சினிமா
Published:Updated:

ஆன்லைன் ஆஃப்லைன் ஆலாபனைகள்! - 2021

எம்.பாலமுரளிகிருஷ்ணா
பிரீமியம் ஸ்டோரி
News
எம்.பாலமுரளிகிருஷ்ணா

படங்கள்: எஸ்.ஹேமமாலினி, முத்ரா பாஸ்கர்

பார்த்தசாரதிக்கு வயது 121. அதாவது பார்த்தசாரதிசுவாமி சபாவுக்கு! நிலவும் சூழ்நிலையை மனதில் கொண்டு இங்கு சிக்கனமாக சீஸனை நடத்தி முடித்திருக்கிறார்கள்.முதலில் ஏழு நாள்கள். அடுத்த இரண்டு நாள்கள் கடை மூடப்பட்டது. பின்னர் மீண்டும் ஐந்து நாள்கள். ஏன் ரிஸ்க் என்று உணவகத்தையும் மூடிவிட்டார்கள். பக்கத்து சபாவிலிருந்து காபி மட்டும் வாங்கி வைத்திருந்தார்கள். விருதுகள்? மூச்... பேசப்படாது!

அவருக்கு வயது 36. மறைந்த வித்வான் பி.எஸ்.நாராயணசுவாமியின் பாட்டுப் பட்டறையில் தயாராகி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருப்பவர். 12 மாணவ, மாணவிகளைத் தயாரித்து வருபவர். அவர் எம். பாலமுரளிகிருஷ்ணா.

நான்கரை மாதங்களில் அமெரிக்காவில் பயணித்து விட்டு டிசம்பர் மாத நடுவில் சென்னை திரும்பி இருக்கிறார் இவர். டூரிஸ்ட் விசாவில் சென்றதால் கச்சேரிகள் கிடையாது. சும்மா ஊர் சுற்றியதோடு சரி.

எம்.பாலமுரளிகிருஷ்ணா
எம்.பாலமுரளிகிருஷ்ணா

பார்த்தசாரதி சுவாமி சபாவில் பாலமுரளியின் பந்துவராளி ஆலாபனை அடுத்த பத்து வாரங்களுக்கு நெஞ்சினிலே தங்கியிருக்கும். நிற்கவைக்கப்பட்ட இடத்திலிருந்து கிளம்பும் விமானம், ரன்வே வரை ஊர்ந்து சென்று, அங்கிருந்து வேகம் அதிகரித்து ‘சொய்ங்' என்று மேலேறி, இன்னும் மேலேறி மேகக் கூட்டங்களில் மறைவது போல் பந்துவராளியை மெதுவாகவே ஆரம்பித்தார் பாலமுரளி. கீழிருந்து ஒவ்வொரு ஸ்தாயியாக மேலேறும்போது பல்வேறு சங்கதிகளால் கிறங்கடித்த வண்ணமிருந்தார். அந்தக் கார்வைகள், வாய்ஸ் மாடுலேஷன்... ஆலாபனை முடிந்துவிடக் கூடாதே என்கிற படபடப்பை ஏற்படுத்தியது!

தியாகராஜரின் ‘ரகுவர நந்நு..' பாடலில் ‘மநஸீந நீகே...' வரியை நிரவலுக்கு எடுத்துக்கொண்டு ஜாலம் புரிந்தார் பாலமுரளி. இதே பாடலில் ‘ஒரு பெண்ணுக்குத் தாய் தந்தையும், அண்ணன் தம்பிகளும் இருந்தாலும் அவர்களில் யாராவது அவள் புருஷனுக்கு ஈடாக முடியுமா?’ என்று எழுதியவர் கேட்பது போல், இந்தக் கச்சேரியில் வர்தநி, ஆரபி, வராளி, நாயகி ராகப் பாடல்களை பாலமுரளி பாடினாலும் அவற்றில் ஏதாவது ஒன்று பந்துவராளிக்கு ஈடாக முடியுமா!

பாலமுரளி - அக்கரை சுப்புலட்சுமி (வயலின்) மேடையில் உட்கார்ந்தாலே கச்சேரி வேற லெவலுக்குப் போய்விடும் -அன்று போனதுபோல்! அருமையான வில் வீச்சுடன் ஒவ்வொரு சங்கதியையும் ஸ்வரத்தையும், பாலுவிடமிருந்து வாங்கி சுப்புலட்சுமி ரிபீட் செய்தது இளையராஜா - எஸ்.பி.பி காம்போவுக்கு ஈடானது! பாடகர், வயலினிஸ்ட் இருவரின் பெற்றோர்களும் ஒரே வரிசையில் உட்கார்ந்து தங்கள் வாரிசுகளின் இசையைக் கேட்டார்கள். எவ்ளோ மகிழ்ந்திருப்பார்கள்!

காருகுறிச்சி அருணாசலம்
காருகுறிச்சி அருணாசலம்

மிருதங்கம் கே.வி.பிரசாத், கஞ்சிரா ஸ்ரீசுந்தர்குமார் இருவரின் வாசிப்பு மொத்தக் கச்சேரிக்கு பெரிய சப்போர்ட்!

மியூசிக் அகாடமியின் ஆன்லைன் சீஸன் வரிசையில் ஒரு பொன்மாலைப் பொழுதில் காயத்ரி வெங்கட்ராகவன். மைசூர் ஸ்ரீகாந்த், B.சிவராமன், கிருஷ்ணா முறையே வயலின், மிருதங்கம், கடம்.

காயத்ரி மேடையில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தவுடன் கண்முன் நின்றவர் லலிதா. சியாமா சாஸ்திரியின் மனைவி. பி.சி.ராமகிருஷ்ணாவின் Trinity ஆங்கில நாடகத்தில் லலிதா வேடமேற்று காயத்ரி தூள் கிளப்பியதை எப்படி மறக்க இயலும்?

சமூக வலைத்தளங்களில் எந்நேரமும் ரூம் எடுத்துத் தங்கும் ரகம் அல்ல காயத்ரி வெங்கட்ராகவன். எப்போதாவது கோவில், குளங்களுக்குச் சென்றால் மட்டுமே போட்டோக்களைப் பதிவிறக்கம் செய்வார். மற்றபடி தான் உண்டு, தன் பாட்டு உண்டு என்று தன்பாட்டுக்கு இருப்பார்.

காயத்ரி வெங்கடராகவன்
காயத்ரி வெங்கடராகவன்

காசி விசாலாக்ஷி மீது கமகக்ரியா ராகத்தில் தீட்சிதர் பாடியுள்ள ‘காசி விசாலாக்ஷீம்...’ பாடலை பதச்சேதம் செய்யாமல் பாடினார் காயத்ரி. ‘காசி புரவாஸினீம் காமித பல தாயினீம்...' வரிகளை பக்திப்பூர்வமாக அவர் நிரவலாகப் பாடியபோது கோவில் பிரகாரத்தை சுற்றி வந்த உணர்வேற்பட்டது.

கொடுக்கப்பட்ட 90 நிமிடங்களில் தியாகராஜர் - சியாமா சாஸ்திரி - தீட்சிதர் என்று மூவரின் படைப்புகளில் தலா ஒரு பாடல்... சங்கீதப்பிரியர் தியாகராஜரின் 'ரக்ஷபெட்டரெ'வில் நிரவல், ஸ்வரம் பாடி, மினி தனிக்கும் நேரம் ஒதுக்கி... கச்சேரியை சொன்ன நேரத்துக்கு முடித்தது செம டைம் மேனேஜ்மென்ட் மேடம்!

சபாக்களில் கூட்டமைப்பு நடத்தும் Yours truly மார்கழி விழாவில் மடிக்கணினியை ஆக்கிரமித்துக் கொண்டு மேடை நிரம்பியிருந்தது. பட்டியல் இதோ: மைசூர் மஞ்சுநாத் (வயலின்) நிர்மலா ராஜசேகர் (வீணை) திருப்புங்கூர் முத்துக்குமாரசாமி (தவில்), தஞ்சாவூர் முருகபூபதி (மிருதங்கம்), கிரிதர் உடுப்பா (கடம்)! இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

சுனில் கார்கேயன்
சுனில் கார்கேயன்

காதுகளை நீவி விடும் நிர்மலா ராஜசேகரின் வீணையின் சுநாதமும், கணீரென்று ஒலிக்கும் மஞ்சுநாத்தின் வயலினின் ஒலியும் மூன்று லய வித்வான்களுடன் கூட்டணி அமைத்து முழங்கியது ஓகோ! த்விஜாவந்தியில் அகிலாண்டேஸ்வரியின் அலங்கார பவனி... பந்துவராளியில் சம்போ மகாதேவா என்று கோவூர் சுந்தரேஸ்வரப் பெருமானிடம் சரண்... காம்போதியில் மரகதவல்லியுடன் தோழமையாக விளையாட்டு என்று ஐவரும் மாநாடு நடத்தினார்கள்.

தவில் முத்துக்குமாரசாமியின் தலைமையில் முருகபூபதியும் கிரிதர் உடுப்பாவும் உருண்டு புரண்டு சண்டையிட்டு காது-மூக்கு-தொண்டை நிபுணரிடம் நம்மை அனுப்பி வைக்காமல் மிருதுவான ‘தனி'யை அடக்க ஒடுக்கமாக வழங்கியதற்கு அனந்தகோடி நன்றி!

ஜுகல்பந்தி கச்சேரி என்று இதை அறிவிப்பு செய்திருந்தார்கள். பந்தியில் வயிறு நிரம்பி ஏப்பமெல்லாம் வரவில்லை. காரணம், அது ஒன்றரை மணி நேரக் கச்சேரிதான்!

விசாகா ஹரி
விசாகா ஹரி

விவேகானந்தா கல்லூரியில் பி.காம். பிறகு அங்கேயே எம்.ஏ. சமஸ்கிருதம் முடித்திருக்கிறார் சுனில் கார்கேயன். இசை முழுநேரத் தொழில். பி.எஸ்.நாராயணசுவாமியின் மாணவர். இப்போது புது வாத்தியாரைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

சிரித்துக்கொண்டே குஷியுடன் பாடுகிறார் சுனில் (முத்ரா). என்ஜாய் எஞ்சாமி! துருதுருவென்று காணப்படுகிறார். சொன்னபடியெல்லாம் கேட்கிறது இவரது கணீர் குரல்.

எந்தக் கலப்படமுமின்றி பூர்ணஷட்ஜம் ராக ஆலாபனையை படுஜோராகப் பாடினார். ‘லாவண்ய ராம கந்துலார' பாடலில் தியாகராஜரின் சார்பில் ராமனைத் துதித்தார். பொடி சங்கதிகள், நாகஸ்வர பிடிகள், கார்வைகள் என்று தோடியில் பி.எஸ்.என். போட்டுக்கொடுத்த அஸ்திவாரம் பலமாகத் தெரிந்தது. வயலினில் வி.தீபிகா முகத்தை சாதுவாக வைத்துக் கொண்டு அழகாகப் பின்தொடர்ந்தார். இவர் வயலின் கன்யாகுமரியின் சீடர். அதானே! நெய்வேலி சந்தானகோபாலனிடம் வாய்ப்பாட்டு கற்று வருகிறார். அப்படிப் போடுங்க!

நரசிம்மர் இல்லாமல், ஹிரண்யகசிபு இல்லாமல், சனகாதர்கள் இல்லாமல், துவாரபாலகர்கள் இல்லாமல் தியாகராஜர் புனைந்த பிரகலாத பக்த விஜயம் இசை நாடகத்தை மியூசிக் அகாடமி மேடையில் கண்டு ரசித்தோம்! மேடையேற்றியவர் விசாகா ஹரி. இவருடைய ஹரிகதைக்கு உறுதுணையாக B.அனந்த கிருஷ்ணன் (வயலின்), அர்ஜுன் கணேஷ் (மிருதங்கம்), ஸ்ரீசுந்தர்குமார் (கஞ்சிரா).

விசாகா ஸ்டைல் ஹரிகதை என்பதால் விறுவிறுவென்று சொல்லப்படும் பிரகலாதனின் கதைக்கு நடுநடுவே பாடல்கள், நிரவல், ஸ்வரங்கள் கடைசியில் சின்ன தனி ஆவர்த்தனம் எல்லாம் உண்டு. இந்த டைப் ஹரிகதைக்கு ஆரம்பத்தில் இருந்த முணுமுணுப்புகள் இப்போது அடங்கிவிட்டன. விஜயஸ்ரீ ஹரி கதை பள்ளியை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் விசாகா. சென்னையில் விஜயஸ்ரீ மார்கழி வைபவமும் நடந்து முடிந்துவிட்டது. விக்னேஷ் என்ற இளைஞர், விசாகா அக்கா மாதிரியே கதை சொன்னதும் நடந்தது.

பிரகலாதனுக்கு வருவோம். ஜீனியஸ் தியாகராஜரின் கற்பனை, இசை நாடகத்துக்கு ஹைலைட், பெருமாள் - லட்சுமிக்கு இடையே நடக்கும் உரையாடல். தன் பக்தன் பிரகலாதனைப் பார்க்க பூலோகம் சென்று வருவதாக முன்னவர் சொல்ல, ‘போகாதே என் கணவா... போனால் நீங்கள் திரும்பி வர மாட்டீர்கள்’ என்று பின்னவர் மன்றாட, காட்சியை கண்முன் நிறுத்தினார் விசாகா!

அதேபோல் க்ளைமேக்ஸ் நெருக்கத்தில் பெருமாள் - பிரகலாதன் சந்திப்பும், பின்னர் உள்ளம் உருகும் பிரகலாதனின் பிரிவாற்றாமையைப் பொறுக்காமல் ஸ்ரீமன் நாராயணன், லட்சுமி தேவியுடன் பிரகலாதன் இருப்பிடத்துக்கே வந்து எழுந்தருள்வதும்... இதுவே ஆஃப்லைன் நிகழ்ச்சியாக இருந்திருந்தால் அரங்கம் எழுந்து நின்று கன்னத்தில் போட்டுக் கொண்டிருக்கும்.

 முருகபூபதி, கிரிதர் உடுப்பா, மைசூர் மஞ்சுநாத், நிர்மலா ராஜசேகர், முத்துக்குமாரசாமி
முருகபூபதி, கிரிதர் உடுப்பா, மைசூர் மஞ்சுநாத், நிர்மலா ராஜசேகர், முத்துக்குமாரசாமி

கடந்த வருடம் இசை மேதைகள் இருவருக்கு நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. ஒருவர் நாகஸ்வர இமயம் காருகுறிச்சி அருணாசலம். இன்னொருவர் வாய்ப்பாட்டு உலகில் உயர்வாக பேசப்பட்டு வரும் குரு கல்கத்தா கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மேடைப் பாடகராக பெரிய அளவில் வலம் வர இயலாமல் போனதற்கு தான் கல்கத்தாவில் வசித்ததுதான் முக்கியமான காரணம் என்பார் கே.எஸ்.கே. தெற்கில் இவரை வரவழைத்து பாடச் சொல்ல சபாக்கள் தயக்கம் காட்டியது உண்டு. பயணச்செலவு அவர்களை தயங்க வைத்தது. எனவே கச்சேரிகளுக்குப் பதிலாக தன்னுடைய இசை ஞானத்தைப் பிறருக்குக் கற்றுக் கொடுத்தல் அவருக்கு பிரதானமானது.

சஞ்சய் சுப்பிரமணியன் இவருக்கு முக்கிய சீடர். அதே மாதிரி சுகுணா வரதாச்சாரி, சுதா ரகுநாதன், உன்னிகிருஷ்ணன், மாயவரம் சகோதரிகள், சசிகிரண் போன்றவர்களும் கே.எஸ்.கே.வின் சீடர்கள் பட்டியலில் உண்டு. சுமார் பத்து வருடங்கள் குருவுடன் இருந்திருக்கிறார் சஞ்சய். ஜூனியராக இருந்த சமயத்தில் ஒரு கச்சேரியில் இவருக்குப் பாடமாகாத பாடலை எடுத்திருக்கிறார் கே.எஸ்.கே . நிரவலை இவரைப் பாடிச் சொல்லியிருக்கிறார். வரிகள் தெரியாததை சமாளிக்கும் விதமாக ஆ,ஊ என்று எதையோ பாடி சமாளித்திருக்கிறார்.

ஒருமுறை தில்லானா ஒன்றை இயற்றி அதை குருவிடம் பாடிக் காட்டியிருக்கிறார் சஞ்சய். ‘‘கையைக் கொடுடா... இப்படித்தான் எதையாவது புதுசா செய்துக்கிட்டே இருக்கணும்’’ என்று பாராட்டியிருக்கிறார் குருநாதர். ‘‘அவரிடமிருந்து கத்துக்கிட்ட மிகப்பெரிய விஷயம் இது...’’ என்ற சஞ்சய், அண்மையில் பாடிய ‘சஞ்சய் சபா' கச்சேரியில் வாத்தியாரின் ஐந்து பாடல்களைத் தனது பட்டியலில் இணைத்து நூற்றாண்டு அஞ்சலி செலுத்தினார்!

பேசுபொருள்: நாகஸ்வர மேதை காருகுறிச்சி அருணாசலம். பேசியவர்: நாகஸ்வரம், தவில் பற்றிய தகவல்களை தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லக்கூடிய ஆராய்ச்சியாளர் லலிதாராம். மியூசிக் அகாடமியின் காலைநேர லெக் - டெம் நிகழ்வில் காருகுறிச்சி பற்றிய தகவல்கள் குற்றால அருவியாக குளிர்வித்ததில் வியப்பேதுமில்லை.

அந்த ஜாம்பவானின் கரஹரப்பிரியா ஆலாபனையை ஆரம்பத்தில் கணிணி வழியாக குழைய விட்டார் லலிதாராம். கூரைநாடு பலதேசம் பிள்ளையின் மகன் அருணாசலம். நாகஸ்வர சிம்மமாகத் திகழ்ந்த திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை ஒருமுறை அருணாசலத்தின் நாகஸ்வர வாசிப்பைக் கேட்க நேரிட, அந்தக் கணமே அவரைத் தன் சீடனாக அழைத்துக் கொண்டு விட்டார்.

கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அந்த நாளில் தஞ்சாவூர் ஜில்லாவுக்கு வெளியிலும் நாகஸ்வர வித்வான்கள் இருந்தாலும், அவர்களால் வெளிச்சத்துக்கு வர முடியவில்லை. நாகஸ்வர பரம்பரையைச் சேராத கூரைநாடு நடேசன் பிள்ளை நாகஸ்வரம் வாசிப்பதைக் கேட்டிருக்கிறார், கோயில்களில் பூத்தொடுத்துக் கொடுக்கும் பணியில் இருந்த பலதேசம் பிள்ளை. அவருக்கும் நாகஸ்வர ஆசை ஏற்பட, இருந்த வேலையை விட்டு விட்டு நாகஸ்வரத்திற்கு மாறினார். தன் மகன் காருகுறிச்சிக்கு இந்தக் கலையைப் பயிற்றுவித்தார். வாய்ப்பாட்டு கற்கவும் ஏற்பாடு செய்தார்.

காருகுறிச்சியாருடன் உடன் வாசித்தவர் பெயர் எம்.அருணாசலம். சீனியர் காருகுறிச்சிக்கு வலதுகரமாக இருந்தவர் இவர். ‘காருகுறிச்சி பிரதர்ஸ்’ என்றே இவர்களை அழைப்பதுண்டு. காருகுறிச்சியின் மரணத்துக்கு பின்னர் வேறு யாருடனும் வாசிக்க மறுத்து, விவசாயத்தைக் கவனிக்கச் சென்றுவிட்டாராம் எம்.அருணாசலம்.

தான் தங்கியிருந்த கோவில்பட்டியில் பள்ளிக்கூடம் கட்ட வேண்டும் என்கிற விருப்பத்துடன் கலெக்டர் அலுவலகம் சென்ற சமயத்தில் ஹார்ட் அட்டாக் பாதிப்பு ஏற்பட்டுவிட்டது அருணாசலத்துக்கு. பாவம், அவர் கனவு நிறைவேறாமலேயே போய்விட்டது.

இப்படி காருகுறிச்சி பற்றிய அரிய தகவல்கள் பலவற்றை பகிர்ந்து கொண்ட லலிதா ராம், தன் லெக்சருக்கு நடுநடுவே அந்த மேதை வாசித்த உசைனி, மோகனம், ஆனந்தபைரவி என்று ராகங்கள் சிலவற்றை ஓட விட்டார். நம் மனதில் ஓடியது - இன்னொரு காருகுறிச்சி எப்போ வருவாரோ எந்தன் ஏக்கம் தீர!

- நிறைவு