சினிமா
தொடர்கள்
Published:Updated:

மாஸ் காட்டிய மாணவர்படை!

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்

விகடன் மாணவப் பத்திரிகையாளர் திட்டம்... பயிற்சி முகாம் - 2019

நூற்றாண்டை நெருங்கும் விகடன் பாரம்பர்யத்தின் பெருமைமிகு தடங்களில் ஒன்று, ‘விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்.’ ஒவ்வோராண்டும் பத்திரிகைப் பணிக்காகப் பட்டை தீட்டப்படும் பயிற்சி முகாம், இந்த ஆண்டும் மூன்று நாள்கள் சிறப்பாக நடைபெற்றது.

திரையுலகப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், இணையத்தைக் கலக்கும் டிரெண்டு செட்டர்கள் என வெவ்வேறு துறை சார்ந்த ஆளுமைகளுடனான சந்திப்பு ஒருபுறம், ஒரு செய்தியைக் கட்டுரையாக, புகைப்படமாக, வீடியோவாக என 360 டிகிரியில் எப்படிப் பதிவுசெய்வது என்கிற பயிற்சி மறுபுறம் என, ஊக்கமும் உற்சாகமுமாக மாணவர்களுக்கு நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சிய பயிற்சி முகாமின் கலக்கல் தருணங்கள் இதோ...

மாணவப் பத்திரிகையாளர்களுடன் ஆனந்த விகடன் ஆசிரியர் பா.சீனிவாசன்
மாணவப் பத்திரிகையாளர்களுடன் ஆனந்த விகடன் ஆசிரியர் பா.சீனிவாசன்

விகடன் குழுமத்துக்குள் இணைந்த கடைக் குட்டி சிங்கங்களுக்குத் தனது அறிமுக உரையின் மூலம் ஆக்கமும் ஊக்கமும் அளித்தார், விகடன் குழும நிர்வாக இயக்குநரும் ஆனந்த விகடன் ஆசிரியருமான பா.சீனிவாசன். ஒரு சம்பவத்தை அல்லது பிரச்னையைச் செய்தியாக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள், செய்தியின் உண்மைத் தன்மையை நுணுக்கமாக ஆராய்வது, பாரபட்சமின்றி செய்தியை அணுகும் விதம், இதழியல் பணிகளில் உள்ள சவால்களைச் சமாளிக்கும் விதம், கல்லூரிப் படிப்புக்கும் பத்திரிகைப் பணிக்குமான நேரத்தைப் பகிர்ந்துகொள்ளும் முறை எனப் பல அம்சங்களையும் விரிவாகத் தொட்டுச் சென்றது அவரது உரை.

‘ஊடகத்தின் கடமை’ என்ற தலைப்பில் மாணவர்களுடன் கலந்துரையாடினார் ‘டைம்ஸ் நவ்’ பத்திரிகையாளர் ஷபீர் அகமது. ஆனந்த விகடனின் தலையங்கம் எப்படி சமூகத்தின் குரலைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக உள்ளது என்பதை விளக்கியபோது, ‘ஒரு பாரம்பர்யமிக்க நிறுவனத்தில் தாங்களும் ஓர் அங்கமாக இணைந்திருக்கிறோம்’ என்ற மகிழ்ச்சி மின்னியது மாணவப் பத்திரிகையாளர்கள் விழிகளில். தவறிழைத்தவர் யாராக இருந்தாலும் துணிவுடன் அதை வெளிக்கொண்டு வருவது, தரவுகளுடன் ஒரு செய்தியை எப்படிக் கட்டுரையாக்குவது போன்றவை குறித்து விரிவாக விளக்கினார்.

மாஸ் காட்டிய மாணவர்படை!

`மிர்ச்சி’ ஷா, `மிர்ச்சி’ விஜய் இருவரும் வெல்கம் டு மீடியா என்ற தலைப்பில் தங்கள் அனுபவங்களை மெர்சலாகப் பகிர்ந்து, புதியவர்களை வெல்கம் செய்தனர்.

`மிர்ச்சி’ ஷா, `மிர்ச்சி’ விஜய்
`மிர்ச்சி’ ஷா, `மிர்ச்சி’ விஜய்

கலகலப்பும், கருத்துச் செறிவுமாக அமைந்தது ‘டிரெண்டிங் ப்ரோ’ நிகழ்வு. அச்சு ஊடகம் மட்டுமன்றி இணைய ஊடகங்களும் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. அதில் தங்களது முத்திரையை அழுத்தமாகப் பதிவுசெய்துகொண்டிருக்கும் ராஜ்மோகன், ‘ப்ளாக் ஷீப்’ விக்னேஷ்காந்த், பண்பலைத் தொகுப்பாளினி ஆனந்தி, ‘ஃபைனலி’ பாரத் ஆகியோர் இந்த அமர்வில் கலந்துகொண்டனர். நடந்து முடிந்த உலகக் கோப்பையில் தோனியின் ரன்-அவுட், பூமராங் போல நிகழ்ந்த கப்தில் ரன்-அவுட், ஒரே நாளில் வைரலான ‘பிஜிலி’ ரமேஷ், கோட் ஷூட் கூலிங் கிளாஸ் சகிதம் மாஸான போட்டோ சூட் மூலம் டிரெண்டிங்கில் நின்ற ராகுல் தாத்தா, ஒன் மேனாக நாடாளுமன்றம் செல்லும் ஓ.பி.ஆர், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் பதவி பெற்ற உதயநிதி ஸ்டாலின் எனத் தமிழகத்தின் சமீபத்திய டிரெண்டிங் மொமன்ட்கள் குறித்தும் கலக்கல் ரிப்ளை கொடுத்தனர் நான்கு நெட்டிசன்களும்.

பா.சத்தியநாராயணன்
பா.சத்தியநாராயணன்

மீடியாப் பயணம் குறித்து விக்னேஷ்காந்திடம் மாணவர்கள் கேள்வி எழுப்ப, “உருவ அமைப்பு, நிறம் ஆகியவற்றின் காரணமாக ஆரம்பத்தில் பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன. பிறகு, நானே சொந்தமாக ‘வெப் ரேடியோ’ ஆரம்பித்து நான் என்ன செய்ய நினைத்தேனோ, அதையெல்லாம் செய்தேன். எந்தக் காரணத்துக்காகப் புறக்கணிக்கிறார்களோ அதையே பாசிட்டிவ் ஆக்கி சாதித்துக் காட்ட வேண்டும்” என இளம் இதழியலாளர்களுக்கு ‘எனர்ஜி’ ஊட்டினார்.

ராஜ ராஜ சோழன் தொடங்கி ‘பாட்டில் கேப் சேலஞ்’ வரை சரவெடி வெடிக்கும் ராஜ்மோகன், விகடன் மாணவப் பத்திரிகையாளர்களாக இருந்து சமூகத்தின் ஆளுமைகளாக மாறியவர்கள் குறித்து ஒரு பெரிய பட்டியலிட்டார். கேட்கும்போதே முகாமில் இருந்தவர்களின் விழிகள் வியப்பால் விரிந்தன.

விக்னேஷ்காந்த்,  ராஜ்மோகன், ஆனந்தி, `ஃபைனலி’ பாரத்
விக்னேஷ்காந்த், ராஜ்மோகன், ஆனந்தி, `ஃபைனலி’ பாரத்

பெண்கள்மீது கட்டவிழ்க்கப்படும் வன்முறைச் சிந்தனை ஒழிய வேண்டும் என, பண்பலைத் தொகுப்பாளினி ஆனந்தி வலியுறுத்தினார். விகடன் விருதுகளின் முக்கியத்துவம் குறித்து ஃபைனலி பாரத் பேசினார். ஜாலியாக டிரெண்டாக மக்களிடம் எப்படிக் கருத்துகளைக் கொண்டு சேர்ப்பது என்பதை அந்த அமர்வு மூலம் மாணவர்கள் தெரிந்துகொண்டனர்.

ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் எவ்வளவு அவசியமானது என்பதையும், விகடனில் மாணவப் பத்திரிகையாளராகப் பயிற்சிபெற்ற தனது அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

வள்ளி சௌத்ரி .ஆ, சே.ஹரிபாபு, மு.முத்துக்குமரன், ஹரீஷ்.ம, ர.கண்ணன், பெ.ராகேஷ், கிருஷ்ணமூர்த்தி சு.வெ, மோகன்.இ
வள்ளி சௌத்ரி .ஆ, சே.ஹரிபாபு, மு.முத்துக்குமரன், ஹரீஷ்.ம, ர.கண்ணன், பெ.ராகேஷ், கிருஷ்ணமூர்த்தி சு.வெ, மோகன்.இ

“இசைப்பது, நடனமாடுவதுபோல புத்தகம் வாசிப்பதும் ஒரு கலை. நான் புத்தகம் வாசிக்கத் தொடங்கியது தனி வரலாறு. நான் படித்த பள்ளியில் மாணவர்களை பிரமிட் வரையச் சொன்னார் ஆசிரியர். நான் மட்டும் வரையாமல், பிரமிட் ஏன் இப்படி இருக்கிறது, பிரமிட் உச்சியை எப்படிக் கட்டியிருப்பார்கள் என வகை வகையாகக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தேன். அதைப் பார்த்த ஆசிரியர் ‘உன் கேள்விகளுக்கு என்னிடம் பதில் கிடையாது. மதிப்பெண் வேண்டுமென்றால் பிரமிட்டை வரை. பதில் வேண்டுமென்றால் நூலகம் போ’ என்றார். நான் நூலகத்தைத் தேர்ந்தெடுத்தேன். எனது வாசிப்புப் பயணம் தொடங்கியது இப்படித்தான். நான் மாணவப் பத்திரிகையாளராக இருந்தபோது அரசியல் எழுதவில்லை. சிறுகதைகள் எழுதினேன், கட்டுரைகள் எழுதினேன். என்னை விகடனில் ஊக்கப்படுத்தினார்கள். நான் எங்கு சென்றாலும் விகடன்தான் எனது குடும்பம்” என நெகிழ்ச்சியுடன் கூறினார்.

இந்த ஆண்டு ஒரு புதிய அனுபவமும் மாணவப் பத்திரிகையாளர்களுக்கு வாய்த்தது. பிரபலங்களை அவர்கள் இடத்துக்கே நேரடியாகச் சென்று நேர்காணல் செய்யும் வாய்ப்புதான் அது. தமிழிசை சௌந்தரராஜன், சீமான், இசையமைப்பாளர்கள் சந்தோஷ்நாராயணன், விஜய் ஆண்டனி ஆகியோரை மாணவப் பத்திரிகையாளர்கள் சந்தித்தார்கள்; பிரபலங்கள் மாணவர்களின் கேள்விகளைச் சந்தித்தார்கள்.

எஸ்.ராமகிருஷ்ணன்
எஸ்.ராமகிருஷ்ணன்

மூன்றாம் நாள் நிகழ்வில், கடந்த ஆண்டு சிறப்பாகப் பங்களித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. தலைசிறந்த, மிகச்சிறந்த, சிறந்த மற்றும் முதல்வகுப்பு என்று நான்கு வகைகளில் தேர்வு செய்யப்பட்ட மாணவப் பத்திரிகையாளர்களுக்கு ஆனந்த விகடன் ஆசிரியரும் விகடன் குழும நிர்வாக இயக்குநருமான பா.சீனிவாசன் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார். தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர்களாக தேர்வு செய்யப்பட்ட மு.முத்துக்குமரன், சே. ஹரிபாபு, சு.வெ.கிருஷ்ணமூர்த்தி, பெ.ராகேஷ், ஆ. வள்ளி சௌத்ரி, இ.மோகன், ர. கண்ணன் ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றிதழுடன் கேடயம் மற்றும் ரொக்கப் பரிசு ஆகியவற்றை வழங்கினார் பா.சீனிவாசன். விகடனின் நீண்டகால வாசகர்களில் ஒருவரான பா.சத்தியநாராயணன், 1983-ம் ஆண்டு தொடங்கி, விகடனில் சிறப்பான கட்டுரைகளை எழுதும் மாணவ நிருபர்களுக்குப் பரிசுகளை வழங்கிவருகிறார். இந்த ஆண்டும் அவர் அளித்த பரிசுகள், மாணவர்களின் திறமைக்கான மரியாதை.

ஷபீர் அஹமது
ஷபீர் அஹமது

பயிற்சி வகுப்பு, சீனியர்களின் வழிகாட்டுதல், பிரபலங்களின் பாராட்டு, பரிசு பெற்றவர்களின் நெகிழ்ச்சியான உணர்வுப்பதிவுகள் என விழா நிறைவு பெற்றது. இதழியல் பணியாற்ற தன்னைத் தயார்படுத்திக்கொண்டு உற்சாகத்துடன் கிளம்பியது விகடனின் புதிய படை!

சந்தோஷ் நாராயணனை மாணவ நிருபர்கள் சந்தித்தபோது...

இத்தனை வருடங்களில் உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பாராட்டுன்னு நீங்க நினைக்கிறது என்ன?

“15 வருடங்களுக்கு முன்னால், என் ஆல்பம் நல்லா இருக்குன்னு ரஹ்மான் சார் போன் பண்ணிப் பாராட்டினார். செம ஹேப்பி. நேரா ஹோட்டலுக்குப் போய் பரோட்டா சாப்பிட்டேன். ரோட்ல திமிரா நடந்தேன். அன்னைக்கு முழுக்க என் உதட்டுல புன்னகை இருந்துகிட்டே இருந்தது. நான் பார்த்து ரசிக்கிற ஒருத்தர்கிட்ட இருந்து வந்த பாராட்டுதான் என் ஆல் டைம் ஃபேவரைட்!”

சந்தோஷ் நாராயணன்
சந்தோஷ் நாராயணன்

இந்தப் பாட்டை நம்மளே பாடிடலாம். இந்தப் பாட்டை மத்த பாடகர்கள்கிட்ட கொடுக்கலாம்னு எப்படி முடிவெடுப்பீங்க?

“இந்தப் பாட்டு இப்படி இருக்கணும்னு ஒரு ஐடியா கொடுப்பேன். சில சமயம் அது ரொம்ப நாள் இயக்குநர்கள்கிட்டேயே இருக்கும். அதைக் கேட்டுக் கேட்டு அவங்களுக்குப் பழகிடும். நல்லா இருக்குன்னு நம்ப ஆரம்பிச்சுடுவாங்க. அப்படிதான் நான் பாடுறேன். யாரும் நீங்க பாடுங்கன்னு சொன்னதில்லை.”

‘ஜிப்ஸி’ படத்துல ‘very very bad’ பாட்டுல உங்களை ஜெயில்ல வெக்குற மாதிரி சீன் இருக்கும். அந்தப் படத்துக்கு இசையமைக்க காரணம் கதையா, உங்க அரசியல் பார்வையா?

“கதைக்காக மட்டும்தான். என் அரசியல் பார்வைக்கும் அந்தப் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை. சமூகத்துக்காக வெவ்வேறு விஷயங்கள்ல நல்லது செஞ்சவங்களை ஒரு ஃப்ரேமுக்குள்ள ராஜுமுருகன் கொண்டு வந்தார். அந்தப் பாடலும் வரிகளும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். நான் ஏத்துக்கிற விஷயங்களை மட்டும்தான் என் பாடல்ல வெப்பேன். ‘தேசாந்திரி’ ட்யூன் பதினேழு வருடங்களுக்கு முன் நான் கம்போஸ் பண்ணி வெச்சிருந்தது. அதை ராஜு முருகனுக்குக் காட்டினேன். அவருக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.”

சீமானுடன் ஓர் உரையாடல்...

“பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துவருகின்றன. இது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

“இன்றைக்கு சமூகமே குற்றச்சமூகமாக மாறிவிட்டது. வகுப்பறைகள் அறிவை வளர்க்கிற கருவறைகளாக இல்லாமல், வர்த்தக அறைகளாக மாறிவிட்டன. எந்தப் படிப்பு படித்தால், எந்த வேலைக்குப் போகலாம் என்பதுதான் இன்றைய கல்வியாக இருக்கிறது. தெருவுக்குத் தெரு படிப்பகம் இல்லை. தெருவுக்குத் தெரு குடிப்பகம் இருக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் 90 சதவிகிதம், மதுபோதையில் இருப்பவர்களால்தான் நடக்கின்றன. இதை, அடிப்படையிலிருந்து சரிசெய்ய வேண்டும். அதைக் கல்வியிலிருந்து செய்ய வேண்டும். மற்றொருபுறம் கடும் தண்டனை வழங்குவதன் மூலமாகவும் இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க முடியும்.”

சீமான்
சீமான்

“தலித்தியமும் தமிழ்த்தேசியமும் இணையும் வாய்ப்பு இல்லையா?”

“தலித்தியம் என்கிற ஒன்றே இல்லை. தமிழ்த்தேசியம் என்கிற ஒன்றுதான் இருக்கிறது. தெற்காசியா முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள் தமிழ் பேசக்கூடிய மக்கள் என்று ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர்களான டோனி ஜோசப்பும், ரிச்சர்டு மார்ட்டினும் ஆய்வுகளில் நிறுவியுள்ளனர். அண்ணல் அம்பேத்கர்கூட, இந்த நிலப்பரப்பு முழுவதும் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட நாகர்கள் பரவி வாழ்ந்தார்கள் என்கிறார். இப்போது கடைசியாக இந்த நிலப்பரப்பு சுருங்கி நம் காலடியில் இருந்தாலும்கூட, இங்கு வாழுகிற மக்கள் தமிழர்கள். தலித்தியம் என்றால், இந்தியா முழுவதும் உள்ள தலித்துகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். ஆனால், தங்கை அனிதா மரணத்துக்கு மாயாவதியோ, ராம்விலாஸ் பாஸ்வானோ வரவில்லையே!”

விஜய் ஆண்டனியோடு மாணவர்களின் கேள்வி-பதில் செஷன்.

“ `பிச்சைக்காரன்’, ‘கொலைகாரன்’, ‘சைத்தான்’ இப்படியெல்லாம் டைட்டில் உங்க படத்துக்கு வர நீங்கதான் காரணமா, உங்க இயக்குநர்களா? இப்படியெல்லாம் டைட்டில் வைக்க என்ன காரணம்?”

``நான்தான் இந்த டைட்டில் எல்லாம் வைக்கிறேன். அந்த டைட்டில் எல்லாம் ஈஸியா கிடைக்குதுல்ல. இங்க புரொட்யூசர் கவுன்சில்னு ஒண்ணு இருக்கு. அங்கதான் எல்லா டைட்டிலும் பதியணும். இப்போ ‘தங்கமகன்’னு ஒரு நல்ல டைட்டில் இருக்குன்னா, கண்டிப்பா யாராவது ஏற்கெனவே எடுத்திருப்பாங்க. ஆனா ‘பிச்சைக்காரன்’, ‘கொலைகாரன்’, இப்படியெல்லாம் டைட்டில் கேட்டதும் முதல்ல நம்மள ஏற இறங்கப் பார்ப்பாங்க. பார்த்துட்டு, கொடுத்துடுவாங்க. இதான் காரணம்.’’

விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி

“விஜய் ஆண்டனிக்கு எந்த மியூசிக் பிடிக்கும். இளையராஜா மியூசிக்கா, ராக்கா, இல்ல கண்டம்பரரி மியூசிக்கா?”

“காலைல இட்லி புடிக்கும். மத்தியானம் சாம்பார் புடிக்கும். நைட்டுக்கு தோச புடிக்கும். எல்லாம் மூடுக்கு ஏத்த மாதிரிதான்.”

“கடைசியா கேட்ட பாட்டு?”

“பியார் ப்ரேமா காதல் படத்துல சித் ஸ்ரீராம் பாடுன லவ் சாங்தான். ரொம்ப நல்லா இருந்துச்சு.”

தமிழிசை சௌந்தரராஜனோடு மாணவர்களின் உரையாடல்.

பா.ஜ.க இரண்டாம் முறையாக மத்தியில் ஆட்சி அமைத்திருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் வெற்றிபெற முடியவில்லையே ஏன்?

“தமிழ்நாட்டில் 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு, தேசியக் கட்சிகள் வளர முடியவில்லை. இந்த நேரத்தில் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பறவைக் குஞ்சு ஒன்று கீழே கிடக்கிறது. அங்கே வரும் இரண்டு பேரில் ஒருவன் அந்தப் பறவைக் குஞ்சை, அதன் கூட்டில் கொண்டு விட வேண்டும் என நினைக்கிறான். மற்றொருவன் அதை அபகரிக்க நினைக்கிறான். காப்பாற்ற நினைப்பவன் எவ்வளவோ நல்ல விஷயங்களைச் சொன்னபோதும், அபகரிக்க நினைப்பவன் பின்னால்தான் அந்தக் குஞ்சு செல்கிறது. இதைப் பார்க்கும் ஒருவர் கேட்கிறார், ‘ஏன் நல்லவர் பின் செல்லவில்லை?’ என்று. அதற்கு அவர், ‘அபகரித்துச் செல்பவர்களுக்கு அந்தக் குஞ்சின் பாஷை தெரிந்திருக்கிறது. அதனால்தான் அது செல்கிறது’ என்கிறார். அது ஓட்டு பாஷையாகவும் இருக்கலாம்; நோட்டு பாஷையாகவும் இருக்கலாம்.”

தமிழிசை சௌந்தரராஜன்
தமிழிசை சௌந்தரராஜன்

“தமிழ்நாட்டைப் பெரியார் மண் என்று சிலர் சொல்வதை மறுப்பவர்கள் நீங்கள், பெரியாரைப் பற்றி உங்களின் கருத்து என்ன?”

“பெரியாரின் உழைப்பை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அவரால் மட்டுமே பெண்களுக்கு உரிமை கிடைத்தது; அவரால் மட்டுமே சமூக நீதி கிடைத்தது என்பதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த மண் அதற்கு முன்பே சமத்துவத்திற்கான மண்தான். அந்தக் காலத்திலேயே மைத்ரேயி போன்ற பெண் கவிஞர்கள் இருந்திருக்கிறார்கள். ராமர், ராமேஸ்வரத்தில் யாகம் செய்யும்போதுகூட சீதையைப் போல உருவத்தைப் பிடித்து வைத்தே யாகம் செய்தார்.”