
படங்கள்: Randave Pereira (துபாய்)
கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாகவே கலைஞர்களின் இசை விழா Schedule, சமூக வலைதளங்களில் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டி கணக்கில் தூசி கிளப்பியது!
சூப்பர் ஸ்டார், ராக் ஸ்டார் என்றெல்லாம் ஒரு தரப்பு ரசிகர்களால் துதி பாடப்பட்டு ஐந்து நட்சத்திர அந்தஸ்துடன் அமர வைக்கப்பட்டிருக்கும் மெகா ஸ்டார் அவர். ட்விட்டரிலும் இன்ஸ்டாவிலும் வேறு எந்த அக்கப்போரிலும் நுழையாமல் சங்கீதம் ஒன்றையே சுவாசம் செய்துகொண்டிருப்பவர். சில சமயம் முகநூலிலும்!
டிசம்பரில் மட்டும் எட்டுக் கச்சேரிகள் இவருக்கு. அதேசமயம் வழக்கமாகப் பாடும் முக்கியமான ஐந்து இடங்களில் இந்த நாயகனின் குரல் ஒலிக்காது.

காரணம், சன்மானப் பிரச்னை.
‘‘நாங்கள் பார்ப்பது ஆபீஸ் வேலை கிடையாது. பாடுவது மட்டுமே எமது முழு நேரத் தொழில். எங்களுக்கு அதுவே வாழ்வாதாரம்’’ என்று தன் தரப்பு நியாயத்தைக் கூறி சபாக்களில் தமது ஊதியத்தைச் சிறிது சிறிதாக உயர்த்திக்கொண்டு வந்தவர், இந்த முறை காசோலையில் மூன்று போட்டு தொடர்ந்து ஐந்து சைபர்களைச் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டாராம். இந்தத் தொகைக்கு வசதிப்படாத சபாக்கள் விலகிக்கொண்டுவிட்டன!
மியூசிக் அகாடமி, பிரம்ம கான சபா, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் போன்ற இடங்களில் அங்கே கொடுக்கும் தொகைக்கு இவர் பாடுகிறாரா அல்லது இவர் கேட்கும் சன்மானத்தை அவர்கள் வழங்கிவிடுவார்களா? யாமறியோம் பராபரமே!
சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, ரஞ்சனி - காயத்ரி சகோதரிகள் நால்வரும் சென்னையிலிருந்து விமானத்தில் துபாய் சென்று, அங்கே காரில் துறைமுகம் சென்று கப்பல் ஏறிக் கச்சேரி செய்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். ‘Carnatic Queens in Dubai’ என்ற பேனர்கள் அவர்களை வரவேற்றுப் பெருமைப்படுத்தின.

ராஜலட்சுமி ஃபைன் ஆர்ட்ஸ் டாக்டர் சதீஷ்குமார் ஆதரவுடன் Soaring Phoenix ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் இசை விழா இது. நடந்த இடம், துபாய்த் துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிலைப்படுத்தப்பட்ட ராணி எலிசபெத் 2 என்ற ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு இணையான கப்பல்!
கடல் கடந்து சென்று வெற்றி வாகை சூடிவிட்டுத் திரும்பிய ராணிகளில் ஒருவரான பாம்பே ஜெயஸ்ரீயுடன் பேசினேன்...
‘‘தரைமட்டத்திலிருந்து சிறு பாலம் வழியாகக் கப்பலுக்குள் அழைத்துச் சென்றார்கள். மிகப் பிரமாண்டமான ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் நுழையும் உணர்வு ஏற்பட்டது. நுழைந்ததும் உடல் லேசாக ஆடுவதுபோல் இருந்தது. இந்த ஆட்டம் கச்சேரி முடிந்து வெளியே வந்தும்கூட பிரமை போல் இருந்தது’’ என்று டெலிபோன் வழியே சிரித்தார் ஜெயஸ்ரீ.

பணியில் இருந்த காலகட்டத்தில் மிக வேகமாகப் பயணிப்பாளாம் ராணி எலிசபெத்! 52 தடவை உலகம் சுற்றிய வாலிபி. 2007-ல் ராணி ஓய்வு பெற்றார். பொதுமக்கள் பார்வைக்காக 2020-ல் கப்பல் திறந்துவிடப்பட்டது.
‘‘கப்பலில் மொத்தம் 400 அறைகள்... எனக்கு ஒதுக்கப்பட்ட அறை ஜன்னலிலிருந்து வெளியே கடலைப் பார்த்துப் பரவசப்பட்டேன். கப்பலுக்குள் இருக்கும் கலையரங்கில்தான் எங்கள் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். 500 பேர் உட்காரக்கூடிய அருமையான மினி ஹால் அது. ஒலியமைப்பு அவ்வளவு துல்லியம்...’’ என்று ஜெயஸ்ரீ சொன்னபோது, மூன்று நாள் இசை விழாவுக்கு நேரில் செல்ல இயலவில்லையே என்று வருந்தினேன்!
இங்கே பாடிய ராணிகள் ஒவ்வொருவரும் தங்கள் கச்சேரியில் ராகம் - தானம் - பல்லவி நிச்சயம் பாட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார்களாம். ‘அலைமகள் - கலைமகள் - மலைமகள்... ஆதரவு அருள்வாய், இவள் உன் மகள்’ - அமிர்தவர்ஷிணி, ரஞ்சனி ராகங்களில் அமைந்த பல்லவியை ஜெயஸ்ரீயும், சதுர்கால பல்லவியை ரஞ்சனி, காயத்ரி சகோதரிகளும், சதுர் ராகங்களில் சுதா ரகுநாதனும் பாடியிருக்கிறார்கள்.
தேசியக்கொடியின் மூன்று வண்ணங்களில் ஆளுக்கொரு நிறம் தேர்வு செய்து புடவை அணியும்படி பாடியவர்களைக் கேட்டுக் கொண்டார்களாம்... ஜெய்ஹிந்த்!

நிற்க, சென்னையில் டிசம்பர் இசை விழாவில் பாம்பே ஜெயஸ்ரீ எந்த சபாவிலும் பாடவில்லை. ‘‘இந்தத் தடவை நிறைய கச்சேரிகள் நேரில் சென்று கேட்கப்போகிறேன்’’ என்றார்.
சங்கீத கலாநிதி அருணா சாய்ராம்கூட டிசம்பரில் எங்கும் பாடப்போவதில்லை. இவரும் நிறைய கச்சேரிகள்தான் கேட்கப்போகிறார். ‘‘எனக்கு இரண்டு டிக்கெட் ரிசர்வ் செய்து வைங்க...’’ என்று நாரத கான சபா ஹரிசங்கரிடம் துண்டு போட்டு வைத்திருப்பதாகக் கேள்வி!
- பக்கங்கள் புரளும்...