மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, ஆர்ப்பாட்டம்... திறமைக்கு மரியாதை தந்த ஆனந்த விகடன் சினிமா விருதுகள்!

``புதுமுகங்களைக் கொண்டு படம் எடுத்து 80 சர்வ தேச விருதுகளை வெல்வது சாதாரண விஷயமல்ல’’ என்று `தேன்' படக்குழுவைப் பாராட்டினார் கிருத்திகா.
திறமைக்கு மரியாதை தரும் `ஆனந்த விகடன்' சினிமா விருதுகள் திருவிழா, மார்ச் 30 அன்று சென்னை வர்த்தக மையத்தில் மிகப்பிரமாண்டமாக, ட்விட்டரில் இந்திய அளவில் டிரெண்டாகும் அளவுக்கு நடைபெற்றது.
கொரோனா காரணமாக 2020 மற்றும் 2021 ஆண்டு களுக்கான விருதுகள் வழங்கப்படாமல் இருந்த நிலை யில் 2022-ம் ஆண்டுக்கான விருதுகளையும் சேர்த்து, 60-க்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்களுக்கு வழங்கப் பட்டது. மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, ஆர்ப்பாட்டம் என உணர்வு களின் சங்கமமாக நடந்த இந்தத் திருவிழாவில், பெண் கலைஞர்களின் பங்களிப்புக்கும் குறைவில்லை.
இயக்குநர் கிருத்திகா உதயநிதியிடம் 2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்ற அபர்ணதி, “இதுவரை 20 சர்வதேச விருதுகளை ‘தேன்’ படத்துக்காக நான் வாங்கியிருந்தாலும், தமிழில் வாங்கும் முதல் விருது இது. இந்த விருதை 10 தேசிய விருதுகளுக்குச் சமமாகப் பார்க்கிறேன்’’ என்றார்.
``புதுமுகங்களைக் கொண்டு படம் எடுத்து 80 சர்வ தேச விருதுகளை வெல்வது சாதாரண விஷயமல்ல’’ என்று `தேன்' படக்குழுவைப் பாராட்டினார் கிருத்திகா.
அடுத்து, கிருத்திகா உதயநிதியிடம் 2020-21-ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியர் விருதைப் பெற்றார் கவிஞர் தாமரை. ‘‘நான் விகடனில் மாணவ நிருபராக இருந்தேன். ஆதலால் என் குடும்பத்திலிருந்து விருது பெற்றதாக உணர்கிறேன்’’ என்ற தாமரை, ‘`பெரிதாக பயணம் செய்யாத, பயணத்தைத் தவிர்க்கிற என்னிடம் ஒரு பயணப் பாடலை எழுதச் சொன்னார்கள். ஆனால், என்னால் அதைச் செய்ய முடிந்தது. அதற்கு காரணம் எதை நான் இழந்தேனோ, அதை என் எழுத்தின் மூலம் அடைந்ததுதான்” என்றபோது அரங்கம் ஆர்ப்பரித்தது.
இயக்குநர் எழில் இடமிருந்து 2020-21-ம் ஆண்டின் சிறந்த வெப் சீரிஸ் விருதை ‘நவம்பர் ஸ்டோரி’க்காக இயக்குநர் இந்திரா சுப்ரமணியன், ஆனந்த விகடன் புரொடக்ஷன் நிறுவனத்தின் நிர்வாகிகள் ராதா, ராதிகா சீனிவாசன் ஆகியோர் பெற்றனர். ‘‘விகடன் நிறுவனத்தின் முதல் வெப் சீரிஸ்... எப்படி ரெஸ்பான்ஸ் இருக்கும் என்ற தயக்கம் இருந்தது. ஆனால், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததில் எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி’’ என்று ராதா சொல்ல... ‘‘கத்துக் குட்டியாக வந்தோம். விகடன் எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது. நாங்கள் செய்த தவறுகளைத் திருத்தி, கற்றுக்கொடுத்தது” என நெகிழ்ந்தார் இந்திரா சுப்ரமணியன்.
2020-21-ம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகி விருதை கிடாக்குழி மாரியம்மாள், சின்னத்திரை நடிகை ரக்க்ஷிதாவிடம் பெற்றுக்கொண்டார். ‘‘நாட்டுப்புறப் பாடல்கள் பலவற்றைப் பாடியிருக்கிறேன் ஆனால், என் முகம் வெளியில் தெரியவில்லை. `கர்ணன்’ படத்தில் பாடிய ஒரே ஒரு பாடல் என்னை பல மேடைகளில் ஏற வைத்துவிட்டது. இந்த விருதுக்கு நான் தேர்வாகி யுள்ளேன் என்று கூறியதை என்னால் நம்ப முடிய வில்லை. விகடன் இதழில் வெளியான பிறகே நம்பி னேன்” என்று கூறியதோடு ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடலைப் பாடி அசத்தினார்.

`ஜெய் பீம்’ படத்தில் செங்கேணி பாத்திரமாகவே வாழ்ந்து 2020-21-ம் ஆண்டின் சிறந்த நடிகைக்கான விருதை, நடிகை மீனாவின் கரங்களிலிருந்து பெற்ற லிஜோ மோள் ஜோஸ், “இது என் வாழ்நாளுக்குமான சினிமா” என்றார் உணர்ச்சிவயப்பட்டவராக.
2020-21-ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகை விருதை ‘சூரரைப் போற்று’ திரைப்படத்துக்காக குஷ்புவிடம் பெற்றுக்கொண்ட ஊர்வசி, ‘‘ஒரு கிளாஸ் மேட்டிடம் விருது வாங்குவதுபோல் உள்ளது. குஷ்புவை நான் குப்புசாமி என்றுதான் கூப்பிடுவேன். இப்போது அவர் சினிமா, அரசியல் என்று பெரும் துறைகளில் இருந்து தேசியக் குரலாக ஒலிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து, ‘‘இந்த விழாவில் சூர்யா கலந்துகொள்கிறார். அவர் முன்னிலையில் விருது வாங்க வர வேண்டும் என்பதற்காகவே வந்தேன்’’ என்ற ஊர்வசி, நடிகர் சூர்யாவைத் தேட, மின்னலாக மேடையேறினார் சூர்யா.
‘‘நான் ஊர்வசியை ‘பொடி’ என்றுதான் கூப்பிடுவேன். ‘சூரரைப் போற்று’ படத்தில் பொடியைப் பார்த்தபோது மிகவும் பெருமையாக இருந்தது. ஊர்வசி பொறாமை இல்லாத நடிகை” என்று கலகலப்பூட்டினார் குஷ்பு.
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா -ஆல்பம் `சத்யா நிறுவனம்' - ஜென்சன், அபர்ணதி, கிருத்திகா உதயநிதி...
கவிஞர் தாமரையிடம் 2022-ம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான விருதைப் பெற்றார் மது பாலகிருஷ்ணன். ‘மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே...’ என்கிற பாடலை இயற்றிய தாமரை, பாடல் பதிவாகும் போது நடந்த சுவாரஸ்யங்களைச் சொல்ல தமிழ் தெரியாவிட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளும் விதமாக தலையசைத்து, அந்தப் பாடலை தன் வசீகரக் குரலால் மது பாட அரங்கமே மெய்மறந்தது.
2022-ம் ஆண்டுக்கான சிறந்த ஆடை வடிவமைப்பு விருதை, பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனுவர்தன் வழங்க, `பொன்னியின் செல்வன்’ திரைப்படத்துக்காக ஏகா லக்கானி பெற்றுக் கொண்டார். படத்தில் நந்தினி கதாபாத்திரம் குறித்து வியந்தவர், அந்த கேரக்டருக்கேற்ற ஆடை குறித்த நுணுக்கங்களையும் இயக்குநர் மணி ரத்னம் குறித்த தன் பார்வையையும் பகிர்ந்தபோது வியந்தனர் சபையினர்.
2022-ம் ஆண்டுக்கான சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படத்துக்கான விருதை `லவ் டுடே’ படத்துக்காக இயக்குநர் சசி வழங்க, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பெற்றுக்கொண்டார். ``இந்தப் படம் தினமும் ஒரு மேஜிக்கை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிறைய படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது’’ என்று கைதட்டல்களை அள்ளினார் அர்ச்சனா.
2022-ம் ஆண்டுக்கான சிறந்த அறிமுக நடிகை விருதை, நடிகர் சிவகார்த்திகேயனிடம் பெற்றார் அதிதி ஷங்கர். கலகலப்பான, க்யூட்டான நடிப்பால் முதல் படமான `விருமனில்’ தமிழ்க் குடும்பங்களின் செல்லப் பிள்ளையாக மாறிய அதிதியை சிவகார்த்தி கேயன் பாராட்டித் தள்ள, எதிரே அமர்ந்திருந்த இயக் குநர் ஷங்கரின் முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.
ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழா -ஆல்பம்
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, காத்திரமான படைப்பாக வெளிவந்த ‘கார்கி’யில் மிகச்சிறப்பாக நடித்தற்காக, 2022-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருதை, சிவகார்த்திகேயனிடம் பெற்ற சாய் பல்லவி, “தமிழில் நான் பெறும் முதல் விருது’’ என்று நெகிழ்ந் தார்.
2022-ம் ஆண்டுக்கான சிறந்த குழந்தை நட் சத்திரம் விருதை நடிகர் விமலிடம் பெற்றுக்கொண்ட ஹியா தவே, குடும்பத்தினருடன் கலந்துகொண்டு தன் வெள்ளந்தி சிரிப்பால் அரங்கை அலங்கரித்தார்.
2022-ம் ஆண்டுக்கான சிறந்த குணச்சித்திர நடிகைக்கான விருதை, கலை இயக்குநர் தோட்டா தரணியிடமிருந்து `நட்சத்திரம் நகர்கிறது’ படத்துக்காக கீதா கைலாசம் பெற்றுக்கொண்டார்.
ஆரம்பத்தில் விருது வழங்குவதற்காக ரோகிணி மேடையேறியபோது, “பல்லக்கு தூக்கிகளை, பல்லக்கில் உட்காரவைத்து, திறமைக்கு மதிப் பளிக்கும் விழாவாக இதைப் பார்க்கிறேன்’’ என்று சொன்னது நூற்றுக்கு நூறு நிஜம் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது சினிமா விருதுகள் விழா!