
என்னுடைய அம்மா வழி தாத்தா-பாட்டி சலிவன் கார்டன் ரோட்டில் வசித்துவந்தார்கள்.
ஒருநாள் ராகேஸ்ரீ தில்லானா, இன்னொரு நாள் கீரவாணி ஆலாபனை, பிரிதொரு நாள் பெரியாழ்வாரின் பல்லாண்டு, அப்பர் பெருமானின் தேவாரம், கரகரப்பிரியாவில் வர்ணம், கோசலம் ராகத்தில் கீர்த்தனை என்று ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது அப்லோடிட்டுக் கொண்டிருக்கிறார் ‘தல’ சஞ்சய் சுப்பிரமணியன். தனது கச்சேரிப் பதிவுகளிலிருந்து அவர் கொடுக்கும் பிரசாதங்கள் இவை.
துன்பம் நேரிட்டுக்கொண்டிருக்கும் இந்த கோவிட் மாதங்களில் யாழெடுத்து இன்பம் சேர்ப்பது மாதிரியான அனுபவம், சஞ்சய் பாட்டைக் கேட்கும் அவரின் தீவிர ரசிகர்களுக்கு. தனது வலைப்பக்கத்தில் சஞ்சய் எழுதிவரும் நினைவலைகளைப் படிப்பதும் அவ்வளவு சுவாரசியம்.

“என்னுடைய அம்மா வழி தாத்தா-பாட்டி சலிவன் கார்டன் ரோட்டில் வசித்துவந்தார்கள். எழுபதுகளின் ஆரம்பத்தில் எனக்கு நான்கைந்து வயது இருக்கும்போது, அருகில் இருந்த அப்பர் சுவாமி கோயிலுக்குப் பாட்டி என்னை அழைத்துச் சென்றது நினைவிருக்கிறது.
ஒவ்வொரு முறையும் எனக்கு ஜலதோஷம் வரும்போதும் பாட்டி என்னை இந்தக் கோயிலுக்கு அழைத்துச் செல்வார். கோயில் குருக்கள் எனக்கு மந்திரித்துவிட்டு விபூதி இட்டு விடுவார். பின்னர் 80களில் நான் கச்சேரி செய்ய ஆரம்பித்தபோது இந்தக் கோயிலில் முதல் தடவையாக 20-5-1987 அன்று பாடினேன். முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்.ஓ.சீனிவாசனின் தசாஞ்சலி நடத்திய தொடர் நிகழ்வு அது. அவர் இளைஞர்களுக்கு மட்டுமே எப்பவும் வாய்ப்பளிப்பார்”
- இது சஞ்சயின் வலைப்பக்கத்துக்கு ஒரு சாம்பிள். ஒவ்வொன்றிலும் அவருடைய கதை சொல்லித் திறன் அருமையாக வெளிப்படும்.

சி.எஸ்.கேயின் தீவிர ரசிகர் சஞ்சய். சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டிகளின்போது ‘விசில் போடு’ என்ற ஹேஷ்டேக்குடன் இவரது லைவ் அப்டேட்ஸ் வந்துகொண்டே இருக்கும். வீட்டில் மஞ்சள் டிஷர்ட் அணிந்து டி.வியில் மேட்ச் பார்த்து விசில் போடுவாரோ என்னவோ?
வித்வான் டி.எம்.கிருஷ்ணா என்ன செய்து கொண்டிருக்கிறார்? என்ன செய்யவில்லை அவர்? எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் ஆஜர் ஆகிவிடும் நவீன சம்பவாமி யுகே யுகே கிருஷ்ணா! பெரும்பாலான நேரம் ட்விட்டர் பக்கத்தில்தான் வாசம் செய்கிறார். முகநூலுக்கும் விசிட் அடிப்பது உண்டு. இவர் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்கும்போது விழும் தர்ம அடிகள் இவருக்கு வலிப்பதில்லை.
எதையும் கண்மூடித்தனமாக ஏற்றுவிடாமல் ஏன், எதற்கு, எப்படி என்று கேள்வி கேட்க வேண்டும் என்பது இவரின் தத்துவம். நிறைய எழுதுகிறார் கிருஷ்ணா. விவாதங்களில் கலந்து கொள்கிறார். சீடர்களுடன் zoom-ல் இயல்பாகப் பேசுகிறார். மாஸ்டர் கிளாஸ் எடுக்கிறார். மனைவி சங்கீதாவுக்கு ஆன்லைனில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கிறார்.

வீட்டில் மூடிய அறையில் தனியாக உட்கார்ந்து மடியில் தம்புரா, பின்னால் சுவரில் சாய்த்து வைத்த நிலையில் இரண்டு தம்புராக்கள். தன்னை மறந்து, சூழல் மறந்து ஏகாந்தமாகப் பாடுகிறார் டி.எம்.கிருஷ்ணா. ‘ஷட் இன் கச்சேரி’ என்று பெயரிட்டிருக்கிறார். ஒருநாள் தீட்சிதரின், ‘ஸ்ரீ காளஹஸ்திச’ கீர்த்தனையைத் தனிமையில் பாடிக்கொண்டு இருந்ததைக் கேட்க, அவ்வளவு சுகம். அதேமாதிரி ‘கிருஷ்ணா நீ பேகனே பாரோ.’ டிசம்பரில் கீழ்ப்பாக்கம் பவன்ஸ் வித்யாஸ்ரமம் வளாகத்தில் நடக்கவிருக்கும் லைவ் இசை விழாவில் டி.எம்.கிருஷ்ணா பாட ஒப்புக் கொண்டிருக்கிறார்.
என்றும் தங்களை இருபது வயது மார்க்கண்டேயர்களாக நினைத்துக்கொண்டு எண்பது ப்ளஸ் வயது பெரியவர்களை ‘தொண்டுக் கிழம்’ என்று சில இளசுகள் குறிப்பிடுவது வழக்கம். அப்படியெனில் 120 வருடங்களாகச் செயல்பட்டு வரும் பார்த்தசாரதி ஸ்வாமி சபாவை ‘தொண்டு சபா’ என்று அழைக்கலாம் தானே. அதாவது கலைத்தொண்டு புரியும் சபா!
அறுபது வருடங்களுக்கு முன் சபாவுக்கு நிதி திரட்டிக் கொடுக்க, இங்கே கச்சேரி செய்திருக்கிறார் எம்.எஸ்.சுப்புலட்சுமி. அன்று நிகழ்ச்சிக்கு சர் சி.பி.ராமசாமி அய்யர் தலைமை விருந்தினராக வந்திருந்து சிறப்புரை நிகழ்த்தியிருக்கிறார். வரலாற்றுப் பெருமைமிகு இந்த நிகழ்வுக்கு, அண்மையில் மணி விழா கொண்டாடினார்கள் ஆன் லைனில். சபா செயலர் கிருஷ்ணமூர்த்தி அறிமுக உரை. அன்று சர் சி.பி ஆற்றிய உரையின் சில பகுதிகளை ராதா விஸ்வநாதனின் மகன் சீனிவாசன் வாசித்தார். தொடர்ந்து காயத்ரி வெங்கட்ராகவன் கச்சேரி.

டிசம்பரில் நடக்கவிருக்கும் ஆன் லைன் இசை விழாக்களுக்கு முன்னோட்டம் மாதிரியாக மூன்று கச்சேரிகளை ஷூட்செய்து பரிவாதினியின் யூடியூப் சேனலில் ஒளிபரப்பியது நாத இன்பம். நல்லவேளை இப்போது ஐ.பி.எல் போட்டியில் செய்வதுபோல் ஒவ்வொரு பாடலுக்கும் நடுவே பழைய கைத்தட்டல்களை இணைக்கவில்லை.
‘சற்றே விலகியிரும் பிள்ளாய்’ பாடலை முதல் நாள் பரத் சுந்தர் பாடியபோது முன்பு எப்போதோ நந்தனுக்காக கோபாலகிருஷ்ண பாரதி பாடிவிட்டுச் சென்றது, இப்போதைய சமூக இடைவெளிக்கும் பொருந்துவது விந்தை.
அடுத்த நாள் அமிர்தா முரளி. ஆர்.கே.ஸ்ரீராம் குமார், அருண் பிரகாஷ், குருபிரசாத், அனிருத் ஆத்ரேயா பக்க வாத்தியங்கள். வீடியோவுக்கு என்பதால் மேடையில் இட ஒதுக்கீடு வேறுமாதிரி. கடமும் கஞ்சிராவும் எதிர் எதிரே உட்கார்ந்து விட, பாடகிக்கு இரு பக்கங்களில் மிருதங்கமும், வயலினும். நொடிக்கொரு தடவை கழுத்தைத் திருப்பி ஆடியன்ஸைப் பார்க்கத் தேவைப்படவில்லை அருணுக்கு. உட்கார்ந்த இடத்திலிருந்து சற்று கழுத்தை நிமிர்த்தினால் போதும். நேர் எதிரிலேயே (காலி) ஹால்!
மூன்றாம் நாள் ஜெயந்த் புல்லாங்குழல். கச்சேரி நாளன்றே படப்பிடிப்பு நடத்தியதால், மாலைக்குள் அதைப் பதிவேற்றம் செய்வதில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள்... நான்காம் நாள்தான் ஜெயந்தின் புல்லாங்குழலைக் கேட்கவும் பார்க்கவும் முடிந்தது! பழைய நார்மலில், பாடுபவர்களுக்குத் தொண்டைகட்டி விடுவதுபோல் நியூ நார்மலில் இதுமாதிரி பிரச்னையெல்லாம் வரும்போலிருக்கு!
மறைந்த மகா வித்வான் வயலின் லால்குடி ஜெயராமனுக்கு கடந்த செப்டம்பர் 17 அன்று 90வது பிறந்தநாள். இதை மாரத்தான் விழாவாகக் கொண்டாடினார்கள், லால்குடியின் மகன் ஜி.ஜெ.ஆர்.கிருஷ்ணனும் மகள் விஜயலட்சுமியும். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் உள்ள லால்குடியின் நேரடி சீடர்கள் 25 பேரைப் பாடவும் வாசிக்கவும் வைத்து ஏழு வாரங்கள் லால்குடி டிரஸ்ட் முகநூலில் தினமும் ஒன்றாக வெளியிட்டார்கள்.
1942-ல் லால்குடிக்கு 12 வயது இருக்கும்போது அரங்கேற்றமானது. அவரின் தந்தை வி.ஆர்.கோபாலய்யரும் அன்று மகனுக்குத் துணையாக வாசித்திருக்கிறார். கச்சேரி நடந்த இடம் லால்குடியில் சப்தரிஷீஸ்வரர் கோயில். குருநாதர் அன்று வாசித்த அதே கோயில் வளாகத்தில் சீடர் விசாகா ஹரி, ஆங்கிலத்தில் ஹரிகதா நிகழ்ச்சி செய்தார். இதற்காக ஸ்ரீரங்கத்திலிருந்து தன் குழுவினருடன் லால்குடிக்குப் பயணப்பட்டிருக்கிறார் விசாகா. ஜெயராமன் பிறந்த கதையில் ஆரம்பித்து, வளர்ந்த கதையை அவர் இயற்றிய பாடல்களைப் பாடி விசாகா விவரித்தது வழக்கம்போல் சுறுசுறு!
லால்குடியிடம் இசை பயின்ற இன்னொரு முக்கிய சீடர் பாம்பே ஜெயஸ்ரீ. வாத்தியாருடன் இவரது அனுபவம்: “நான் பாடத்துவங்கிய சமயம் கிருஷ்ண கான சபாவில் கச்சேரி. ஹால் நிரம்பியிருந்தது. பெரும் கூட்டம் காரணமா அல்லது விவரமறிந்த ஆடியன்ஸ் எதிரே உட்கார்ந்திருப்பதாலா தெரியவில்லை, எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. கச்சேரி முடிந்ததும் சாரைப் பார்க்கப் போனேன். அதற்குள்ளாகவே அன்று நான் சுமாராகப் பாடியது அவருக்குத் தெரிந்திருந்தது. ஏனென்று கேட்டார். ‘எனக்கு முன்னால் அத்தனை கூட்டத்தைப் பார்த்ததும் பயம் வந்துவிட்டது சார்’ என்றேன்.
` பாடும்போது எதற்கு பயமும் பதற்றமும்? நான் உன்னுடனே இருப்பேன் என்பது உனக்குத் தெரியுமே... அதை நினைத்துக்கொள், பயமென்ற பேச்சுக்கே இடமிருக்காது” என்றாராம் லால்குடி!