அரசியல்
அலசல்
Published:Updated:

போராட்டம்... சாதனை... வெற்றி... விருதுகள்!

பெருந்தமிழர் விருது
பிரீமியம் ஸ்டோரி
News
பெருந்தமிழர் விருது

இது மிகச்சரியான தேர்வு. சட்ட அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதை எளிய மக்களுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் துணிவு தேவை என்பதை மோகன் நிரூபித்துவிட்டார்’ என மோகனுக்கு திருமாவளவன் புகழாரம் சூட்டினார்

சாத்தியமில்லாத சாதனைகளைச் சாத்தியப்படுத்திய தமிழ்நாட்டின் சாமானிய மனிதர்களைக் கண்டுபிடித்து, அவர்களைச் சாதனை மனிதர்களாக அங்கீகரிக்கும் சரித்திர மேடைதான் ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள். அந்த வகையில், கொரோனா ஊரடங்குகளால் தள்ளிப்போயிருந்த 2021, 2022 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கும் சேர்த்து ஒரே நாளில், ஒரே மேடையில் ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவின் நெகிழ்ச்சியான தருணங்கள் இங்கே...

2021-ம் ஆண்டுக்கான நம்பிக்கை விருதுகள் வழங்கும் விழா, கிடாக்குழி மாரியம்மாளின் காந்தக்குரலில் ``கண்டா வரச்சொல்லுங்க...” பாடலுடன் உற்சாகமாகத் தொடங்கியது. தன் உப்பள வருமானத்தில் இலவச போட்டித் தேர்வு பயிற்சி மையத்தை நடத்தி, நூற்றுக்கணக்கான ஏழை இளைஞர்களை அரசுப் பணியாளராக்கிய பேச்சிமுத்துவுக்கு முதல் விருது. அதை, தமிழ்வழியில் ஐ.ஏ.எஸ் பயின்ற ‘இல்லம் தேடிக் கல்வி’ இளம் பகவத் வழங்கினார். அதேபோல, சிறைவாசிகள் குழந்தைகளைப் படிக்க வைத்துக்கொண்டிருக்கும் வழக்கறிஞர் கே.ஆர்.ராஜா, கனிமொழி எம்.பி-யிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.

போராட்டம்... சாதனை... வெற்றி... விருதுகள்!

தற்கொலைக்கு எதிராகப் போராடிவரும் சமூகச் செயற்பட்டாளர் நந்தினி முரளிக்கு விருது வழங்கினார் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன். அடுத்ததாக, `தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவமனை தீ விபத்திலிருந்து 58 குழந்தைகள், 11 தாய்மார்களை மீட்ட செவிலியர் ஜெயக்குமாருக்கு’ விருது வழங்கினார் சபாநாயகர் அப்பாவு.

மனித உரிமைச் செயற்பாட்டாளரும், பழங்குடி மக்களின் நிகழ்கால காட்ஃபாதருமான பேராசிரியர் பிரபா கல்விமணிக்கு, உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் விருது வழங்கினார். விருதுபெற்ற கல்விமணி, ``இது என் தனிப்பட்ட போராட்டம் அல்ல; அவர்கள் அத்தனை பேரின் போராட்டம்’’ எனக் கூறி இருளர் பழங்குடிகளுக்காக களத்தில் நின்ற அத்தனை பேரையும் மேடைக்கு அழைத்தார். ஒவ்வொருவரின் செயல்பாட்டையும் உணர்ச்சிப் பெருக்கோடு அவர் நினைவுகூர்ந்தபோது, ஒட்டுமொத்த அரங்கமும் எழுந்து நின்று மரியாதை செய்தது.

தொடர்ந்து, முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமாரின் அட்ராசிட்டி, இயக்குநர் அ.வினோத்தின் அதிரடியான பதில், சூரியின் ‘விடுதலை’ அப்டேட், தமிழறிஞர் பொ.வேல்சாமியின் வரலாற்று அறைகூவல், நடிகர் விமலின் கம்பேக், இயக்குநர் மாரி செல்வராஜ், தெருக்குரல் அறிவின் `அரசியல் ராப்’ என விழா களைகட்டியது. வடசென்னையின் முகமாக மாறிய வியாசை தோழர்களுக்கு பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் விருது வழங்க, விகடன் எம்.டி சீனிவாசன் வியாசை தோழர்கள் நடத்தும் நூலகத்துக்குப் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்.

இப்படியாக, 2021-ம் ஆண்டுக்கான நம்பிக்கை மனிதர்கள், இளைஞர்களுக்கான விருது வழங்கும் விழா சிறப்பாக நிறைவடைந்தது.

போராட்டம்... சாதனை... வெற்றி... விருதுகள்!

2022-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடனின் நம்பிக்கை விருதுகள் வழங்கும் விழா, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் `தமிழ் ஓசை’ குழுவினரின் `சங்கே முழங்கு’ பாடலுடன் மாலை நிகழ்வாகத் தொடங்கியது. முதல் விருதை முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, அறிவியல் தமிழர் என். கலைச்செல்விக்கு வழங்கினார். அதைத் தொடர்ந்து, விகடனின் உயரிய விருதான, `பெருந்தமிழர் விருதை’ மூத்த எழுத்தாளர் பூமணிக்கு, சக எழுத்தாளர்கள் சோ.தர்மன், வேல.ராமமூர்த்தி, மனுஷ்யபுத்திரன், கலாப்ரியா, ஓவியர் ட்ராட்ஸ்கி மருது ஆகியோர் வழங்கினர். விகடன் எம்.டி சீனிவாசன், மாலை மரியாதையுடன் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை எழுத்தாளர் பூமணிக்குப் பரிசளித்தார்.

தலித் இளைஞர் கோகுல்ராஜ் ஆணவப்படுகொலைக்கு நீதிவேண்டி எட்டு ஆண்டுகளாகச் சட்டப் போராட்டம் நடத்தி, அதில் வெற்றியும் கண்ட வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு, வி.சி.க தலைவர் திருமாவளவன் எம்.பி. ஆரத்தழுவி விருது வழங்கினார். ``இது மிகச்சரியான தேர்வு. சட்ட அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதை எளிய மக்களுக்கான ஆயுதமாகப் பயன்படுத்தும் துணிவு தேவை என்பதை மோகன் நிரூபித்துவிட்டார்’ என மோகனுக்கு திருமாவளவன் புகழாரம் சூட்டினார். அதேநேரம் யாரும் எதிர்பாராதவிதமாக கோகுல்ராஜின் அம்மா மேடையில் ஏறி, `பிறழ் சாட்சி ஆனாலும், சத்தியம் தோற்காது’ எனக் கண்ணீர் சிந்தி, கதறியழுதது கூட்டத்தினரை நெகிழச்செய்தது.

தமிழ்நாட்டின் முதல் திருநர் பொறியாளராக, தொழில்முனைவோராக, வழிகாட்டியாக இருந்து பல அருஞ்செயல்களைச் செய்துவரும் திருநர் மர்லிமா முரளிதரனுக்கு தி.மு.க எம்.பி திருச்சி சிவா விருது வழங்கினார். திருநர், திருநங்கைகள் நலனுக்காக, தனிநபர் மசோதாவைக் கொண்டுவந்து சட்டமாக்கிய தனது போராட்டத்தையும் திருச்சி சிவா பதிவுசெய்தார்.

போராட்டம்... சாதனை... வெற்றி... விருதுகள்!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, சமரசமற்ற ஆய்வறிக்கை சமர்ப்பித்த உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த, பாதிக்கப்பட்ட மக்களின் குடும்பத்தினரே நேரில் வந்து விருது வழங்கிய தருணம் உணர்ச்சிகரமாக இருந்தது. “இந்த விருதை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கே காணிக்கையாக்குகிறேன்” என அருணா ஜெகதீசன் கூற, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மாணவி ஸ்னோலினின் தாயார், ``கமிஷன் அறிக்கை பரிந்துரைத்தபடி, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்” என விகடன் மேடையின் மூலம் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்தார்.

கீதாரிகளின் வாழ்வுரிமைக்காகப் போராடும் பெரி.கபிலனுக்கு விருது வழங்கிப் பேசிய நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான், ``உழவும், ஆடு, மாடு மேய்ப்பதும் தொழில் அல்ல; எங்கள் பண்பாடு. மேய்ச்சல் தொழில் அரசுத் தொழிலாக்கப்பட வேண்டும்’ என அழுத்தமாகத் தெரிவித்தார்.

கடல்சார் எழுத்தாளர் வறீதையா கான்ஸ்தந்தினுக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் விருது வழங்கினார். “ஒரு விளையாட்டு வீரனான எனக்கு அரசியல் அறிவை ஊட்டியது ஜூனியர் விகடன்தான்” என நெகிழ்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுன், விளையாட்டுத்துறையில் சாதித்த இளைஞர்களுக்கு விருதுகளை வழங்கினார்.

விழாவில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, இயக்குநர்கள் மிஷ்கின், பாண்டிராஜ், த.செ.ஞானவேல், `கனவு தமிழ்நாடு’ சுரேஷ் சம்பந்தம் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் உதயசந்திரன், ஆர்.பாலகிருஷ்ணன், சுப்ரியா சாகு உள்ளிட்டோர் தொடர்ச்சியாக நம்பிக்கை மனிதர்கள், இளைஞர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தனர்.

போராட்டம்... சாதனை... வெற்றி... விருதுகள்!
போராட்டம்... சாதனை... வெற்றி... விருதுகள்!

நிகழ்ச்சியின் முடிவாக, இரண்டு கைகளும் இல்லாமல், தீப்பிரம்புகளால் டிரம்ஸ் வாசித்த தான்சேன் நம்பிக்கையின் உச்சமாக இசைத்தார்.

ஆனந்த விகடனின் நம்பிக்கை விருது இனிதிலும் இனிதாக நிறைவுற்றது. எழுத்துகளாக நீங்கள் இப்போது படித்த தருணங்களை, புகைப்படங்களாக, காணொளிகளாக விரைவில் விகடன் இணையதளங்களில், யூடியூப் சேனல்களில் காணலாம்!

எல்லோரும் இன்புற்றிருக்க!