கட்டுரைகள்
Published:Updated:

இயற்கை விவசாயத்தைப் போற்றும் விழா... பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ விசிட்!

கருணாஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கருணாஸ்

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள விவசாயிகளுக்கு வேளாண் கண்காட்சிகள் பேருதவியாக இருந்துவருகின்றன

விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள விவசாயிகளுக்கு வேளாண் கண்காட்சிகள் பேருதவியாக இருந்துவருகின்றன. இதற்காகத் தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புகள், குழுக்கள் வேளாண் கண்காட்சிகளை நடத்தி வருகின்றன. பசுமை விகடன் சார்பில் புதுமையாக கண்காட்சியுடன் கருத்தரங்கங்களும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், கடந்த ஏப்ரல் 28, 29, 30 ஆகிய மூன்று நாள்கள் திருச்சி கலையரங்கத்தில் `பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2023' என்ற பெயரில் வேளாண் கண்காட்சி நடைபெற்றது. திருச்சி, தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் இந்தக் கண்காட்சிக்கு வருகைபுரிந்தனர்.

கண்காட்சி
கண்காட்சி

விவசாயத்தின் அடிப்படை உழவு செய்தல். இதற்குப் பயன்படும் உழவுக் கருவிகள் கண்காட்சியின் முகப்பிலேயே இடம்பெற்றது. டிராக்டரில் பொருத்திப் பயன்படுத்தும் ரோட்டோவேட்டர், ஏர் கலப்பைகள் இடம் பெற்றிருந்தன. விதவிதமான மர, செடி வகைகளில் அழகுத் தாவரங்கள் நுழைவாயிலையே அலங்கரித்துவிட்டன. நுழைவாயிலின் உள்ளே நுழைந்தால் நாட்டுக் காய்கறி விதைகள் அரங்கு இடம் பெற்றிருந்தது. கூட்டமே குறையாத இந்த அரங்கில் வீட்டுத்தோட்டத்துக்கும் விவசாயத்துக்கும் விதைகளை விவசாயிகள் வாங்கிய வண்ணம் இருந்தனர். காரணம், காய்கறி விதைகள் எளிதில் முளைக்கக்கூடியவை. அதிக பயன்பாடு கொண்டவை.

கருணாஸ்
கருணாஸ்

சுருள்பாசியில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள், நாட்டுச்சர்க்கரையில் விதவிதமான தின்பண்டங்கள், சிறுதானியங்களில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் உள்ளிட்ட அரங்குகளைக் கடந்து சென்றால் மோட்டார் பம்ப்செட், நீர்மூழ்கி பம்ப்செட்கள் அமைந்திருந்தன. அதைக் கடந்து சென்றால் விவசாயப் பிரச்னைகளுக்குத் தீர்வு சொல்லும் அரங்கம். புதிதாக விவசாயத்தில் நுழைபவர்களுக்கு நிலத்தை எப்படித் தயார் செய்ய வேண்டும், என்ன பயிர் விதைக்கலாம், என்னென்ன இடுபொருள்களைக் கொடுக்கலாம், அறுவடை எப்படிச் செய்யலாம் என ஆலோசனைகள் வழங்கும் அரங்கு.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ.
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ.
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ.
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ.

சொட்டுநீர்ப் பாசனத்துக்கு உதவும் கருவிகள், ஒருவகையான திரவத்தைக் கழிவு நீரில் விட்டால் அதைச் சுத்தமாக்கும் பொருள்களைக் கொண்ட அரங்குகள் மிக விரிவாக அமைக்கப்பட்டிருந்தன. வாழையில் பிஸ்கெட், கேக், சிப்ஸ், இனிப்புகள் என விதவிதமான மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களைக் கொண்ட தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் அரங்கு பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. எப்போதும் இந்த அரங்கில் மக்கள் வாழை உணவுப் பொருள்களை சுவைத்துக்கொண்டு இருந்தனர்.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அரங்கில் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு, வெண்பன்றி வளர்ப்பு, முயல் வளர்ப்பு சம்பந்தமான புத்தகங்கள், துண்டுப் பிரசுரங்கள் இடம் பெற்றிருந்தன. மிகக்குறைந்த விலையில் பல்கலைக்கழகத்தின் நூல்களை விவசாயிகள் வாங்கிச் சென்றனர்.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ.
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ.
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ.
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ.

எளிய கையடக்கக் களையெடுக்கும் கருவிகள் இன்றைய விவசாயிகளின் அத்தியாவசியத் தேவையாக இருந்து வருகிறது. காய்கறிச் சாகுபடி, வாழைச் சாகுபடி, மலர்ச் சாகுபடி எனப் பலவற்றுக்கும் களையெடுக்கும் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆள்களை வைத்துக் களையெடுப்பதைவிட, இதுபோன்ற கருவிகளின் மூலம் எளிதாக பணிகளைச் செய்ய முடிகிறது. அடுத்து, சோலார் விளக்குப் பொறிகள் மூலம் பூச்சிகளைக் கவர்ந்திழுத்து மகசூல் பெருக்குவதற்கு உதவியாக இருக்கும் கருவிகள் இருந்தன. இதில் சிறியது, பெரியது என்று பல வடிவங்களிலும் இருந்தன. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஹெச்.டி.எப்.சி வங்கிகளின் அரங்குகளில் விவசாயக் கடன்கள் எப்படியெல்லாம் வாங்கலாம், என்னென்ன ஆவணங்கள் வேண்டும் உள்ளிட்டவற்றை விளக்கும் அரங்குகள் இடம் பெற்றிருந்தன. இயற்கை இடுபொருள் விற்பனை அரங்குகளும் இடம் பெற்றிருந்தன. இயற்கை விவசாயத்தையும், பாரம்பர்ய விதைகளையும் ஊக்குவிக்கும் விதமாக கண்காட்சியில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ.
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ.
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ.
பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ.

கண்காட்சியின் ஒரு பகுதியாக கருத்தரங்கும் நடைபெற்றது. வேளாண் வல்லுநர்கள், முன்னோடி இயற்கை விவசாயிகள், துறைசார் விஞ்ஞானிகள் எனப் பலர் பேசினர். நடிகரும் விவசாயியுமான கருணாஸ், வெள்ளாட்டுப்பால் உற்பத்தியில் லாபம் எடுத்துவரும் கர்நாடக விவசாயி ஸ்ரீனிவாஸாச்சார்யா, செம்மரச் சாகுபடி விவசாயி ஆர்.பி.கணேசன், முன்னோடி இயற்கை விவசாயி புளியங்குடி அந்தோணிசாமி, பூச்சி செல்வம் உள்ளிட்டோர் பல பயனுள்ள கருத்துரைகளை வழங்கினர். நிகழ்வில் ட்ரோன் செயல்விளக்கமும் அளிக்கப்பட்டது.

மூன்று நாள்களும் முழுமையான ஒரு விழாவாக இயற்கை விவசாயத்தைப் போற்றும் நிகழ்வாக விளங்கியது இந்த பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ.