கட்டுரைகள்
Published:Updated:

மருத்துவத்தை மதிக்கிறோமா?

தலையங்கம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலையங்கம்

தலையங்கம்

`உலகின் மருந்து தலைநகரம்’ என அறியப்படுகிறது இந்தியா. இந்தியாவில் தயாராகும் மருந்துகள் தரமாகவும், விலை மலிவாகவும் இருப்பதால் உலக நாடுகள் ஆர்வத்துடன் வாங்குகின்றன. வறிய ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தருவதற்காக உலக சுகாதார நிறுவனமே இந்திய மருந்து நிறுவனங்களிடமிருந்துதான் மருந்துகளை வாங்குகிறது. இதனால் இந்திய மருந்து நிறுவனங்கள் செழித்து வளர்கின்றன.

இன்னொரு பக்கம், மருத்துவச் சுற்றுலாவுக்கு உகந்த இடமாகவும் இந்தியா கருதப்படுகிறது. வளர்ந்த ஐரோப்பிய நாடுகளைவிடவும், பல மடங்கு குறைவான கட்டணத்தில் இந்திய மருத்துவமனைகள் சிறந்த சேவைகளை வழங்குகின்றன. அதனால் இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொண்டு, அப்படியே ஊர் சுற்றிப் பார்க்கவும் ஆர்வம் காட்டுகின்றனர் வெளிநாட்டினர்.

ஆனால், இந்தியாவில் ஆண்டுதோறும் பிறக்கும் 2 கோடியே 60 லட்சம் குழந்தைகளுக்கும் தரமான மருத்துவ வசதியை நாம் உறுதி செய்கிறோமா என்றால், அதுதான் இல்லை. அரசாங்கம் இலவசமாக அளிக்கும் தடுப்பூசிகளைத் தாண்டி இதர தடுப்பு மருந்துகளையும் அளித்து, ஒரு குழந்தைக்குப் பாதுகாப்பு அளிக்க 1,600 ரூபாய் குறைந்தபட்சம் தேவை. இதைக்கூடச் செலவழிக்க முடியாத குடும்பங்கள் இருக்கின்றன.

மத்திய அரசு 2023-24 பட்ஜெட்டில் சுகாதாரத்துக்காக ஒதுக்கியிருக்கும் தொகை, ரூ. 86,175 கோடி. தோராயமாகக் கணக்கிட்டால், ஒவ்வொரு குடிமகனுக்கும் 615 ரூபாய். இந்தியர்கள் ஒவ்வோர் ஆண்டும் மருத்துவத்துக்காகச் செலவிடும் தொகை சுமார் 8 லட்சம் கோடி ரூபாய். இதில் மத்திய அரசு இப்படிக் குறைவாக ஒதுக்குவது, அடித்தட்டு மக்கள், முதியோர் போன்றவர்களுக்குத் தரமான மருத்துவ சிகிச்சைகளை சாத்தியமில்லாமல் செய்துவிடுகிறது. பலரும் மருத்துவச் செலவுகளுக்காகக் கடன் வாங்கவேண்டிய நிர்பந்தத்துக்கு ஆளாகிறார்கள். அதிகரிக்கும் மருத்துவச் செலவுகளால் உலகில் ஒவ்வோர் ஆண்டும் 5.5 கோடி பேர் மிகக்கொடிய வறுமைக்குள் தள்ளப்படுகிறார்கள், இவர்களில் இந்தியர்களே அதிகம் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிவரம் அதிர்ச்சி தருகிறது.

நம்மைவிட வறிய நாடுகளான தாய்லாந்து, வியட்நாம், இலங்கை போன்றவை மருத்துவத்துக்கு இதைவிட அதிகம் செலவு செய்கின்றன.

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்கள் பெருகியிருக்கும் இந்தக் காலத்தில் மருத்துவச் செலவு என்பது பல குடும்பங்களுக்கு பெரும் நெருக்கடியாக மாறியிருக்கிறது. கிராமங்களை ஆரம்ப சுகாதார நிலையங்கள் பார்த்துக்கொள்ள, நகர்ப்புற ஏழைகளுக்கான சுகாதார வசதிகள் குறைவாக இருக்கின்றன. இதையெல்லாம் அரசு கவனித்து பட்ஜெட்டைத் திட்டமிடுவதே நியாயமாக இருக்கும்.