Published:Updated:

சரிகமபதநி டைரி 2022

சரிகமபதநி டைரி 2022
பிரீமியம் ஸ்டோரி
News
சரிகமபதநி டைரி 2022

படங்கள்: சி.கணேசன்

மேதகு ஆளுநர் முதல் மாண்புமிகு முதல்வர் வரை, ஆசிரமத் தலைவர்கள் முதல் ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் வரை, வங்கிகளில் உயர் பொறுப்பில் இருப்பவர்கள் முதல் கல்வியாளர்கள், கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள் வரை என்று நித்தமும் யாராவது ஒருவர் ஏதாவதொரு சபாவின் மார்கழி விழாவைத் தொடக்கி வைத்துக்கொண்டிருக்கிறார்கள். சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். சம்பிரதாயம்!

கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸின் தொடக்க விழா வழக்கமாக கலகலவென்றும், கலர்ஃபுல்லாகவும் இருக்கும். இந்த முறை ஏனோ உற்சாகமில்லாமல் காணப்பட்டது.

இளம் கலைஞர் பரத் சுந்தர் (இசைப் பேரொளி) உள்ளிட்ட நால்வருக்கு விருதுகள், இவர்கள் பற்றிய சவசவ சைடேஷன்கள் வாசிப்பு, வரவேற்புரை, தலைமை உரை, வாழ்த்துரை, ஏற்புரை, தபால் உறை, தலையணை உறை... என்று எழுதும்போதே மூச்சு முட்டுகிறது.

நந்திகேஸ்வர உற்சவத்தில்...
நந்திகேஸ்வர உற்சவத்தில்...

இன்னும் இரண்டு ஆண்டுகளில் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. பொன்விழா - கம் - இசை விழா தொடக்க விழாவை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக நடத்த இப்போதிலிருந்தே திட்டமிடல் அவசியம்.

வயலின் மேஸ்ட்ரோ ஏ.கன்யாகுமரிக்கு தோளும் கழுத்தும் சுளுக்கு கண்டுவிடாமல் இருக்க வேண்டும்! இந்த சீசனில் அதிகமாக விருதுபெறும் கலைஞர் இவர். அதுவும் ஒரு ஞாயிறன்று மாலை இரண்டு இடங்களில் கௌரவிக்கப்பட்டார். சீனியர் மிருதங்க வித்வான் காரைக்குடி மணியின் சுருதி லயா கேந்திராவின் ‘குரு சுரஜானந்தா’ விருது மற்றும் கலா பிரதர்ஷனியின் ‘கண்டசாலா புரஸ்கர்’ விருது.

கன்யாகுமரி
கன்யாகுமரி

கூடவே, நடிகர் எஸ்.வி.சேகருக்கு ‘கௌரி மனோகரி’ விருது வழங்கிய சுருதி லயா, இரண்டு மணி நேரத்துக்கு வித்வான்கள் ஓ.எஸ்.தியாகராஜன், ரங்கநாத சர்மா, மன்னார்குடி ஈஸ்வரன், ஆர்.ரமேஷ் உள்ளிட்ட கலைஞர்கள் காரைக்குடி மணியின் தலைமையில் நடத்திய நந்திகேஸ்வர உற்சவம் கேட்கக் கேட்க விறுவிறு, சுறுசுறு! திருவையாறு வரை போகவில்லை எனினும் கும்பகோணம் வரை சென்று திரும்பிய நிறைவு!

கௌரி மனோகரி விருதினை லண்டனில் உள்ள பிள்ளையார் கோயில் ஒன்றின் குருக்கள் நாகநாதன், மறைந்த தன் மனைவி கௌரி மனோகரியின் நினைவாக ஒவ்வொரு வருடமும் வழங்கிவருகிறார். பண முடிப்பும் உண்டு!

விருது வாங்கிய மறுநாள் கார்த்திக் சார்பாகப் பாடினார் ‘இசைப் பேரொளி' பரத் சுந்தர். எழுத்துலகில் எஸ்.ரா (எஸ்.ராமகிருஷ்ணன்) மாதிரி பாட்டுலகில் எல்.ரா என்கிற எல்.ராமகிருஷ்ணன், வயலின்! சுமேஷ் நாராயணனும், அனிருத் ஆத்ரேயாவும் மிருதங்கம், கஞ்சிராவுடன்.

இரண்டாவது பாடலாக ஹம்சநாதம் ராகத்தை அம்சமாக ஆலாபத்திவிட்டு கவி பாரதியின் ‘வெள்ளைக் கமலத்திலே அவள் வீற்றிருப்பாள்...’ என்கிற தமிழ்ப் பாடலை எடுத்துக்கொண்டு பாடி, ‘கலைவாணியை சரண் புகுந்தேன்’ என்ற வரியில் நின்று நிதானித்து நிரவல் செய்து, வரும் காலத்தில் ‘தமிழும் நானும்’ எனும் தனிக்கச்சேரி செய்ய நான் ரெடி என்று சொல்லாமல் சொன்னார் பரத் சுந்தர். சில மணித்துளிகளுக்கு இனிமையான ஹம்சநாதத்தில் மூழ்கித் திளைத்தது முழுவதும் உண்மை!

வயலின் மாமேதை துவாரம் வெங்கடசுவாமி நாயுடுவின் 58 வது வருட நினைவஞ்சலிக் கச்சேரியில்... (மதுரத்வனி)
வயலின் மாமேதை துவாரம் வெங்கடசுவாமி நாயுடுவின் 58 வது வருட நினைவஞ்சலிக் கச்சேரியில்... (மதுரத்வனி)

கமாஸ் ராகத்தில் அமைந்த மைசூர் வாசுதேவாச்சாரின் ‘ப்ரோசேவாரெவருரா’ பாடலை அன்றைய பிரதானமாக்கிக்கொண்டார் பரத். பலமுறை கேட்டுப் பழகிய கமாஸ் சங்கதிகளை ‘கமான்... கமான்...’ என்று ரேஸ் மைதானத்தின் உற்சாகத்தைக் குரலெழுப்பி வரவேற்றது அரங்கம்! வழக்கமான தோடி, காம்போதி, பைரவி என்றில்லாமல் கமாஸ் போன்ற பரிச்சயமான, பரணில் ஏற்றிவிட்ட ராகத்தைக் கேட்கும்போது ‘அட, எப்படி இருக்கே... பார்த்து ரொம்ப நாளாச்சே...’ என்று குசலம் விசாரிக்கத் தோன்றியது!

வயலினில் எல்.ராமகிருஷ்ணனின் வாசிப்பு சுநாதம். ஹம்சநாதமும் கமாஸ் ராகமும்... ஏன், மொத்த இரண்டு மணி நேரமும் தேன் சிந்தியதே வாத்தியம்!

வாத்தியார் திருவாரூர் பக்தவத்சலத்துக்கு துளியும் சளைக்காமல் மிருதங்கத்தை அடித்து வாசித்தார் சுமேஷ் நாராயணன். அனிருத் ஆத்ரேயாவின் கஞ்சிரா வழக்கம்போல் அனுசரணை.

கோவைக்குப் பயணிக்க வேண்டியிருந்ததால் மிகச் சரியாக எட்டே முக்கால் மணிக்கு கச்சேரியை முடித்துக்கொண்டு பாரதிய வித்யா பவனிலிருந்து புறப்பட்டுவிட்டார் சிக்கில் குருசரண்.

சர்வேஷ் - கார்த்திக் -  சாயி ரக் ஷித்
சர்வேஷ் - கார்த்திக் - சாயி ரக் ஷித்
குருசரண்
குருசரண்

QFR புகழ் சுப தணிகாசலம் ஒரு முறை குறிப்பிட்டது போல் ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்த ஆப்பிள் மாதிரிதான் இன்னும் காணப்படுகிறார், ‘ஜன்னல் ஓரம்’ புகழ் குருசரண்.

தியாகராஜரின் சஹானா ராகப் பாடலான ‘வந்தனமு... ரகுநந்தன...’வில் தியாகராஜர் பாடிய சூழ்நிலையை மறந்துவிடாமல் அதே எமோஷனை வெளிப்படுத்தினார்.

அடுத்து வரப்போகும் பாடலுக்கான ராகத்தை நேர்த்தியாக ஆலாபனை செய்துவிட்டு, “இந்த ராகத்தோட பேரு குமுதக்ரியா...” என்று குருசரண் அறிமுகப்படுத்தி வைக்க, சபையில் சில இசை மாணவர்கள் குறித்துக்கொண்டார்கள்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்மீது தான் பாடிய இந்தக் கீர்த்தனையில் ‘அர்த்த ஜாம அலங்காரத்தினால் விசேட மேன்மை உடையவர், நாகரத்தினத்தால் அலங்கரிக்கப்பட்டு நந்தி வாகனம்மீது இருப்பவர், குமுதக்ரியா ராகத்தினால் துதிக்கப்பட்டவர், மிகவும் சிவந்த வர்ண மேனியால் சோபையுடன் இருப்பவர்’ என்றெல்லாம் சிவனைப் போற்றுகிறார் முத்து சுவாமி தீட்சிதர்.

பரத் சுந்தர்
பரத் சுந்தர்
 கே.என்.ராமசுவாமி
கே.என்.ராமசுவாமி

குருசரணுக்கு வயலின் சாயி ரக் ஷித். எம்பார் கண்ணன், எல்.ராமகிருஷ்ணன், விட்டல் ரங்கன் வரிசையில் கன்யாகுமரியின் இன்னொரு தயாரிப்பு சாயி ரக் ஷித். ஒலிமயமான எதிர்காலம் இவருக்கு உண்டு என்பதை உறுதிப்படுத்தியது வாசிப்பு.

மிருதங்கம், மகன் சர்வேஷ் கார்த்திக். கடம், அப்பா கடம் கார்த்திக். வாரிசை அருமையாகத் தயார் செய்திருக்கிறார் தந்தை. முக்கியமாக, தனி ஆவர்த்தனம்போது மிருதங்கத்தில் மகன் கொடுக்க, தயக்கமின்றி அப்பா வாங்கி கடத்தில் அழகாகக் கடத்தியது கண் / காது கொள்ளாத காட்சி.

குருசரண் முடிவாகப் பாடிய தில்லானாவில் ‘ஜம் ஜம்’ என்ற இரு வார்த்தைகள் நிறைய இடம்பெற்றன. அவற்றில் ஒன்றைக் கடன் வாங்கிக்கொண்டு ‘ஜம்மென்று இருந்தது கச்சேரி’ என்று சொல்லி இவர் போர்ஷனை முடிக்கிறேன்!

சபா நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் தினமும் கச்சேரி தொடங்கும் நேரத்தில் மேடையில் காணப்படுவார்கள். திரையைத் தூக்கிவிட்டு பின்னர் காணாமல் போய்விடுவார்கள். மறுபடியும் சரியாக நிகழ்ச்சி முடியும் சமயம் மேடைக்கு வந்துவிடுவார்கள்- கலைஞர்களுக்கு சன்மான கவர் கொடுப்பதற்கு!

ராமகிருஷ்ணன்
ராமகிருஷ்ணன்

இவர்களில் இருவர் வேற மாதிரி. பாரதிய வித்யா பவனின் கே.என்.ராமசுவாமி மற்றும் ஆர்.கே. கன்வென்ஷன் மையத்தின் ராமகிருஷ்ணன். அரங்கில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் ஒவ்வொரு கச்சேரியையும் முதல் வரிசையில் உட்கார்ந்து முழுவதும் கேட்டு ரசிப்பார்கள் இவர்கள். இரு நிகழ்ச்சிகளுக்கு இடையே கிடைக்கும் இடைவெளியில் மட்டுமே எழுந்து சென்று திரும்புவார்கள்!

இந்த இரு ‘ரா'க்களின் நான்கு காதுகளுக்குள்ளும் நுழைந்து பார்த்தால் (இசை) மழை நீர் வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஓடும் செம்பரம்பாக்கம் தெரியும்! பொறுமையின் சிகரங்கள்!

- பக்கங்கள் புரளும்