அரசியல்
சமூகம்
Published:Updated:

பட்டாசாகத் தொடங்கிய மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்!

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம் - பயிற்சி முகாம் - 2019

ட்டாசாகத் தொடங்கியது 2019 - 2020-ம் ஆண்டுக்கான விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம். இதில் பல கட்ட தேர்வுகளுக்குப் பிறகு 57 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். இவர்களுக்கு மூன்று நாள் பயிற்சி முகாம், ஜூலை 19 முதல் 21-ம் தேதி வரை சென்னை தி.நகர், செவாலியே சிவாஜி சாலையில் உள்ள மீனாட்சி கல்யாண மண்ட பத்தில் நடந்தது. விகடன் குறித்த அறிமுகம், அடுத்த ஒரு வருடப் பயிற்சியில் மாணவர் நிருபர்கள் கற்றுக்கொள்ளக் கூடியவை என்னென்ன என்பது குறித்த விளக்க உரையுடன், ஆனந்த விகடன் ஆசிரியரும் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான பா.சீனிவாசன் நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.

நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன்,  தனுஷ்
நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், தனுஷ்

நிகழ்ச்சியில் பேசிய ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியின் ஷபீர் அகமது, ‘‘விகடனில் மாணவப் பத்திரிகையாளர்களாக இருந்தவர்கள் தற்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். பத்திரிகையாளர்களுக்குத் தேடல் மிக முக்கியம். அதுதான் மற்ற நிருபர்களில் இருந்து நம்மைப் பிரித்துக்காட்டும். பத்திரிகையாளர்களுக்கு நிச்சயம் சார்புநிலை இருக்கவேண்டும். அந்தச் சார்புநிலை மக்களுக்கானதாக இருக்கவேண்டும். நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஆற்றல் இருக்கிறது. அடையாளம் இருக்கிறது. நாம் கேட்கும் கேள்விகள் மறுநாள் தலைப்புச் செய்தியாக வேண்டும். நாம் கொடுக்கும் செய்திகளில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும். தரவுகளில் துல்லியம் இருக்க வேண்டும். நாம் எழுதும் ஒவ்வொரு வார்த்தைக்கும் நாம்தான் பொறுப்பு. நமது எழுத்துகள் மக்களைப் பாதிக்கும் வகையில் இருந்துவிடக் கூடாது. பத்திரிகையாளர் மனிதத்தன்மை மிக்கவராக இருப்பது முக்கியம்’’ என்றார்.

அடுத்து, ‘வி.ஐ.பி-க்களுடனான ஸ்பாட் விசிட்’ என்று மாணவர் நிருபர்களுக்குச் சொல்லப்பட, யாரெல்லாம் இருக்கும் என்று பரபரப்பாகினர். சஸ்பென்ஸ் முடிச்சை அவிழ்க்காமல், இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன், விஜய் ஆண்டனி மற்றும் பி.ஜே.பி தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோரைக் காண அழைத்துச் சென்றோம்.

விஜய் ஆண்டனியுடன்..., சந்தோஷ் நாராயணனுடன்...
விஜய் ஆண்டனியுடன்..., சந்தோஷ் நாராயணனுடன்...

தி.மு.க கூட்டணி சாத்தியமா, பெரியார் மண் பற்றிய பார்வை என்ன, சுப்பிரமணிய சுவாமியை எப்படிச் சமாளிக்கிறீர்கள், பெண் தலைவராக எதிர்கொள்ளும் அம்புகள்... என்று சரமாரியாக மாணவர் நிருபர்களிடம் இருந்து வந்தக் கேள்விக் கணைகளுக்குச் சளைக்காமல் பதில் அளித்தார் தமிழிசை. பி.ஜே.பி-யில் இணைவதற்கு முன் ராஜ் தொலைக்காட்சியில், ‘நீங்களும் பேச்சாளர் ஆகலாம்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த அனுபவத்தை அழகாக விவரித்த அந்த நிமிடங்களில் வீடியோ ஜாக்கியாகவே மாறியிருந்தார் தமிழிசை!

அடுத்ததாக மாணவ நிருபர்கள் சென்ற இடம் சென்னை வளசரவாக்கத்தில் இருக்கும் நாம் தமிழர் கட்சியின் அலுவலகம். அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் அரசியல், சாதி, சினிமா, சுற்றுச்சூழல் உட்பட பல்வேறு விஷயங்கள் தொடர்பாகக் கேள்விகள் எழுப்பினர் மாணவர் நிருபர்கள். சுற்றுச்சூழல் தொடர்பாக மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு சீமான் அளித்த பதில் இது...

சீமானுடன் சந்திப்பு,  தமிழிசையுடன் சந்திப்பு
சீமானுடன் சந்திப்பு, தமிழிசையுடன் சந்திப்பு

‘‘சமூகத்துக்காகப் போராடுபவர்களுக்கு ‘தேசத்துரோகி’, ‘ஆன்டி இந்தியன்’ போன்ற பட்டங்கள் இங்கு கட்டமைக்கப்படுகின்றன. தமிழ்நாட்டைக் குறிவைத்து பல நாசகரத் திட்டங்கள் கொண்டுவரப் படுகின்றன. மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, ஸ்டெர்லைட், கெயில் என எல்லா நாசகரத் திட்டங்களையும் இங்கு கொண்டு வருகிறார்கள். என்ன காரணம்? கேரளத்தில் நிறுவுவதற்குத் திட்டமிடப்பட்ட அணு உலைத் திட்டம், தமிழ்நாட்டுக்குக் கடத்தப்பட்டது. அது எப்படி? ஆற்று மணல் அள்ளுவதற்கு கேரளாவில் தடை இருக்கிறது. ஆனால், தடை இருக்கிற எல்லா மாநிலங்களுக்கும் தமிழ்நாட்டில் இருந்துதான் தடையில்லாமல் ஆற்று மணல் போகிறது. அது எப்படி? நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்தை இங்குதான் கொண்டுவர வேண்டுமா, இந்தியாவில் வேறு எங்குமே மலைகள் இல்லையா, இந்த ஆய்வைப் பிற மாநிலங்களில் செய்யாமல் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரக் காரணம் என்ன? தகப்பன் இல்லாத வீடு போல, தலைவன் இல்லாத நாடாக தமிழ்நாடு இருக்கிறது. அதனால்தான் இந்த நிலத்தை அழிக்கிறார்கள். தமிழ்த் தேசிய இன மக்கள் அரசியல் வலிமை பெற்று அதிகாரத்துக்கு வந்துவிட்டால், இந்த நாசகரத் திட்டங்கள் அனைத்தையும் துடைத்தெறிந்து விடுவோம்’’ என்றார்.

முகாமின் இரண்டாம் நாள் இன்னும் சுவராஸ்யம் கூடியிருந்தது. இளம் பட்டாளங்களின் ‘சமூக வலைதள ஸ்டார்’களான ‘புட் சட்னி’ ராஜ்மோகன், ‘பிளாக்‌ஷீப்’ விக்னேஷ் காந்த், ‘ஆர்ஜே’ ஆனந்தி, ‘ஃபைனலி’ பரத் ஆகியோர் பயிற்சி முகாமுக்கு வருகை தந்திருந்தனர். திரைப்பட இயக்குநர் பா.இரஞ்சித் மீதான ராஜ்மோகனின் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “ராஜராஜ சோழன் குறித்து நான் பேசிய வீடியோ, இரஞ்சித் மீதான விமர்சனம் அல்ல, அவர் சொன்னதில் 70 சதவிகிதம் உண்மை உள்ளது. ஆனால், இந்த உரையாடல் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம்’’ என்றார்.

ஷபீர் அகமது, எஸ்.ராமகிருஷ்ணன், விக்னேஷ் காந்த், ராஜ்மோகன், ஆனந்தி, பரத்
ஷபீர் அகமது, எஸ்.ராமகிருஷ்ணன், விக்னேஷ் காந்த், ராஜ்மோகன், ஆனந்தி, பரத்

விகடனின் முன்னாள் மாணவர் பத்திரிகை யாளர், இந்நாள் சாகித்ய அகாடமி விருதாளர் என்கிற அறிமுகத்துடன் மேடை ஏற்றப்பட்டார் எஸ்.ராமகிருஷ்ணன். ‘‘இசைப்பது, நடனமாடுவது போல புத்தகம் வாசிப்பது ஒரு கலை. நான் புத்தகம் வாசிக்கத் தொடங்கியது தனி வரலாறு. என் பள்ளியில் பிள்ளைகள் எல்லோரையும் ஆசிரியர் பிரமிடு வரையச் சொன்னார். நான் மட்டும் வரையாமல் பிரமிடு ஏன் இப்படி இருக்கிறது, பிரமிடு உச்சியை எப்படிக் கட்டியிருப்பார்கள் என்று கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன். அதைப் பார்த்த ஆசிரியர், ‘உன் கேள்விகளுக்கு என்னிடம் பதில் கிடையாது. மதிப்பெண் வேண்டுமென்றால், பிரமிடு வரை. பதில் வேண்டுமென்றால், லைப்ரரி செல்’ என்றார். நான் நூலகத்தைத் தேர்ந் தெடுத்தேன். என் வாசிப்புப் பயணம் தொடங்கியது இப்படிதான். புத்தகங்கள்தான் சொற்கள் உங்களை வந்து சேரும் வழி’’ என்றார்.

அடுத்து, வெள்ளை வேட்டி சட்டையில் படு ஸ்டைலாக என்ட்ரி கொடுத்தார் நடிகர் தனுஷ். “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை உறுதி செய்திருக்கிறார். அவர் கட்சி தொடங்கினால் உங்களுக்கு என்ன பதவி?” என்று கேள்விக்கணை வந்து விழவும், “அதை அப்போ பார்த்துக்கலாம்.” என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னார் தனுஷ். ‘‘புதிய கல்விக்கொள்கை பற்றி உங்கள் கருத்து என்ன?’’ என ஒரு மாணவர் கேட்க, ‘‘நாம் நினைப்பதை மாணவர்களிடம் திணிக்காத வரை எதுவுமே நல்லதுதான்’’ என்று அக்கறையாகப் பதில் அளித்தார்.

 மு.ஹரீஷ், சே.ஹரிபாபு, இ.மோகன், ஆ.வள்ளி சௌத்ரி, பெ.ராகேஷ், மு.முத்துக்குமரன், ர.கண்ணன், சு.வெ.கிருஷ்ணமூர்த்தி
மு.ஹரீஷ், சே.ஹரிபாபு, இ.மோகன், ஆ.வள்ளி சௌத்ரி, பெ.ராகேஷ், மு.முத்துக்குமரன், ர.கண்ணன், சு.வெ.கிருஷ்ணமூர்த்தி

கடந்த ஆண்டு சிறப்பாகப் பங்களித்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, மூன்றாம் நாளில் நடைபெற்றது. தலைசிறந்த, மிகச்சிறந்த, சிறந்த மற்றும் முதல்வகுப்பு என்று நான்கு வகைகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவ பத்திரிகையாளர்களுக்கு நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். தலைசிறந்த, மிகச்சிறந்த மாணவப் பத்திரிகையாளர்களுக்கு தன் சார்பாக ரொக்கப் பரிசும் வழங்கிக் கூடுதலாக உற்சாகப்படுத்தினார்.

மாணவ பத்திரிகையாளர்களின் எழுத்து மற்றும் புகைப்படங்களை ஆண்டு முழுக்க தொடர்ந்து கவனித்து, அவர்களுக்கு மதிப்பெண் கொடுத்து சிறந்த மாணவப் பத்திரிகையாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கெல்லாம் பேனாவை பரிசளிப்பார் விகடன் வாசகர் பா.சத்திய நாராயணன். இந்த ஆண்டு தன்னுடைய மனைவியுடன் வந்திருந்து வாழ்த்தி மகிழ்ந்தார்.

ஆர்வத்துடன் களம்நோக்கிப் புறப்பட்டிருக்கும் இந்த ஆண்டுக்கான மாணவ பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துகள்!