கட்டுரைகள்
Published:Updated:

பழைய பாட்டு, புதிய தலைமுறை!

சுபஶ்ரீ தணிகாசலம்
பிரீமியம் ஸ்டோரி
News
சுபஶ்ரீ தணிகாசலம்

பெரும்பாலும் ஐம்பது அறுபதுகளில் வெளியான திரைப்படங்களின் பாடல்கள். பாடுபவர்களோ இருபதுகளில் இருக்கிறார்கள்.

மார்ச் மாதப் பின்பாதியில் தொடங்கிய `கொரோனா’ ஊரடங்கு இன்றைய தேதி வரை முழுமையாக விலக்கப்படவில்லை. கொரோனா பீதி ஒருபுறம்; வேலை, வாழ்வாதாரம், எதிர்காலம் குறித்த கவலை மறுபுறம் எனக் கடந்து கொண்டிருக்கும் கலவர நாள்களில், மனசுக்குக் கொஞ்சமேனும் மருந்திடும் வேலையையும் ஆங்காங்கே சிலர் செய்துகொண்டிருக்கிறார்கள். சமூக ஊடகத்தின் ஊடாக உலா வந்து கொண்டிருந்தபோது அப்படியொரு மருந்தாக நம் கண்ணில் பட்ட ஒரு நிகழ்ச்சி ‘க்வாரன்டீன் ஃப்ரம் ரியாலிட்டி.’

பெரும்பாலும் ஐம்பது அறுபதுகளில் வெளியான திரைப்படங்களின் பாடல்கள். பாடுபவர்களோ இருபதுகளில் இருக்கிறார்கள். திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அத்தனை இசைக்கருவிகளும் இல்லை. ஓரிரு இசைக்கருவிகளிலும்கூட வளம் மாறாமல் அதே இசையைக் கொண்டு வர முடியுமென்கிறார்கள். பாடுவதற்கு முன் பாடல் இடம்பெற்ற படம் குறித்த சுவாரஸ்யங்களும் பகிரப்படுகின்றன. தேவைப்படுமிடங்களில் நடனமும் புகுத்தப்படுகிறது.

ஊரடங்கு தொடங்கிய முதல் வாரத்திலிருந்து தினம் ஒரு எபிசோடாகத் தொடங்கி இப்போது 150வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் சுபஶ்ரீ தணிகாசலத்திடம் பேசினேன். சேட்டிலைட் சேனல்களின் ஒளிபரப்பு தொடங்கிய 90களில் பட்டிதொட்டி யெங்கும் பிரபலமான ‘சப்தஸ்வரங்கள்’ நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்தான் இவர்.

``20 ஆண்டுகளுக்கு முன் ‘ரியாலிட்டி ஷோ’ கான்செஃப்டை டிவியில் புகுத்திய நீங்க, இப்ப‌ ‘ரியாலிட்டியிலிருந்து தனித்திரு’ன்னு சொல்றீங்க. ஏன்?’’

‘`கான்செஃப்ட் புதுசுங்கிறதால அன்னைக்கு முழுச்சுதந்திரம் இருந்நது. சன் டிவி, ஜெயா டிவின்னு எதிரெதிர் துருவங்களிலும் நான் இருந்திருக்கேன். ஆனா எல்லா இடத்திலேயும் ‘ஷோ எப்படி வரணும்’ங்கிறதுல நான் எடுக்கிறதுதான் முடிவு. வேற யார் தலையீடும் இருக்காது. ஆனா இன்னைக்கு ரியாலிட்டி ஷோவின் அமைப்பே மாறிடுச்சே. சேர்க்க வேண்டியதைச் சேர்த்து, அவசியமே இல்லாத விஷயங்களைத் திணிச்சு, கன்டென்ட் நாம நினைச்சபடி வராது. ஷோவுக்குள் நுழைய இன்னைக்கு சிபாரிசு வேணும்னெல்லாம் வந்திடுச்சு.”

சுபஶ்ரீ தணிகாசலம்
சுபஶ்ரீ தணிகாசலம்

“ ‘க்வாரன்டீன் ஃப்ரம் ரியாலிட்டி’ ஐடியா எப்படி வந்தது?’’

‘`லாக்டௌனில் வீட்டுக்குள் அடைஞ்சு கிடக்கிறது மன அழுத்தம் தரலாம். டிவிக்களில் பழைய சீரியல்கள்தான். ஆனா சோஷியல் மீடியா ஓரளவுக்கு ஆக்டிவா இருக்கும்னு தோணவே, அதுல என்ன பண்ணலாம்னு யோசிச்சேன். எனக்கு எது பிடிக்குமோ எது தெரியுமோ அதைத்தானே செய்வேன்? நான் வளர்த்துவிட்ட புள்ளைங்க, ஆரம்பத்துல இருந்து எங்கூடவே இருக்கிற புள்ளைங்கல்லாம் ‘ரெடி ஜூட்’னு சொல்ல, தொடங்கிட்டோம். ஆனா வரவேற்பு, நாங்க எதிர்பாராதது. இது எங்க டீமுக்குக் கிடைச்ச வெற்றி. டீம்னா, ஷாம் பெஞ்சமின், வெங்கட்னு ரெண்டு பேர் தொடர்ந்து எங்கூடவே இருக்காங்க. பாடகர்கள் 90 பேருக்கு மேல இதுல பாடிட்டாங்க. 30க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்களின் பங்களிப்பு இருக்கு.

பழைய பாட்டு, புதிய தலைமுறை!

‘`யூடியூப் போன்றவை இளைய தலைமுறைக்கான‌ பிளாட்பாரம்னு ஒரு கருத்து உண்டு. நீங்க பழைய பாடல்களை செலக்ட் செய்றீங்களே?’’

“பாடல் தெரிவைப் பொறுத்தவரை பழைய பாடல்களை மட்டும்தான் தேர்ந்தெடுக்கணும்னு திட்டமெல்லாம் இல்லை. கறுப்பு வெள்ளைக் காலத்திலிருந்து இன்னைக்கு வரைக்கும் சில இனிமையான பொக்கிஷமான பாடல்களை நாம மறந்துட்டோம். அல்லது காணாமப் போயிடுச்சுன்னு சொல்லலாம். அதனால இசைல பெரிய பெரிய சாதனைகள் படைச்ச எத்தனையோ லெஜண்ட்ஸ் பத்தி இந்தத் தலைமுறைக்குத் தெரியாமலே போயிடுச்சு. டிவி ரியாலிட்டி ஷோக்களில் பாடின பாடல்களையே திரும்பத் திரும்பப் பாடிட்டிருக்காங்க. மறந்த அந்தப் பாடல்களைத் திரும்பக் கேக்கணும்னு நான் நினைச்சேன். முதல்ல நடுத்தர வயசைத் தாண்டியவங்ககிட்ட இருந்துதான் பெரிய வரவேற்பு கிடைச்சது. ஆனா பாடுறது, இன்ஸ்ட்ரூமென்ட் ப்ளே பண்ணுறதெல்லாம் இளம் பட்டாளம்கிறதால சின்ன வயசுக் காரங்களும் ஷோவுக்குள் ஆட்டோமேட்டிக்கா வந்துட்டாங்க.”

``இந்த நான்கு மாத காலத்துல மறக்க முடியாத தருணம்...’’

‘`மூணாவது எபிசோடு பார்த்துட்டு எஸ்.பி.பி சார் கூப்பிட்டு ‘அற்புதமான வேலை செய்றீங்க’ன்னு பாராட்டினார். பி.சுசீலாம்மா வாழ்த்தினாங்க. நெகிழ்ச்சியான இன்னொரு தருணமும் அமைஞ்சது. மதுரையில இருந்து கோவிட் 19 பாசிட்டிவ்னு தனிமைப்படுத்தப் பட்டிருந்த ஒருத்தர்கிட்ட இருந்து ஒரு போன் கால். ‘மேடம், கொரோனாத் தொற்று உறுதியானதுல இருந்தே மரண பயம் இருந்தது. உங்க ஷோ பார்த்தேன். அவ்வளவு உற்சாகம் என மனசுக்குள் இப்ப புகுந்திடுச்சு, இந்த உற்சாகமே என்னை குணப்படுத்திடும்னு நம்பறேன்’னார். இதுக்குமேல என்ன வேணும், சொல்லுங்க!’’ என்கிறார் சுபஸ்ரீ.