சினிமா
கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் - கூட்டுப்பயிற்சி முகாம் 2021-22

மாணவப் பத்திரிகையாளர்களுடன் விகடன் நிர்வாக இயக்குநர்
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவப் பத்திரிகையாளர்களுடன் விகடன் நிர்வாக இயக்குநர்

நவம்பர் 27,28

நூற்றாண்டை நெருங்கும் `விகடன்’ பாரம்பர்யத்தின் பெருமைமிகு தடங்களில் ஒன்று, ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்.’ இந்த ஆண்டு 2,234 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களிலிருந்து பல கட்டத் தேர்வுகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட 53 பேர், ‘ஸ்மார்ட் பத்திரிகையாளர்’களாக ஊடக உலகில் நுழைந்திருக்கின்றனர்.

இந்த மாணவப் பத்திரிகையாளர்களுக்கான இரண்டுநாள் கூட்டுப் பயிற்சி முகாம், சென்னையில் நவம்பர் 27, 28 ஆகிய தேதிகளில் துடிப்பும் களிப்புமாக நடந்தது.

வானிலை ஆய்வு மையத்தில்...
வானிலை ஆய்வு மையத்தில்...

முதல் நிகழ்வாக, ‘விகடன்' குழுமத்துக்குள் இணைந்த கடைக்குட்டிச் சிங்கங்களுக்குத் தனது அறிமுக உரையின் மூலம் ஆக்கமும் ஊக்கமும் அளித்தார், விகடன் குழும நிர்வாக இயக்குநரும் ‘ஆனந்த விகடன்’ ஆசிரியருமான பா. சீனிவாசன். இத்திட்டத்தின் முக்கியத்துவம், இயங்குமுறை, மற்றும் பின்பற்றவேண்டிய நெறிமுறைகள் குறித்துப் பேசியவர், ஒரு சம்பவத்தை அல்லது பிரச்னையைச் செய்தியாக்கும்போது கவனிக்கவேண்டிய அம்சங்கள், செய்தியின் உண்மைத் தன்மையை நுணுக்கமாக ஆராய்வது, பாரபட்சமின்றி செய்தியை அணுகும் விதம், கல்லூரிப் படிப்புக்கும் பத்திரிகைப் பணிக்குமான நேரத்தைப் பகிர்ந்துகொள்ளும் முறை எனப் பல அம்சங்களை விளக்கினார்.

மெட்ரோ தலைமை அலுவலகத்தில்...
மெட்ரோ தலைமை அலுவலகத்தில்...

‘இன்றைய ஊடகம்!’ என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினார் ‘டைம்ஸ் நவ்’ செய்தித் தொலைக்காட்சியின் துணை ஆசிரியர் ஷபீர் அகமது. செய்தி வழங்கும் இடத்திலுள்ள பத்திரிகையாளர்கள், தங்களைச் சுற்றி நடப்பவற்றைத் துல்லியமாக அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை சமீபத்திய உதாரணங்களுடன் விளக்கினார். ‘‘விஷயங்களைத் தெரிந்துகொள்வதில் உள்ள இடையறாத ஆர்வமே ஊடகத்துறையில் தொடர்ந்து இயங்குவதற்கு அடிப்படை’’ என்றார் அவர்.

‘சீரியஸ் டோனி’ல் இருந்த மாணவர்களைக் கொஞ்சம் ‘சில் அவுட்’ செய்வதற்காகத் துள்ளலும் துடிப்புமாக வந்திறங்கினார் பிரபுதேவா. ரேபிட் ஃபயர் ரவுண்ட் போல் மாணவர்களின் சரமாரிக் கேள்விகளுக்கு, அவரது ஆட்டத்தைப் போலவே பதில்கள் அநாயாசமாக வந்துவிழுந்தன.

மாணவப் பத்திரிகையாளர்களுடன் விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்
மாணவப் பத்திரிகையாளர்களுடன் விகடன் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்

‘செய்தி... ஏன், எதற்கு எப்படி?’ என்ற தலைப்பில் செய்தி என்றால் என்ன, செய்தியைக் கண்டறிவது எப்படி, எவற்றையெல்லாம் செய்தியாக்குவது உள்ளிட்ட செய்திவழங்கலின் அடிப்படைகளை ‘ஆனந்த விகடன்’ இதழாசிரியர் ரீ.சிவக்குமாரும், ‘ஆனந்த விகடன்’ துணை நிர்வாக ஆசிரியர் வெ.நீலகண்டனும் விரிவாக எடுத்துரைத்தனர்.

‘விகடன்’ முன்னாள் மாணவப் பத்திரிகையாளரும், ‘ஜெய் பீம்' திரைப்படத்தின் இயக்குநருமான த.செ.ஞானவேல் ‘ஒரு செய்தி எப்படி சினிமா ஆனது?' என்ற தலைப்பில் மாணவர்களிடம் கலந்துரையாடினார். அவரது உரை ‘செய்தியின் கோணம்', ‘ஒரு செய்தி கலைப்படைப்பாக எப்படி மாறுகிறது’ என்ற இரண்டு விஷயங்களை மையப்படுத்தியிருந்தது.

முதல் நாளின் இறுதி நிகழ்வாக ‘ஸ்பாட் விசிட்.’ மாணவர்கள் 7 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, தலைமைச் செயலகம், மெட்ரோ ரயில் அலுவலகம், வானிலை மையம், அறப்போர் இயக்க அலுவலகம், ‘தமிழும் சரஸ்வதியும்’ சீரியல் படப்பிடிப்புத் தளம், பிராட்வே ஆகிய இடங்களுக்கும், நடிகையும் பா.ஜ.க தேசிய செயற்குழுவின் சிறப்பு அழைப்பாளருமான குஷ்புவைப் பேட்டி எடுக்க அவரது இல்லத்துக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்துச் சென்றனர்.

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் - கூட்டுப்பயிற்சி முகாம் 2021-22

சென்னை வானிலை ஆய்வு மையம் சென்ற மாணவர்கள் அங்கு தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரனைச் சந்தித்தனர். வானிலை நிலவரத்தைக் கணிக்கும் விதம், அதை மக்களுக்கும் அரசுக்கும் கொண்டு சேர்க்கும் முறைகள் குறித்து நேரடியாக விளக்கிய பாலச்சந்திரன் மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார். `சென்னை மெட்ரோ’ தலைமை அலுவலகத்தில் மாணவ நிருபர்களுக்கு, மெட்ரோ ரயில் நிறுவனம் பற்றி விளக்கிய மூத்த அதிகாரிகள், 10 நிமிட குறும்படம் ஒன்றையும் போட்டுக் காட்டினர். பின்னர் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் சென்று, அதன் செயல்பாடுகளை விளக்கினர். டெப்போவில் ரயில்கள் எப்படி இயங்குகின்றன என்பதை விவரித்த அதிகாரிகள், திருமங்கலம் ரயில் நிலையம் வரை மாணவ நிருபர்களை ரயிலில் அழைத்துச் சென்று பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்தார்கள்.

இரண்டாம் நாள் முதல் அமர்வில், ‘எது செய்தி’ என்ற தலைப்பில் ‘ஜூனியர் விகடன்’ இதழாசிரியர் வெய்யில் முத்து, செய்திகளைக் கண்டறிவது குறித்து செய்தித்தாள்களை முதன்மையாகக் கொண்டு விளக்கினார். ‘தவறின்றித் தமிழ் எழுதலாம்!’ என்ற தலைப்பில் ‘ஆனந்த விகடன்’ இணையாசிரியர் தி.முருகன், பிழையின்றி எழுதும் முறையை மாணவர்களுக்கு விளக்கினார். Mobile journalism நுட்பங்களை புராடக்ட் மேனேஜர் மு.நியாஸ் அகமது, ‘ஆனந்த விகடன்’ புகைப்படக்காரர் தே.அசோக்குமார் ஆகியோர் அறிமுகப் படுத்தினர்.

ஒரு செய்தியைப் புகைப்படமாகவும், காணொலியாகவும் வழங்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் புகைப்படம் மற்றும் வீடியோ டீம் தலைவர் கே.கார்த்திகேயன், முதன்மைப் புகைப்படக்காரர் தி.விஜய் விளக்கினர். ‘நீங்களும் ஆகலாம் VJ' என ‘The Imperfect Show’ தொகுப்பாளர்கள் ஆர்.சரண், நா.சிபிச்சக்கரவர்த்தி மற்றும் ‘Elangovan Explains’ செ.த.இளங்கோவன் ஆகியோர் மாணவர்களுக்குச் செயல்முறை விளக்கம் அளித்தனர். வீடியோ எடிட்டிங் குறித்து அசிஸ்டென்ட் சேனல் ஹெட் ஹசன் ஹபீஸ், வீடியோ எடிட்டர் கே.செந்தில்குமார் ஆகியோர் விளக்கினர்.

விகடன் இணையதளத்துக்குச் செய்திவழங்கல் குறித்து, ‘ஜூனியர் விகடன்’ முதன்மைப் பொறுப்பாசிரியர் ஐ.பிரிட்டோ பேசினார். ஒரு பத்திரிகையின் சோஷியல் மீடியா பக்கம் எப்படி இயங்குகிறது என்பதை சோஷியல் மீடியா சீனியர் எடிட்டர் ம.காசி விஸ்வநாதன், ஆர்.எஸ்.வெங்கடேஷ் ஆகியோர் விளக்கினர்.

முகாமின் முக்கிய அம்சங்களில் ஒன்றான, சீனியர் மாணவப் பத்திரிகையாளர்களுடனான புதிய மாணவர்களின் கலந்துரையாடல். பா.கவின், சே.பாலாஜி, மௌரீஷ், ஷிவானி மரியதங்கம், கற்பகவள்ளி, ஆண்டனி விஜய் என சீனியர் மாணவப் பத்திரிகையாளர்கள் தங்கள் அனுபவங்களை ஜூனியர்களுக்குப் பகிர்ந்தனர்.

வாசகருக்கு ஒரு கட்டுரையில் எது தேவை என்பது குறித்து ‘Utility journalism’ என்ற தலைப்பில் பேசினார் ‘அவள் விகடன்’ முதன்மைப் பொறுப்பாசிரியர் பி.கார்க்கி; தகவல்களின் காலகட்டத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை ஒரு பத்திரிகையாளர் எப்படியெல்லாம் பயன்படுத்த முடியும் என்பது குறித்து அறப்போர் இயக்கத்தின் மா.ராதாகிருஷ்ணன் விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். Data journalism குறித்து, பல்வேறு சுவாரஸ்யமான உதாரணங்களுடன் விளக்கினார் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் மூத்த நிருபர் விக்னேஷ் ராதாகிருஷ்ணன்.

விகடன் மாணவர் திட்ட ஒருங்கிணைப்பாளர் கா.பாலமுருகன் ‘சந்தேகம் களைதல்’ என்னும் தலைப்பில் மாணவப் பத்திரிகையாளர்களின் அடிப்படை சந்தேகங்கள் குறித்து விளக்கமளிக்க, பயிற்சி முகாம் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. ஒரு கையில் பேனாவும், மறுகையில் ஸ்மார்ட்போனுமாக, களத்தில் இறங்கும் வேட்கையோடு ‘ஸ்மார்ட் பத்திரிகையாளர்கள்’ தங்கள் ஊர்களுக்குத் திரும்பினர்!