சினிமா
Published:Updated:

வருங்காலப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறோம்... ஓர் எண்ணம்... ஓர் எழுத்து... ஓர் இயக்கம்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்
News
விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2022 - 23

ஆன்லைனில் விண்ணப்பிக்க: student.vikatan.com

இதழியல் உலகத்தில் இனி நீங்களும் இணையலாம்!

கோடிக்கணக்கான தமிழர்கள் தினமும் வாசிக்கும், ரசிக்கும், நேசிக்கும் விகடனின் பக்கங்களை அலங்கரிக்க... நீங்கள் தயாரா?

ஒரு வாட்ஸ்அப் தகவல்

ஒரு ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்

ஒரு மொபைல் க்ளிக்

ஒரு ஸ்கூப் வீடியோ...

ஒரு இன்ஸ்டா போஸ்ட்

ஒரு ஷார்ட்ஸ்

ஒரு ட்வீட்

ஒரு எக்ஸ்க்ளூசிவ் நியூஸ்

வாய்ப்புகள் அதிகம் முன்பைவிடவும்... களம் காத்திருக்கிறது உங்களுக்காக!

இளமையின் விசையை, திறமையின் திசையைத் தீர்மானிக்கும் ஒரு தங்கத் தருணம்... இதோ!

சமூக மாற்றத்துக்கு விதையாக, சமூக வளர்ச்சிக்குப் பாதையாக இருக்க விரும்பும் கல்லூரி மாணவர்களுக்குக் களம் அமைக்கிறது விகடன். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் பயிற்சிபெற வாய்ப்பளித்து, பட்டைதீட்டிப் பயிற்சிதரும் விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம்.

கையிலிருக்கும் செல்போனே தலைசிறந்த தகவல் தொடர்பு ஊடகமாக மாறியிருக்கும் இந்த நவீன காலத்தில் யூடியூப், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் எனப் பல வழிகளில் ஒவ்வொருவருக்கும் ஏராளமான செய்திகள் வந்து சேர்கின்றன. அந்தச் செய்திகளைப் படிக்கும் ‘வாசகர்’ நிலையிலிருந்து, செய்தியை உருவாக்கி உலகத்துக்கு வழங்கும் ‘செய்தியாளர்’ நிலைக்கு உங்களை உயர்த்த களம் அமைத்துத்தருகிறது இந்தத் திட்டம். விகடன் பத்திரிகையாளர் திட்டத்தில் பயிற்சி பெற்றவர்கள், பல துறைகளில் தங்களுக்கெனத் தனி முத்திரை பதித்து, வெற்றிப்பாதைகளில் பயணிக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில்நுட்பம் எனத் தாங்கள் தடம் பதிக்கும் அனைத்துத் துறைகளிலும் வெற்றியாளர்களாக வலம்வருகிறார்கள்.

வருங்காலப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறோம்... ஓர் எண்ணம்... ஓர் எழுத்து... ஓர் இயக்கம்

இதோ, இது உங்களுக்கான நேரம். இளமைக்கு ‘ஆ.வி.’, உண்மைக்கு ‘ஜூ.வி.’, பெண்மைக்கு ‘அவள்’, ஆன்மிகத்துக்கு ‘சக்தி’, பொருளுக்கு ‘நாணயம்’, பயணத்துக்கு ‘மோட்டார்’, வளமைக்கு ‘பசுமை’, இணையத்தில் ‘விகடன் டாட் காம்’, வைரல் களமான யூடியூபில் ஏராளமான சேனல்கள், சமூக ஊடங்களில் நிமிடத்தில் அப்டேட் என உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கின்றன விகடனின் கரங்கள். அவற்றைப் பற்றிக்கொண்டு இணைந்து பயணிக்க, இது ஓர் அற்புத வாய்ப்பு.

1.7.2004-க்கு முன் பிறந்த அனைத்துக் கல்லூரி மாணவ - மாணவியரும் இந்தத் திட்டத்தில் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ - மாணவியர், தற்போது (2021 - 2022) கல்லூரியில் படிப்பவராகவும், அடுத்த ஆண்டு

(2022 - 2023) கல்லூரிப் படிப்பைத் தொடர்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2021 - 2022-ம் ஆண்டில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பவர்களோ அல்லது கல்லூரியில் எந்தப் பிரிவிலும் இறுதி ஆண்டு படிப்பவர்களோ விண்ணப்பிக்க இயலாது. தபால் மூலம் கல்வி பயில்பவர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள இயலாது.

இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தாளைத் தமிழில் பூர்த்திசெய்து, கோரப்பட்டிருக்கும் இணைப்புகளோடு 31.03.2022-க்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும் (விண்ணப்பத்தைப் பிரதி எடுத்தும் பயன்படுத்தலாம்). தகவல் தொடர்புக்காக உங்களுடைய அலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அவசியம் தேவை. விண்ணப்பம் குறித்த முழு விவரங்களை, அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.

ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர் புகுந்து விளையாடும் த்ரில்லான களம் இது. உற்சாகமாகக் களமிறங்க உங்களையும் அழைக்கிறோம். வாழ்த்துகள்!

- ஆசிரியர்

வருங்காலப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறோம்... ஓர் எண்ணம்... ஓர் எழுத்து... ஓர் இயக்கம்

ஆன்லைனில் விண்ணப்பிக்க: student.vikatan.com மொபைலில் விண்ணப்பிக்க உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த QR Code-ஐ ஸ்கேன் செய்யவும்.

வருங்காலப் பத்திரிகையாளர்களை வரவேற்கிறோம்... ஓர் எண்ணம்... ஓர் எழுத்து... ஓர் இயக்கம்

விண்ணப்பத்துடன் தவறாமல் அனுப்பவேண்டியவை:

(அ) கீழ்க்காணும் 8 தலைப்புகளில் ஏதாவது ஒரு தலைப்பைத் தேர்ந்தெடுத்து, உங்களது சொந்தக் கையெழுத்தில், தெளிவாகப் புரியும்படி தமிழில் கட்டுரையாக எழுத வேண்டும். கட்டுரை நான்கு பக்கங்களுக்கு மேல் இருக்கக் கூடாது. தாளின் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுதவும். இணையத்திலிருந்தோ, வேறு புத்தகத்திலிருந்தோ எடுத்து எழுதக் கூடாது. அப்படி எழுதியது கண்டறியப்பட்டால், உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

1. இந்தியாவில் இதுவரை 18-ஆக இருந்துவந்த பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த, மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இது சாதகமா, பாதகமா? உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

2. கைநிறையப் பணம் கிடைத்தாலும், நகர வாழ்க்கையைத் துறந்துவிட்டு, கிராம வாழ்க்கைக்குத் திரும்பியவர் உங்கள் பகுதியிலிருந்தால், அவரின் அனுபவத்தைக் கட்டுரையாக எழுதுங்கள்.

3. கொரோனாவுக்குப் பிறகு சமூக, பொருளாதார வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கும் நல்ல விஷயங்கள், கெட்ட விஷயங்கள் என்னென்ன? தனிப்பட்ட மனிதர்களின் அனுபவங்களைக் கேட்டுச் சேர்க்கவும்.

4. வீட்டுக்கு ஒருவர் யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறார்கள். உங்களுக்குப் பிடித்த சேனல்கள், உங்கள் நண்பர்களின் யூடியூப் சேனல்கள், யூடியூபர்களின் அட்ராசிட்டி குறித்த ஜாலி கட்டுரை.

5. உங்கள் பகுதியில் உள்ள புகழ்பெற்ற நாட்டார் தெய்வம், கோயில், வழிபாட்டு முறைகள், அது குறித்த வாய்மொழிக்கதைகள், நம்பிக்கைகள் குறித்து பக்தி மணம் கமழும் கட்டுரையாக எழுதுங்களேன்

6. நீங்கள் பார்க்கும் / உங்களுக்குக் கிடைக்கும் கார்/பைக் எதுவானாலும், அது குறித்து மோட்டார் விகடன் ஸ்டைலில் ஒரு டெஸ்ட் டிரைவ் அல்லது ரிவ்யூ ரிப்போர்ட் எழுதுங்கள்?

7. ஃபேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களுக்கு சென்சார் அவசியமா? சென்சார் கருத்துச்சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கிறது, சிறுகுழந்தைகளும் புழங்கும் சமூக வலைதளங்களுக்குக் கட்டுப்பாடு அவசியம் என்ற இரு வேறு குரல்களில் நீங்கள் எந்தப் பக்கம்? வலுவான வாதங்களுடன் ஒரு கட்டுரை....

8. ‘விசாரணை’ முதல் ‘ஜெய் பீம்’ வரை காவல்துறையின் மனித உரிமைமீறல்கள் குறித்துத் திரைப்படங்கள் வெளியாகும் காலமிது. ஆட்சிகள் மாறினாலும் மாறாத காவல்துறை, விளிம்புநிலை மக்கள் குறித்த காவல்துறையின் அணுகுமுறை, அதற்குப் பின்னிருக்கும் சமூக உளவியல், நீதிமன்றத் தீர்ப்புகள், அரசுகளின் நடவடிக்கைகள், தொலைநோக்குத் திட்டங்கள் ஆகியவை குறித்த பார்வைகளை முன்வைத்து ஒரு கட்டுரை எழுதுங்கள்.

(ஆ) புகைப்படத்துறையில் மட்டும் பயிற்சிபெற விரும்பும் மாணவ - மாணவியர், இந்தக் கட்டுரையை அனுப்பத் தேவை யில்லை. அதற்கு பதிலாக, எதிர்வரும் நாள்களில், உங்கள் பகுதியில் நடக்கும் ஏதாவது ஒரு சம்பவத்தைப் படங்களாக, வீடியோவாக எடுத்து, அவற்றுக்கான குறிப்புகளோடு அனுப்புங்கள். ஒவ்வொரு புகைப்படத்தின் பின்புறமும் உங்களின் பெயரையும் முகவரியையும் குறிப்பிட வேண்டும். சி.டி-ஆகவும் அனுப்பலாம்.

(இ) ‘நிருபர் + புகைப்படக்காரர்’ பிரிவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் மேற்கூறிய (அ, ஆ) இரண்டையும் செய்து அனுப்ப வேண்டும்.

(ஈ) வீடியோ எடிட்டர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நிகழ்ச்சித் தொகுப்பாளர் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள், தாங்கள் பங்களித்த வீடியோக்களை சி.டி/டி.வி.டி/பென் ட்ரைவ் வடிவில் அனுப்ப வேண்டும் (இதே விண்ணப்பத்தை ஆன்லைனில் பூர்த்திசெய்தால், அதற்கான லிங்க்குகளை (Link) குறிப்பிட்டால் போதும்).

 வீடியோ எடிட்டர், நிகழ்ச்சித் தயாரிப்பாளர் பிரிவுகளுக்கு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் படிப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இந்தத் திட்டத்தில் பங்குபெற விரும்பும் மாணவ - மாணவியர், விண்ணப்பத்தாளை உண்மையாகவும் முழுமையாகவும் பூர்த்திசெய்து,

31.03.2022-க்குள் எங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். எந்தக் காரணம் கொண்டும் கட்டுரைகளையும் புகைப்படங்களையும் திருப்பி அனுப்ப இயலாது. அஞ்சல்தலைகளை இணைக்கத் தேவையில்லை. இந்தத் திட்டம் சம்பந்தமாக எந்தக் கடிதப் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது.

அடுத்தகட்டமாக சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சி, திருவாரூர், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஒன்பது ஊர்களில் எழுத்துத் தேர்வு நடக்கும். அது குறித்த தகவல் தங்களுக்குக் கடிதம் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும். முதற் கட்டத்தில் தேர்வுபெறும் மாணவமணிகள், மேற்கண்ட ஊர்களில் ஏதாவது ஒன்றில் தேர்வு எழுத அழைக்கப்படுவார்கள். எங்களிடமிருந்து எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள், முதற் கட்டப் பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம், ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை, சென்னை  -  600 002.