லைன் ஆலாபனைகள்! - 2021

டி.எம்.கிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
News
டி.எம்.கிருஷ்ணா

படங்கள்: நிக் ஹெச், கலாகேந்திரா

மாதாமாதம் பாடுபவராக இருந்தாலும், மாமாங்கத்துக்கு ஒரு முறை கச்சேரி மேடையேறுபவராக இருப்பினும் டி.எம்.கிருஷ்ணா பாடுவதைக் கேட்பது தனி அனுபவம்.

எந்த வில்லங்கமும் இல்லாமல் கச்சேரியை கிருஷ்ணா ஒழுங்காகப் பாடி முடிக்க வேண்டுமே என்று பக்கத்து கபாலி கோயிலில் வேண்டிக்கொண்டு பாரதிய வித்யா பவனை நிரப்பியவர்கள் அன்று மனம் குளிர்ந்திருப்பார்கள். முதல் அரைமணி நேரத்துக்குத் தனது கணீரென்ற காந்தக் குரலால் பிலஹரியை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மறுபடியும் அசெம்பிள் செய்து அசத்தினார் டி.எம்.கிருஷ்ணா. எடுத்த எடுப்பில் சிறிது தானம் செய்துவிட்டு, பிலஹரியின் அத்தனை பரிமாணங்களையும் Zoom லென்ஸ் வழியே துல்லியமாகக் காண்பித்தார்.

தியாகராஜரின் மிகப்பிரபலமான ‘நாஜீவாதார...' பல்லவி வரியைப் பலவித ஏற்ற இறக்கங்களுடன் பாடி, ‘ராஜராஜ சிரோண்மணி...’யை நிரவலுக்கு எடுத்து கபடி ஆடி, முழுப்பாடலை அவர் நிறைவு செய்தபோது மூன்லைட் டின்னர் சாப்பிட்ட திருப்தி!

அடுத்து, வராளி ராக ஆலாபனையை கேப்டனின் கட்டளையின்படி முதலில் வயலினில் வாசித்தார் அக்கரை சொர்ணலதா. வராளி சங்கதிகளால் வாளி நிரம்பிய பின்னும் ‘இன்னும் வாசி...' என்று கேட்டுக்கொண்டார் கிருஷ்ணா. சொர்ணா தொடர்ந்து வாசிக்க, ரிலே ரேஸ் மாதிரியாக வழியில் இவர் ராகத்தை வாங்கி உரமிட்டு வளர்த்தார். ஒரு கட்டத்தில் வராளியில் தன்னை முழுவதுமாகத் தொலைத்துவிட்டவராக மூன்று நிமிடங்கள் மேடையில் தலை குனிந்து முழு மௌனம். அது கலைந்து பாடியபோது மிருதங்கம், கடம் வாசிப்பை நிறுத்தப் பணித்துவிட்டு வயலினுடன் மட்டும் சியாமா சாஸ்திரியின் ‘கருணஜுடவம்மா'வைக் கிருஷ்ணா வேண்டியது மியூசிக்கல் தியானம்!

பாரதியாரின் ‘சுட்டும் விழி கண்ணம்மா’வை பிலஹரி-பைரவி-சாமா - வசந்தா ராகங்களில் பாடிவிட்டு, தனது குரலுக்கு மிகவும் பொருத்தமான கீரவாணியில் ராகம் தானமும், தியாகராஜரின் ‘கலிகியுண்டே கதா...’வும் டி.எம்.கே பாடியது புதுவருட போனஸ்!

‘எல்லாம் சிவன் செயல் என்று கவலையின்றி இருப்பாய் நீ மட நெஞ்சமே' - கிருஷ்ணா பாடிய மற்ற பாடல்களில் இந்தக் கல்யாணி ராகப் பாடலும் ஒன்று!

ஆன்லைன் ஆஃப்லைன் ஆலாபனைகள்! - 2021

சபாக்களின் கூட்டமைப்பு நடத்தும் ‘yours truly’ தொடக்க விழா சுருக்கமானது, சுவையானது. அப்போலோவின் நிர்வாக இயக்குநர் சுனிதா ரெட்டி துளிபோல வீடியோவில் பேச, டெல்லியிலிருந்து கல்சுரல் அமைச்சர் அனுப்பியிருந்த வாழ்த்துமடல் வாசிக்கப்பட, நன்றி நவிதலுடன் விழா ஓவர்! ஆன்லைனற்ற சகஜ நிலைமை திரும்பியதற்கு அப்பாலும் சங்கீதத் தொடக்க விழாக்களை இப்படித் துரித கதியில் முடிக்கலாமே!

கூட்டமைப்பின் சார்பில் ஒருநாள் ஏ.எஸ்.முரளி பாடினார். மறுநாள் ஸ்ரீரங்கத்துக்குக் காரில் போய்க் கொண்டே ‘yours truly’யுடன் பேசினார்.

பெரிய இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் முரளி. அப்பா, அம்மா பலமான அஸ்திவாரம் போட்டுவிட, சகோதரர்கள் ஏ.எஸ்.ரங்கநாதன் மிருதங்கத்துடனும், ஏ.ஏஸ்.கிருஷ்ணன் மோர்சிங்குடனும் ஏ.எஸ்.சங்கர் கடத்துடனும் ஐக்கியமாகிவிட்டார்கள். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக கலாக்ஷேத்ராவில் விரிவுரையாளராகப் பணிபுரிந்துவருகிறார் முரளி. மறைந்த வித்வான் பி.எஸ்.நாராயணசுவாமியின் முக்கியமான சீடர். வார்த்தைக்குப் பத்துத் தடவை ‘எங்க வாத்தியார்’ என்று குறிப்பிடும் அளவுக்கு குருபக்தி அதிகமிக்கவர். பயோடேட்டா போதுமா!

சீடர்கள் இருவரைப் பின்னால் அமர்த்தி வைத்துப் பாடினார் ஏ.எஸ்.முரளி. பட்டணம் சுப்பிரமணிய ஐயரின் ஆபோகி வர்ணத்துடன் போணி. ஆடல், அலட்டல் இல்லாமல் தெளிவான உச்சரிப்புடன் பாடுகிறார். அமைதியே உருவானவராகத் தெரிகிறார். செம்மங்குடி ஸ்கூலின் இலக்கணம் மீறாத இசை ஞானம், இவர் பாடும்போது நிழலாக உடன் வருகிறது.

பந்துவராளியில் ‘சிவ சிவ...' எனும் தியாகராஜரின் விறுவிறு பாடலும் தொடர்ந்த ஸ்வரங்களும் சானிட்டைசர் பயன்படுத்திய மாதிரி அத்தனை சுத்தம். ஜிகினா வேலைப்பாடுகள் எதுவும் கிடையாது. மெயின் ராகமாக மத்யமாவதி. சியாமா சாஸ்திரியின் ‘பாலிஞ்சு காமாட்சி...' ஒவ்வொரு ஸ்தாயியிலும் வெளிப்படுத்த வேண்டிய சங்கதிகளை வெள்ளிப் பாலாடை கொண்டு புகட்டி விட்டுச் சென்றிருக்கிறார் கில்லாடி குருவாகத் திகழ்ந்த பி.எஸ்.என்.

இந்த சீசனில் கிருஷ்ணகான சபா நிகழ்வுகள் டிசம்பர் 15-ல் தொடங்கி ஜனவரி முதல் தேதி வரை லைவ். பதினெட்டு மாதங்களுக்குப் பின்னர் ஹாலுக்குள் நுழைந்ததும் ஏ.சி-யிலிருந்து பச்சைக்கற்பூரம் கலந்த குளிர்காற்று சுகமாக வரவேற்றது. சபாவின் சி.இ.ஓ. சாஸ்வதி அருகில் நிற்க, சபா தலைவர் நல்லி குப்புசாமி குத்துவிளக்கு ஏற்றி வைத்து இரண்டே முக்கால் வார்த்தைகள் பேச, இதைவிடச் சுருக்கமாக எவராலும் தொடக்க விழாவை நடத்த முடியாது!

முதல் கச்சேரி அமிர்தா முரளி. பாடகிக்கும் பக்கவாத்தியக் கலைஞர்களுக்குமிடையே சமூக இடைவெளி இருக்கும்படி மேடை அமைக்கப்பட்டிருந்தது. மறுநாள் பழையபடி சகஜ நிலைமைக்கு மேடை மாறிவிட்டதாகக் கேள்வி! இன்னொரு நாள் ராகா பாடியபோது பழையபடி சோஷியல் டிஸ்டன்ஸிங் மேடை! என்னவாக்கும் குழப்பம்?

அமிர்தா முரளியின் கச்சேரியில் முன்பைவிட விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் கூடிவிட்டது என்பது மகிழ்வான தகவல். இதற்காகத் தனியாக பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டாரோ! வழக்கம் போல் பிரார்த்தனை சுலோகம் பாடிவிட்டு கல்யாணியில் வர்ணம். ஜகன்மோகினி ராக ஆலாபனை கலக்கல்ஸ். சங்கதிகள் வேக வேகமாக வந்து விழுந்தன. ‘என்மீது அருள் பாலிக்க இதுவே சரியான தருணம்' என்று தேவியிடம் சியாமா சாஸ்திரி வேண்டும் பாடலை வேண்டிய பாவங்களுடன் பாடினார் அமிர்தா.

இசை தெரிந்த யார் பாடினாலும் ‘வெல்கம்’ என்று அணைத்துக்கொள்ளும் ராகம் கீரவாணி. அப்படியானதொரு ராகத்தை ராகம்-தானம்-பல்லவிக்கு எடுத்தாண்டார் அமிர்தா முரளி. வெற்றியும் கண்டார்!

ஏ.எஸ்.முரளி, அமிர்தா முரளி, ஐஸ்வர்யா சங்கர், டாக்டர்.செளம்யா சுவாமிநாதன்
ஏ.எஸ்.முரளி, அமிர்தா முரளி, ஐஸ்வர்யா சங்கர், டாக்டர்.செளம்யா சுவாமிநாதன்

ஜோன்புரி ராகத்தில் கோபாலகிருஷ்ண பாரதி இயற்றிய ‘எப்போ வருவாரோ' சினிமாவிலும் கர்நாடக இசை மேடைகளிலும் காலத்தைக் கடந்து நிற்கும் அட்டகாசமான பாடல். நாத இன்பம் நடத்திவரும் டிசம்பர் இசை விழாவில் பங்கேற்ற ஐஸ்வர்யா சங்கர், கடைசியாக இந்தப் பாடலைக் குரலெடுத்துப் பாடியபோது, அந்த நாள் கிராமபோன் பெட்டியிலிருந்து தேர்ந்த பாடகியொருவர் இசைக்கும் பிரமையேற்பட்டது உண்மை.

நீண்ட நேரத்துக்குக் கச்சேரி ஸ்லோமோஷனில்தான் நகர்ந்துகொண்டிருந்தது. திருவாரூர் ஐங்கலகாசு விநாயகர்மீது மலஹரி ராகத்தில் தீட்சிதர் இயற்றிய ‘பஞ்சமாதங்க முக கணபதி’யைப் பாடிவிட்டு தியாகராஜரின் ‘ராக ஸுதா ரஸ...’வை எடுத்தார். அன்று குரல் சரியில்லையோ என்னவோ, கீழ் ஸ்தாயியில் சற்றே திணறினார் ஐஸ்வர்யா.

முகாரியில் ‘கன்றின் குரலைக் கேட்டுக் கனிந்து வரும் பசு...'வைத் தொடர்ந்து மேதகு சங்கராபரணம் வருகை புரிந்தார். சும்மா சொல்லக்கூடாது, ஆபரண ராகத்தை மசாலாக் கலப்பின்றி படுசுத்தமாக வளர்த்துச் சென்று ‘நான் சுகுணா வரதாச்சாரியின் மாணவி’ என்பதை நிரூபணம் செய்தார் ஐஸ்வர்யா. ‘நீ எளியவனின் நண்பனென்றும், தேவாதி தேவனென்றும், தர்மாத்மாவென்றும் ஞானச் செல்வர்கள் உன் குணங்களைத் துதி பாடினால் நீ அவர்களை விரைவில் கண் பாராயோ?' என்று ராமனைக் கேள்விகளால் தியாகராஜர் தர்மசங்கடபடுத்தும் ‘ஏமி நேரமு நன்னுப்ரோவ' பாடலை ஐஸ்வர்யா பாடியபோது, அந்த உஞ்சவிருத்தி துறவியின் துணிச்சல் திகைக்கச் செய்தது.

வயலின் ஆர்.கே.ஸ்ரீராம்குமார், எம்.எஸ்., காலம்தொட்டு ஏராளமானவர்களுக்கு சங்கராபரணம் வாசித்துவருபவர். வில்லை இடதுகையால் இழுத்தால்கூட சங்கராபரணம் சொல்பேச்சுக் கேட்கும்!

மியூசிக் அகாடமியின் இசைவிழா இந்த வருடமும் விர்ச்சுவல்தான். அகாடமி தலைவர் என்.முரளி இந்த நியூ நார்மலும் பழகிவிட்டதுபோல் அதே சித்தரஞ்சனி ராக ‘நாததநு மநிசம்’ பிரேயர்... அதே விரிவான வரவேற்புரை என்று எதையும் விட்டுவைக்கவில்லை. அடுத்த டிசம்பருக்குள் பேண்டமிக் புறவாசல் வழியே ஓடிவிடும் என்ற நம்பிக்கை அவருக்கு இருக்கிறது. லைவ் சீசன் ஆரம்பித்துவிடலாம் என்ற பாசிட்டிவ் எண்ணம் அவரது உரையில் வெளிப்பட்டது. விட்டுப்போன இரண்டு கலைஞர்களையும் சேர்த்து ஒரே மேடையில் மூவருக்கு ‘சங்கீத கலாநிதி' கொடுத்துவிடும் எண்ணமும் அவர் மனதில் ஓடிக்கொண்டிருப்பது புரிந்தது. கலாநிதிக் கனவில் இருப்பவர்கள் காய் நகர்த்தலாம்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் ஜெனிவாவிலிருந்து தொடக்கவுரை ஆற்றினார். அது பக்கத்து வீட்டு ஜன்னல் வழியே பேசுவதுபோல் அவ்வளவு தெளிவு. உரையின் முதல் பகுதியில் தனக்கும் அகாடமிக்கும் உள்ள தொடர்பினை விவரித்தார். சென்னையில் தங்கியிருந்த சுமார் 30 வருடகாலத்தில் அகாடமியில் கச்சேரிகளைக் கேட்டதுண்டு என்றார். பாட்டியுடன் பார்த்த பாலசரஸ்வதியின் பரத நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தார். இதுவே லைவ் ஆக இருந்திருந்தால் டாக்டருக்கு நிறைய கைத்தட்டல்களை அள்ளியிருப்பார்!

பின்பு பேண்டமிக் பக்கம் பேச்சு மாறியது. கடந்த இரண்டு வருடங்களாகத் தனக்கு மிகவும் மன அழுத்தம் இருந்த சமயத்தில் சங்கீதம்தான் தன்னை ஆறுதல்படுத்தியது என்றார். ஒமைக்ரான் வருகை பற்றிப் பேசும்போது உலகம் முழுவதும் 8 பில்லியன் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு விட்டதைக் குறிப்பிட்டவர், ‘இனிவரும் காலத்தில் வைரஸுடன்தான் நாம் வாழ வேண்டியிருக்கும்’ என்றார். ‘கச்சேரிகளும் மாநாடுகளும் நடத்திவருவது மட்டும் போதாது. பேரிடரால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கும் இசைக் கலைஞர்களுக்கும், கைவினைக் கலைஞர்களுக்கும் உதவுவது பற்றி அகாடமி யோசிக்க வேண்டும்’ என்றார். பெரியவங்களும் படிச்சவங்களும் சொன்னா அது பெருமாள் சொன்ன மாதிரிதானே!

- ஆலாபனைகள் தொடரும்