நடப்பு
பங்குச் சந்தை
Published:Updated:

சிறு முதலீட்டாளர்களின் நலன் காப்பது முக்கியம்!

தலையங்கம்
News
தலையங்கம்

தலையங்கம்

சமீப காலமாக, பங்குச் சந்தை முதலீட்டின் மீது சிறு முதலீட்டாளர்களுக்கு ஆர்வமும் ஈடுபாடும் அதிகரித்துவருவது ஆரோக்கியமான விஷயம். பணவீக்கத் தைத் தாண்டிய வருமானம், நினைத்த நேரத்தில் முதலீட்டைப் பணமாக்கும் வசதி எனப் பல அம்சங்கள் இதில் இருப்பதுடன், ஹர்ஷத் மேத்தா காலத்தில் நடந்ததுபோல எந்தப் பெரிய தவறும் இந்த முதலீடுகளில் நடக்காத படிக்குத் தேவையான விதிமுறைகளை மத்திய அரசாங்கம் அடிக்கடி மாற்றி வருவதும்தான் சிறு முதலீட்டாளர்கள் ஈடுபாட்டுக்கு முக்கியமான காரணங்களாகும்.

என்றாலும்கூட, இந்த முதலீடுகளிலும் அவ்வப்போது சில பிரச்னைகள் உருவாகி, சிறு முதலீட்டாளர்கள் நலன் கேள்விக்குள்ளாவது நடக்கவே செய்கிறது. உதாரணமாக, 24 பங்கு நிறுவனங்களின் புரொமோட்டர்கள் தங்களுக்குச் சொந்தமான 100% பங்குகளை அடமானம் வைத்திருக்கிறார்கள். தவிர, 78 நிறுவனங்களின் புரொமோட்டர்கள் 76% பங்குகளையும், 57 நிறுவனங்களின் புரொமோட்டர்கள் 57% பங்குகளையும் அடமானம் வைத்திருக்கின்றனர். மேலும், 10% முதல் 20% நிறுவனப் பங்குகளை அடமானம் வைத்த புரொமோட்டர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகம்.

நிறுவனங்களின் புரொமோட்டர்கள் அவர்களுக்குச் சொந்தமான பங்குகளை அடமானம் வைப்பது அவர்களின் உரிமை என்பதை மறுப்பதற்கில்லை. அதே சமயம், புரொமோட்டர்கள் செய்யும் தொழிலையும், அவர்களின் தொழில் திறமையையும் நம்பி சிறு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்த பின்பு, அந்தத் தொழிலை நல்லவிதமாக நடத்தாமல், பங்குகளை அடமானம் வைப்பது, புரொமோட்டர்கள் தங்கள் கடமையில் இருந்து தவறுவதுதானே! இதைத் தடுக்க, ‘‘புரொமோட்டர்கள் 25 - 50 சதவிகிதத்துக்குமேல் தங்கள் நிறுவனப் பங்குகளை அடமானம் வைக்க வேண்டும் எனில், இயக்குநர் குழுவின் அனுமதியைப் பெற வேண்டும்’’ என செபியின் முன்னாள் தலைவர் அஜய் தியாகி சொல்வது சரியான தீர்வாகும். இந்த யோசனையை செபி உடனடியாக பரிசீலனை செய்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதே போல, பங்குச் சந்தையில் நேரடியாக முதலீடு செய்ய அஞ்சுபவர்கள் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் மூலம் முதலீடு செய்கின்றனர். ஆனால், சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் நைகா, பி.பி ஃபின்டெக், பேடிஎம், டெலிவரி போன்ற சில ஸ்டார்ட்அப் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனப் பங்குகளின் விலை கணிசமான அளவில் குறைந்தாலும், இந்தப் பங்குகளை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் விற்று வெளியேறுகிற மாதிரி தெரியவில்லை. ‘‘சிறு முதலீட்டாளர்களின் பணத்தை இது மாதிரி நஷ்டம் தரும் பங்குகளில் வைத்திருப்பது சரியா?’’ என பங்குச் சந்தை நிபுணரான தெபாசிஸ் பாசு கேள்வி எழுப்பியிருப்பது நியாயமே. எனவே, இதைத் தடுக்கவும் செபி புதிய விதிமுறைகளைக் கொண்டு வர வேண்டும்.

இந்தப் பிரச்னைகளை சரிசெய்வதன் மூலமே இன்னும் அதிக சிறு முதலீட் டாளர்களைப் பங்குச் சந்தை நோக்கி அழைத்து வர முடியும். இல்லாவிட்டால், மோசடித் திட்டங்களில் மக்கள் பணத்தை இழக்கும் நிலையே உருவாகும்!

- ஆசிரியர்